ஆடல்வல்லானை தரிசித்தார் ஆளுநர் ரவி


சிதம்பரம் கோயிலின் உள்ளே ஆளுநர் ரவி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆடல்வல்லான் நடராஜப் பெருமானை தரிசித்தார் தமிழக ஆளுநர் ரவி.

மனைவியுடன் ஆளுநர் ரவி

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 84-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ரவி நேற்று மாலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு வந்து சேர்ந்தார். இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் ஆளுநர் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அவரே பட்டங்களை வழங்குகிறார்.

அதற்காக சிதம்பரம் நகருக்கு வருகை தந்த ஆளுநரை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் மற்றும் பதிவாளர் சீத்தாராமன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த ஆளுநர் இன்று காலை தனது மனைவியுடன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்தார். இவரை சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் பொதுச்செயலாளர் கார்த்திக் தலைமையிலான கோயில் தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்து வரவேற்று மேளதாள வாத்தியங்கள் முழங்க கோயிலுக்கு உள்ளே அழைத்துச் சென்றனர்.

ஆடல்வல்லான் நடராஜப் பெருமானையும், தில்லை கோவிந்தராஜப் பெருமாளையும் ஆளுநர் வழிபட்டார். அப்போது அவருக்கு தீட்சிதர்கள் கோயிலின் தலவரலாறு குறித்தும், பெருமைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்கள்.

ஆளுநர் வருகையை முன்னிட்டு சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதிகள் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆளுநர் வந்திருந்த போது பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, முழுமையாக பரிசோதனை செய்தபிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆளுநர் அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

x