வாளால் உடம்பில் வெட்டி நேர்த்திக்கடன்: உசிலம்பட்டியில் நடந்த விநோத திருவிழா!


திருவிழாவில் பக்தர்கள்

உசிலம்பட்டி அருகே வாளால் உடம்பில் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் விநோத திருவிழா இன்று நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள இ. கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் கொண்டாடும் ராமலிங்க சௌண்டம்மான் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு வைகாசி திருவிழா நேற்று தொடங்கி மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இரண்டாம் நாள் திருவிழாவான இன்று உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முருகன் கோயிலிலிருந்து சௌண்டம்மன் கோயிலுக்கு கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. இந்த கரகத்தை பூசாரி ஊர்வலமாக தலையில் சுமந்து வரும் போது வழி நெடுகிலும் துர்தேவதைகள் தடுத்து நிறுத்தும் எனவும், துர்தேவதைகளுக்கு ரத்தபழி கொடுத்து கரகத்தை எடுத்து வருவதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடம்பில் வாளால் வெட்டிக் கொண்டு ரத்தபழி கொடுப்பதால் துர்தேவதைகள் விலகிக் கொண்டு கரகத்தை எந்த இடையூறும் இன்றி கோயிலுக்கு எடுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வாளால் உடலை வெட்டிக் கொண்டு விநோத நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கரகத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

x