`எந்த கருத்தும் இனிமேல் தெரிவிக்க கூடாது'- மதுரை ஆதீனத்துக்கு தடைபோட்ட தருமை ஆதீனம்


தருமபுரம் ஆதீன கர்த்தருடன் மதுரை ஆதீனகர்த்தர்

தருமபுரம் ஆதீனத்தில் இம்மாதம் 22ம் தேதி நடைபெறவுள்ள பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கில் ஆதீனகர்த்தரை அமர வைத்து தூக்கிச் செல்லும் நிகழ்வுக்குத் தமிழக அரசின் சார்பில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தடைக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழகம் முழுவதும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்திருக்கின்றன.

தமிழக சட்டப்பேரவையிலும் இப்பிரச்சினை பிரதிபலித்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தானே நேரில் வந்து நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயார் என்று சவால் விடுத்திருந்தார். பல்வேறு இந்து அமைப்புகளும் இந்த தடைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தின.

அவர்களில் உச்சபட்ச குரலாக மதுரை ஆதீனத்தின் குரல் எழுந்தது. இந்த தடைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த அவர், ``என் உயிரே போனாலும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தியே தீருவேன், தருமை ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமரவைத்து நானே தோளில் தூக்கிச் செல்வேன்'' என்று சூளுரைத்தார். இதற்காக ஒத்த கருத்துடையவர்களை ஒன்றிணைக்க மதுரையில் இருந்து மாவீரத்தோடு புறப்பட்டார்.

தடை நீக்கப்பட வேண்டும், பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கில் ஆதீனகர்த்தரை அமர வைத்து தூக்கி சென்றே ஆகவேண்டும் என்ற கருத்தில் உடன்படும் மற்ற ஆதீனங்கள், இந்துமத அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.

இந்து முன்னணி, பாஜக, ஆர்எஸ்எஸ், உள்ளிட்ட பல இயக்கங்களை சேர்ந்தவர்களை அவர் தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் சந்தித்து இந்த நிகழ்ச்சியை எப்படியும் நடத்திக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். அவரின் இந்த முயற்சிக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் பெரும் தூண்டுகோலாக இருந்தன. மன்னார்குடி ஜீயர் போன்றவர்களும் அவருடன் இணைந்தார்கள். இந்துமத நிகழ்வுகளுக்கு தடை போட்டால் அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சாலையில் நடமாட முடியாது என்று எச்சரித்தார் மன்னார்குடி ஜீயர்.

இந்த நிலையில் தருமபுரம் ஆதீனகர்த்தரை சந்தித்து இது குறித்து பேசி, தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவும், ஒரு முடிவு காணவும் அவர்கள் விரும்பினார்கள். அதற்காக நேற்று தஞ்சாவூர் வந்திருந்த மதுரை ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டவர்கள் நேற்று இரவு 8 மணி அளவில் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் தங்கியிருந்த தருமபுரம் ஆதீனகர்த்தரை சென்று சந்தித்தனர்.

இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தில் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் இதை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அத்துடன் இந்த விவகாரம் குறித்து தருமபுரம் ஆதீனத்துடன் முதல்வர் பேசி இதற்கு விரைவில் நல்ல முடிவு காண்பார் என்று அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

இந்த நிலையில்தான் நேற்று இரவு 8 மணி அளவில் தருமபுரம் ஆதீனகர்த்தரை சந்தித்தார் மதுரை ஆதீனம். அங்கு நடைபெறும் கோயில் குடமுழுக்கு விழாவின் முதல் கால யாக பூஜையில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனகர்த்தரை தனியறைக்கு வரச்சொன்ன தருமை ஆதீனம் சுமார் ஒன்றரை மணி நேரம் அவருடன் தனித்துப் பேசிக்கொண்டிருந்தார். அதன் பின்னர் வெளியில் வந்த மதுரை ஆதீனகர்த்தரின் போக்கில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது.

பத்திரிகையாளர்களுக்கு ஆசிகளை வழங்கியவர், பேட்டி வழங்க மறுத்து விட்டு சென்றுவிட்டார். மதுரை சென்றவரை இன்று காலை நேரில் சென்று சந்தித்த காமதேனு செய்தியாளரிடமும் அவர் பேட்டியளிக்க தற்போது விரும்பவில்லை என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த நிலையில் தருமபுரம் ஆதீனகர்த்தர் உடனான சந்திப்பில் என்ன நடந்தது? மதுரை ஆதீனத்தின் மாற்றத்திற்கு காரணம் என்ன? என்று விசாரித்தோம்.

தங்கள் மடம் சார்ந்த இந்த விவகாரம் இந்த அளவுக்கு பரபரப்பான அரசியல் ஆக்கப்படுவதை தருமபுரம் ஆதீனம் சுத்தமாக விரும்பவில்லை என்கிறார்கள். தமிழக அரசிடம் இது குறித்து பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என்று அவர் ஏற்கெனவே முடிவு செய்து இருந்தார். இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் அவருடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இருதரப்பும் கலந்து பேசி இதில் ஒரு சுமுகமான முடிவை எட்டி விடலாம் என்பதே தருமபுர ஆதீனத்தின் எண்ணமாகவும், விருப்பமாகவும் இருக்கிறது.

ஆனால் மதுரை ஆதீனம் உள்ளிட்டவர்களும் இந்து அமைப்புகளும் இது தெரியாமல் பொங்கியதும், இதனை திமுகவுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்சினையாக ஆக்குவதையும் ஆதீனம் விரும்பவில்லை. எனவே தன்னை சந்திக்க வந்த மதுரை ஆதீனத்திடம் இது குறித்து அவர் விளக்கமாக எடுத்துக் கூறி இந்த விஷயத்தில் தாங்கள் எந்த கருத்தையும் இனிமேல் தெரிவிக்க வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம். தனது தலைமை குரு பீடமாக கருதும் தருமபுர ஆதீனத்தின் உத்தரவை மீற முடியாமல் தன்னுடைய முயற்சிகளைக் கைவிட்டு மதுரை திரும்பிய மதுரை ஆதீனம், மடத்துக்குள் அடைக்கலமாகி விட்டார்.

இதனால் இந்த விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக ஆதீனங்களையும் மடங்களையும் இந்து மத அமைப்புகளையும் ஓரணியில் திரட்டும் மதுரை ஆதீனத்தின் முயற்சியானது தருமபுர ஆதீனத்தின் தடை உத்தரவால் தோல்வி அடைந்திருக்கிறது.

x