அருள்தரும் சக்தி பீடங்கள் – 21


அம்மனின் சக்தி பீட வரிசையில், நேபாளம் குஹ்யேச்வரி கோயிலும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தாட்சாயணியின் முழங்கால் பகுதி இத்தலத்தில் விழுந்துள்ளதாக ஐதீகம்.

இமயமலையின் அடிவாரத்தில் நேபாளம் (நேவா + பாலம்), பூபாளம் ஆகிய தேசங்கள் உள்ளன. ‘நேவா’ என்றால் முனிவரால் ஆக்கப்பட்ட அமைப்பு முறை என்று பொருள் கொள்வதுண்டு. அதனால் இத்தலத்துக்கு தெய்விகத்தன்மை உள்ளதாகக் கருதப்படுகிறது. கயிலை மலையில் அகத்திய முனிவரை சந்திக்க, திருமூலர் என்ற சிவயோகியார், நேபாளத்தில் வழிபட்டதாக பெரியபுராணத்தில் வருகிறது. பாரதப் போரில் பீஷ்மர், துரோணர் முதலிய ஆச்சாரிய பெருமக்களை வதம் செய்த பாண்டவர்கள், பாப விமோசனத்துக்காக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மாவால் பணிக்கப்பட்டனர். பாண்டவர்களும் கேதாரம் சென்று சிவபெருமானை தரிசித்த பின்னர், நேபாளம் வந்து பசுபதிநாதரை தரிசித்து, பாப விமோசனம் பெற்றனர். பசுபதிநாதரின் கோயிலில் இருந்து அரை மைல் தொலைவில், பாக்மதி நதிக்கரையில் உள்ளது குஹ்யேச்வரி கோயில்.

குஹ்ய + ஈச்வரி என்பதை குகையில் வசிக்கும் அம்பிகை என்று பொருள் கொள்ளலாம். லலிதா சஹஸ்ரநாமத்தில் 707-வது பெயராக வரும் குஹ்யரூபிணி, இத்தல அம்பிகையின் பெயராக அமைந்துள்ளது. மனிதரின் உணர்வுக்கு அப்பாற்பட்டு, மறைவுப் பொருளாக விளங்குபவர் ஆதிசக்தி. குஹ்யகாளி சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், குஹ்யகாளி கத்ய சஞ்சீவன ஸ்தோத்திரம், குஹ்யகாளி மஹாவஜ்ர கவச ஸ்தோத்திரம் ஆகியன குஹ்யேச்வரி தேவியைப் போற்றி பாடப்பட்டுள்ளன.

கோயில் அமைப்பு

தாட்சாயணி தன் உருவத்தை சிதைத்துக் கொண்டபோது, அவரது முழங்கால் பகுதி இத்தலத்தில் விழுந்துள்ளதால், ஜோதிர்லிங்கத்துக்கு இணையாகக் கருதப்படும் பசுபதிநாதர் கோயிலுக்கு இணையாக இத்தலம் முக்கியத்துவம் பெறுகிறது. இக்கோயிலின் முகப்புப் பகுதியில் ஒருபுறம் கணபதியும், மறுபுறம் முருகப்பெருமானும் எழுந்தருளியுள்ளனர்.

கோபுர வாசலின் பின்புறத்தில் ப்ராம்மி தேவி, கௌமாரி, மகேஸ்வரி, ஸ்ரீதேவி, வைஷ்ணவி தேவி, குஹ்யேச்வரி தேவி, ஸ்ரீவார ஸ்ரீதேவி, ஈசா தேவி, சாமுண்டி தேவி, மகாலட்சுமி தேவி ஆகிய நவ தேவியரின் வடிவங்கள் அமைந்துள்ளன. பிரணவ பொருள், வெற்றிவேலன், நவ தேவியரின் வடிவமாக குஹ்யேச்வரி தேவி இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். கோயிலில் தங்கச் சிகரங்கள், தங்க உடுக்கை, தங்க சூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்தூபிக்கு மேல் நான்கு நாகங்கள் படமெடுப்பது போன்று தங்க வடிவில் அமைந்துள்ளன.

கருவறையில் தங்கத்தால் ஆன பீடம் உள்ளது. தேவி இத்தலத்தில் எங்கும் தங்க மயமாக அருள்பாலிக்கிறார். பீடத்தின் மற்றொரு பகுதியில் சிரமாலை அமைந்துள்ளது. இத்தலத்தில் தேவி தவம் செய்ததை, இந்த சிரமாலை உணர்த்துகிறது. மகிஷாசுரன் என்ற அசுரன், தேவியின் தவத்தைக் கலைக்க அசுரர்களை ஏவினான். அந்த அசுரர்கள் விழுங்கப்பட்டார்கள். பின்பு ஏவப்பட்ட சும்ப, நிசும்பர்களையும் தேவி வதம் செய்தார். தேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சியளித்தார். இச்சம்பவங்களை நினைவுகூரும் வகையில், பீடத்தின் அருகில் சிலை வடிவங்கள் காணப்படுகின்றன. மனக்குழப்பத்துடன் வந்து இத்தலத்தில் வேண்டுபவர்களுக்கு மனோபலம் உறுதியான முறையில் அமைகிறது என்பது இச்சம்பவங்களின் உட்கருத்தாகும்.

