‘வரலாற்றைத் திரித்து தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டமா?’


வாடிகனில் போப்பினால் தேவசாயம் பிள்ளைக்கு இன்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளை குமரி மாவட்டம், நட்டாலத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தின் முதல் புனிதர் பட்டம் பெறுபவரும் அவர்தான். இதனால் தமிழகம் முழுவதுமே கிறிஸ்தவர்கள் இதை வெகு உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், ‘வரலாற்றைத் திரித்து தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டமா?’ என விசுவ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் குமரி மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்து இயக்க நிர்வாகிகளிடம் பேசினோம். “மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை என்று ஒரு நபரே கிடையாது. அதுவே ஒரு கற்பனை. நீலகண்டன் என்று இருந்தவரை டிலனாய் மதம் மாற்றினாராம். நாங்களும் இந்துத்துவ நிர்வாகிகள் தேவசகாயம் பிள்ளையின் ஊரான நட்டாலத்திற்குப் போயிருந்தோம். அங்கே அவர் குடும்பம் எனச் சொல்லப்படுபவர்களில் பலர் இந்துக்களாக உள்ளனர். பொதுவாகவே, ஒரு சமூகக் குழுக்கள் இடையே மதமாற்றம் செய்வதற்கு கிறிஸ்தவம் ஒவ்வொரு தருணத்தில் ஒருவரை புனிதராக அறிவிக்கும். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவற்றை திருப்பி வழித்துக்கொண்டதும் உண்டு. அப்படித்தான் இப்போது தேவசகாயம் பிள்ளையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

அவரது சமூகம் என முன்வைக்கும் நாயர் சமூகக் குழுக்குள்ளும், தமிழகத்தின் முதல் புனிதர் எனும் அறிவிப்பால் தமிழ் சமூகத்திற்குள்ளும் மதம் மாற்று முயற்சி இதில் இருக்கிறது. மகாராஜா காலத்தில் ஒரு கிறிஸ்தவருக்கு தண்டனை கொடுக்க வேண்டுமானால், கிறிஸ்தவரை வைத்துத்தான் தண்டனை கொடுக்க முடியும் எனும் சட்டமே இருந்தது. ஆனால் தேவசகாயம் பிள்ளையை, மன்னர் கொன்றதாகச் சொல்கிறார்கள். இது இந்து மன்னர்கள் மீது கட்டி எழுப்பப்படும் பொய். அதுமட்டும் இல்லாமல் அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறார்கள். அன்று பிரிட்டிஷ்காரர்களிடம் மட்டுமே துப்பாக்கி இருந்தது. இப்படி பல வரலாறுகளையும் திரித்துத்தான் தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் எதிர்க்கிறோம். இதன் பின்னால் இந்துக்களை மதம் மாற்றும் சதி இருக்கிறது” என இந்து இயக்க நிர்வாகிகள் கூறினர்.

x