குவிந்த பக்தர்கள்... நிறுத்தப்பட்டது மின்சாரம்: கோலாகலமாக நடந்த விநாயகர் திருத்தேர் வெள்ளோட்டம்


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ரூ.16.5 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட விநாயகர் தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற ஸ்தலமான அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாப்படுவது வழக்கம். விழாவின்போது அம்மன் தேர், விநாயகர் தேர், முருகன் தேர், அர்த்தநாரீஸ்வரர் தேர் என நான்கு பேர்கள் வடம் பிடிக்கபடுவது வழக்கம்.

இந்த தேர்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது. இதில் விநாயகர் தேர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் பெரிய தேர் ஆகியவற்றை சீரமைத்து புனரமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி விநாயகர் தேர் புதிதாக வடிவமைக்க இந்து சமய அறநிலையத் துறை மூலம் ரூ.16.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

மொத்தம் 3 டன் இரும்பிலான சக்கரம் மற்றும் அச்சு, 7 டன் எடை கொண்ட மரத்தேர் இலுப்பை மரத்திலும் என மொத்தம் 10 டன் எடை கொண்ட தேர் செய்யப்பட்டது. கம்பம் பட்டியை சேர்ந்த ஸ்தபதி பால்ராஜ் தலைமையில் தேர் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தேர் செய்யும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து இன்று வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

அர்த்தநாரீஸ்வரர் பெரிய தேர் நிலைகொண்டுள்ள இடத்திலிருந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரின் மேல் வைக்க கைலாசநாதர் கோயிலில் இருந்து சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக கொண்டு வந்த கலசங்கள் வைக்கப்பட்ட பின் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. திருத்தேர் 4 ரத வீதிகள் வழியாக வடம்பிடிக்கப்பட்ட தேர் மீண்டும் நிலை சேர்ந்தது.

தேர் வெள்ளோட்டத்தை ஒட்டி நான்கு ரத வீதிகளிலும் மின் சப்ளை நிறுத்தப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வாகனம் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் அருள் குகன் தலைமையில் மருத்துவ வாகனம் ஆகியவை தேரின் பின்னால் சென்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

x