பசுபதிநாதர் கோயில்...

பசுபதி நாதர் கோயில்

பசுபதி நாதர் கோயில் 12 ஜோதிர் லிங்கத் தலங்களுக்கு இணையாகக் கருதப்படுகிறது. சோமநாதர், மல்லிகார்ஜுனர், மகாகாளம், ஓங்காரேச்வரம், பீம சங்கரம், திரியம்பகம், நாகேசம், குஷ்மேசம், கேதார நாதம், காசி விஸ்வநாதம், வைத்தியநாதம், ராமேஸ்வரம் ஆகியன 12 ஜோதிர் லிங்கங்களாகும். நேபாளம் பசுபதி நாதர் கோயிலுக்கு மேற்குத் துவாரம் துவாரகை, கிழக்குத் துவாரம் பூரி, தெற்குத் துவாரம் ராமேஸ்வரம், வடக்குத் துவாரம் கேதாரம் ஆகும். நேபாளத்தைத் தரிசித்தவர்கள் கேதார் செல்ல வேண்டிய அவசியமில்லை. கேதாரத்தைத் தரிசித்துவிட்டுதான் நேபாளம் வரவேண்டும்.

இங்கு காலை 4 மணிக்கு மேற்கு வாசல் மட்டுமே திறக்கப்படுகிறது. காலை 9 மணி அளவில் அனைத்து வாசல்களும் திறக்கப்படுகின்றன. சிவபெருமானை நான்கு வாசல்களில் இருந்தும் தரிசனம் செய்யலாம். பசுபதி நாதருடைய லிங்க வடிவம் மாறுபட்ட வடிவங்களைக் கொண்டதாக விளங்குகிறது. நேபாள மன்னரான ராஜா மஹேந்திரா, அவரது காலகட்டத்தில் தங்கத் தகடு மருவி கோயிலைப் புதுப்பித்ததால், கோயில் தெற்கு வாசலில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் ரூ. 1 கோடி மதிப்புள்ள ஏக முக ருத்ராட்சமணி உள்ளது. நாகமணி, கஜமுக்தா மணி, சூரிய காந்தாமணி, மண்டூக மணி, சிந்தாமணி ஆகிய ஐந்து மணிகளையும் இங்கு காணலாம். ஏக முக ருத்ராட்ச மணி, ஐந்து மணிகளை அணிந்து பசுபதி நாதர் அருள்பாலிக்கிறார் என்பதே இத்தலத்தின் பாரம்பரிய சிறப்பம்சம் ஆகும். கோயிலின் நான்கு பக்கங்களிலும் வெள்ளிக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவலிங்க மூர்த்தி ஐந்து திருமுகங்களோடு விளங்குகிறார். இக்கோயிலின் அமைப்பு வடநாட்டு கோயிலைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

மேற்கு நோக்கிய வாயிலில் நுழைந்தால் மிகப் பெரிய நந்திதேவரை தரிசிக்கலாம். தெற்கு தலைவாயிலில் உள்ள கைப்பிடிச் சுவற்றில் 1,008 சிவலிங்க மூர்த்திகளை அமைத்துள்ளனர். பசுபதி நாதருடைய 5 முகங்களிலும் 5 அர்ச்சனை, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவபெருமானுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருட்கள் தென்னாட்டில் நடைபெறும் முறையிலேயே செய்யப்படுகின்றன.

பிற கோயில்கள்

பசுபதி நாதர் கோயிலை ஒட்டியுள்ள கோயில்கள் அனைத்தும் 3 மைல் தூர நடைப்பயணத்தில் அமைந்துள்ளன. நேபாளத்தில் அட்ட மாத்ருகைகளின் கோயில் அமைந்துள்ளது. பசுபதி நாதரின் கோயிலில் இருந்து 9 மைல் தூரத்தில் தத்தாத்ரேயர் கோயில் அமைந்துள்ளது. அவதூத ஆசிரமத்துக்கு தத்தாத்ரேயரே முதல்வராகத் திகழ்கிறார்.

நேபாளத்தின் முந்தைய தலைநகராக இருந்த பக்தபுரி, பக்தர்கள் நிறைந்த தலமாக அமைந்திருந்தது. மலையின் மேல் சாரதா கோயில் அமைந்துள்ளது. சாரதா கோயிலுக்குச் செல்ல ஒரு வழியும் அங்கிருந்து கீழே இறங்கி வர மற்றொரு வழியும் உள்ளது. இறக்கத்தில் இருந்து 9 மைல் தூரத்தில் நீலகண்டர் கோயில் உள்ளது. கௌதம புத்தர் தோன்றிய இடமும் இங்கு உள்ளது.

