`எங்கள் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது'- குடியரசுத் தலைவருக்கு தீட்சிதர்கள் கடிதம்


சிதம்பரம் நடராஜர் கோயில்

சில அமைப்புகளின் போராட்டத்தால் தங்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் முதல்வருக்கு சிதம்பரம் பொது தீட்சிதர்கள் சபை சார்பில் கடிதம் எழுதியுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபட கடந்த சில ஆண்டுகளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்தும், கனகசபையில் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கூறியும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கடந்த மாதத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதனால் சிதம்பரம் நகரில் எப்போதும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு கீழவீதி எப்போதும் பரபரப்பாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சிதம்பரத்தில் கோயிலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. கனகசபை மீது ஏறி வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அதனால் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி தமிழக அரசு சார்பில் கடந்த வாரத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.

அதனையடுத்து அந்த அரசாணையை நிறைவேற்றும் விதமாக அன்றைய நாளிலேயே பெருந்திரளான பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பாக கனகசபை மீது ஏறி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோயிலில் எப்போதும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்படி பல்வேறு அமைப்புகள் வருவதால் கோயிலில் பக்தர்கள் இடையூறின்றி வழிபட முடியவில்லை என்றும் இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் தீட்சிதர்கள் சார்பில் கடிதம் எழுதி இருக்கின்றனர்.

பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலர் ஹேமசபேச தீட்சிதர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு கோயில் பொது தீட்சிதர்கள் சபை சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ``உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பொது தீட்சிதர்கள் கோயிலை நிர்வகித்து, பூஜைகளை செய்து வருகின்றனர். பழங்காலத்தில் இருந்து கோயிலின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பொது தீட்சிதர்களால் செய்யப்படுகின்றன.

சிதம்பரம் கோயில் மத செயல்பாடுகளை, பாரம்பரிய வழக்கப்படி பொது தீட்சிதர்கள் மட்டுமே செய்ய முடியும் என்பதை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது. கோயிலில் தீட்சிதர்கள் தேவாரம் ஓதுகின்றனர். ஆனால், சில குழுக்கள் இல்லையென பொய் பிரச்சாரம் செய்கின்றனர். கோயில் அருகில் நடக்கும் போராட்டங்களை தடை செய்ய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில குழுக்கள் மத கடமை, நம்பிக்கையில் தலையிட முயற்சிக்கின்றன. எங்கள் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வழிபாட்டு தலங்களில் போலீஸ் பயன்படுத்தப்படுவதால், தனிப்பட்ட சுதந்திரங்கள் பாதிக்கப்படுகின்றன. தீட்சிதர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை முன்னின்று நடத்தும் போராட்டக் குழுக்களால், எங்கள் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

கோயிலுக்குள் நடக்கும் தேவையற்ற போராட்டத்தால், மற்ற பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கோயிலில் அமைதியான சூழ்நிலை அமைய விரும்புகிறோம். மத நம்பிக்கை, கடமை மற்றும் செயல்பாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

x