திருச்சி: ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு ரங்கம் ரங்கநாயகி தாயாருக்கு நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கொள்ளிடம் ஆற்றில் இருந்து தங்கக் குடத்தில் புனித நீர் எடுத்து, யானை மீது வைத்து, ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவந்தனர்.
108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் முதலில் ரங்கநாதருக்கும், பிறகுரங்கநாயகி தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கும் நடத்தப்படும்.
அதன்படி, ஜூன் 21-ம் தேதி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ரங்கநாயகி தாயாருக்கு நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக வட காவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தங்கம், வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுக்கப்பட்டது.
தங்கக் குடத்தில் எடுக்கப்பட்ட புனிதநீர் கோயில் யானை ஆண்டாள் மீது வைக்கப்பட்டு, நாகசுரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. வெள்ளிக் குடங்களில் நிரப்பப்பட்ட புனிதநீரை பட்டர்கள் சுமந்து வந்தனர்.
தாயார் சந்நிதிக்கு புனிதநீர் கொண்டு வரப்பட்டதும், தாயாருக்கு சாற்றப்பட்டிருந்த வஸ்திரங்கள் களையப்பட்டு ஜேஷ்டாபிஷேகம் (திருமஞ்சனம்) செய்விக்கப்பட்டது.
பின்னர், புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தாயாருக்கு திருப்பாவாடை சாற்றும் வைபவம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.