காட்மாண்ட்

நேபாளத்தின் தற்போதைய தலைநகர் காட்மாண்ட் ஆகும். இமயமலைச் சாரலில் பல மலைகளுக்கு இடையே நேபாளம் அமைந்துள்ளது. இயற்கையின் அரண், இந்நகரத்தைப் பாதுகாத்து வருகிறது. ‘காஷ்டம்’ என்றால் மரம். ‘மாண்ட்’ என்றால் மண்டபம். ‘காட்மாண்ட்’ என்பது மரத்தால் ஆன மண்டபம், மரத்தால் ஆன வீடுகள் ஆகிய பொருள்களைத் தருகிறது. காட்மாண்ட் நகரத்தைக் கடந்து பசுபதி நாதர் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

அம்மையப்பன்

அனைத்து பாவங்களுக்கும் பாப விமோசனம் அளிப்பவராக பசுபதி நாதரும், பாப விமோசனம் அடைந்த பிறகு, நம்முடைய செயல்களுக்கு இடையூறாக இருக்கும் தடைகள் என்று அழைக்கப்படும் அசுரர்களை அழிப்பவராக குஹ்யேச்வரி தேவியும் அருள்பாலிக்கின்றனர். குழந்தையின் வளர்ச்சிக்குத் தாயும், தந்தையும் உறுதுணையாக இருப்பதுபோல, கருணை பொழியும் அம்மையப்பனாக பசுபதி நாதரும், குஹ்யேச்வரி தேவியும் விளங்குகின்றனர். சக்திபீட நாயகியின் தவ வலிமையால் இத்தலம் புனிதம் பெற்று விளங்குகிறது.

தந்திர சக்தி

தந்திர சக்தி பெறுவதற்கான சிறப்பிடமாக இக்கோயில் கருதப்படுகிறது. தாந்த்ரீகர்களும் இக்கோயிலுக்கு வந்திருந்து சிறப்பு ஆராதனைகள் செய்வது வழக்கம். காளி தந்திரம், சண்டி தந்திரம், சிவ தந்திர ரஹஸ்யா ஆகிய நூல்களில் இக்கோயில் குறித்து கூறப்பட்டுள்ளது. விஸ்வரூப தரிசனத்தின்போது, தேவி பல வண்ணங்களுடன் கூடிய தலைகளுடனும், எண்ணற்ற கைகளுடனும் அருள்பாலிக்கிறார். பவுத்த மதத்தின் ஒரு பிரிவினர் குஹ்யேச்வரியை வஜ்ரவாராஹியாகவும், காட்மாண்ட் பகுதிக்கு சக்தி அளிக்கும் தொப்புள் கொடியாகவும் வணங்குகின்றனர்.

காளி சஹஸ்ரநாம ஸ்தோத்திர பலன்

காளியின் சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஸ்ரீமஹாகாளர் கூறியுள்ளார். சுந்தரிக்கு அன்பாக உபதேசிக்கப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை காலை, மதியம், மாலை, நள்ளிரவு வேளைகளில் பாராயணம் செய்யலாம். அனைவருக்கும் சத்குணங்கள் பிறக்கும். சிறந்த கல்விச் செல்வம், குழந்தைப் பேறு கிட்டும்.

செந்நிறப் பூக்கள், அலறிப் பூக்கள், எருக்கம்பூ, தாமரைப்பூ, அருகம்புல், கதம்ப மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து, சந்தனம், ஜவ்வாது, சிந்தூரம், இலாமிச்சை வேர், வெட்டி வேர், பச்சை கற்பூரம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து, தேன், சர்க்கரை, கற்கண்டு, பால், திராட்சை சேர்த்த விதவிதமான பாயாசங்கள் படைத்து, காளி தேவியை 64 உபசாரங்களைக் கொண்டு அர்ச்சித்தால் அனைத்து விதமான தடைகளும் நீங்கி வாழ்வில் இன்பம் பொங்கும். தேவியின் அருளால், ஒருவர் மகாலட்சுமிக்கு இணையான செல்வம், காளிகைக்கு ஒப்பான சித்திகள், சுந்தரிக்கு ஒப்பான அழகு, தாராதேவிக்கு இணையான கவித்துவம், பிரம்மதேவருக்கு இணையான வேதஞானம், வஸ்ராயுதத்துக்கு இணையான பலத்தையும் பெற்று விளங்குவர் என்பது நம்பிக்கை.

ஒருமுறை பாராயணம் செய்தால் பாவம் போகும். இருமுறை பாராயணம் செய்தால் விருப்பம் நிறைவேறும். மூன்று முறை பாராயணம் செய்தால் தேவகுருவுக்கு இணையான பதவி கிட்டும். நான்கு முறை – நான்கு வர்ணத்தவருக்கு அதிபதி. 5 முறை – 5 காமதேவ மூர்த்திகளுக்கும் அதிபதி என்று அதிகப்படியான முறைகள் காளி சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் அனைத்து தடைகளும் நீங்கி, நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

தினசரி தரிசன நேரம், மகா சிவராத்திரி, 12 மாத சிவராத்திரி, அனைத்து திங்கள் கிழமைகளிலும் இங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதனால் எப்போதும் இங்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் இருப்பர். நவராத்திரி 9 தினங்களிலும் தேவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

x