சங்கத்தில் சேர்ந்தவர் சாதியை இழக்கிறார்!


பௌத்தத்தை ஏற்பவர்களை இரண்டு வகையாக பார்க்கலாம். பிக்குகள் எனப்படும் துறவிகள் மற்றும் இல்லறத்தார். இல்லறத்தில் இருந்துகொண்டே புத்தரைப் பின்பற்றுபவர்களை உபாசகர்கள் எனவும் அழைக்கலாம். இருவருக்கும் கொள்கை நலன்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

பிக்குகள் மிக நல்ல நடத்தையுடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சங்கத்தில் இணைந்திருக்க வேண்டும். சங்கம் பொதுவானது. பௌத்த சங்கத்தில் சேர்ந்திட ஜாதி, பாலினம், சமூக அந்தஸ்து என்று எதுவுமே தடையில்லை. பௌத்தராகிவிட்டால் அவருக்கு வேறுபாடுகள் ஏதுமில்லை, மானுட சமுத்திரத்தில் சேர்ந்துவிட்டார் என்று பொருள். பெண் பிக்குகள் பிக்குனிகள் என்றழைக்கப்பட்டனர். பிக்குனிகளும் சங்கத்தில் இருக்கிறார்கள்.

சங்கம் கடல் போன்றது. அதில் வந்து சேருகின்ற நதிகள் போன்றவர்கள் பிக்குகள். நதிக்குத் தனிப்பெயர் உண்டு. தனித்தன்மை உண்டு, ஆனால், கடலில் வந்து சேர்ந்துவிட்டால் நதி தன் தனிப்பெயரை – தனித்தன்மையை இழக்கிறது. பௌத்த சங்கத்தில் சேர்ந்துவிட்டால் ஒருவர் தன் சாதியை இழக்கிறார். தன் தனி அந்தஸ்தை இழந்து சமமாகிவிடுகிறார் என்று புத்தர் கூறுகிறார்.

பிக்குகள் அதாவது துறவிகள் எப்படி இருக்க வேண்டும்?

பிக்கு தொடர்ந்து பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும். திருடக்கூடாது. தற்பெருமை கொள்ளாதிருக்க வேண்டும். கொல்லுதல் கூடாது. அவருக்கு அனுமதிக்கப்பட்டதைத் தவிர வேறு எதையும் அவர் உடைமையாக்கிக் கொள்ளக்கூடாது.

எட்டு பொருள்களைத் தவிர வேறு எதையும் அவர்கள் உடைமையாக்கிக் கொள்ளக்கூடாது, அப்படி ஆக்கிக்கொண்டால் அவர்கள் பிக்குகளுக்கு உரிய உடை அணிந்தவர்களாக இருக்கலாம். ஆனால் பிக்குகளாக இருக்க முடியாது

அந்த எட்டுப்பொருட்கள்:

1.கீழாடை 2.மேலாடை 3.குளிருக்குப் போர்வை ஒன்று 4.அரைக்கச்சை 5.ஒரு பிட்சைப் பாத்திரம் 6. ஒரு மழிக்கும் கத்தி 7.தைப்பதற்கு ஓர் ஊசி 8. ஒரு தண்ணீர் வடிகட்டி

ஐம்புலன்களாலும் அடங்கி இருத்தல் துறவிகளை துயரிலிருந்து விடுவிக்கும் என தம்மபதம் கூறுகிறது.

கைகளைக் கட்டுப்படுத்தி

கால்களைக் கட்டுப்படுத்தி

பேச்சைக் கட்டுப்படுத்தி

மனத்தை கட்டுப்படுத்தி

தியானத்தில் மகிழந்து

தனிமையும்

அமைதியும் சூழ இருப்பவரை

பிக்கு என அழைப்பர் ( தம்மபதம் 362)

அறிவ்வோடு பேசி அறிவூட்டல் நிகழ்த்தி தம்மத்தில் நிலைத்து மகிழ்ந்து தியானித்து தம்மத்தை நினைத்து அதிலிருந்து சற்றும் விலகாமல் மக்களை எப்போதும் நல்வழிப்படுத்தும் அவர்தான் பிக்கு. மற்றவர்கள் மீது பொறாமைக் கொள்ளாமல் இருப்பது பிக்குவின் இலக்கணம். அப்படி பொறாமைக் கொள்வார் என்றால் அவர் மனம் தம்மத்தில் நிலைக்காது. அவர் பிக்குவிற்கான தகுதியை இழக்கிறார்.

நான்

எனது

என எண்ணாமல்

அவற்றுக்காக வருந்தாமல்

அவற்றை விடுத்து

இருப்பவரே பிக்கு. (தம்மபதம் 367)

ஓ பிக்குகளே

இந்தப் படகினைக் காலி செய்யுங்கள்

காலியானால் படகு வேகமாய்ச் செல்லும்

இச்சையையும் வெறுப்பையும் அழித்து

நிப்பாணத்திற்குச் செல்லலாம் (தம்மபதம் 369)

படகு என்பது மனம். அதைக் காலி செய்யுங்கள். மனத்தின் சுமை உங்கள் பயணத்தின் வேகத்தைக் குறைக்கும். மனத்தை இலேசாக்குங்கள். மணம் வீசுகிற மல்லிகைப் பூக்களைத் தரும் கொடி மலர்களை வாடியபின் உதிர்ப்பதைப் போல ஆசைகளையும் வெறுப்பையும் உதிர்க்க வேண்டும். பிக்குகளே உங்களை நீங்களே பழித்துக் கொள்ளுங்கள். உங்களை ஆராயுங்கள். தற்காப்பும் மன ஓர்மையும் அமையும் பிக்குகளே மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்கிறார் புத்தர்.

தானே தனக்குப் பாதுகாப்பு

தானே தனக்குப் புகலிடம்

வணிகன் தன் குதிரைகளைத் தானே

அடக்குவதுபோல்

தன்னையே அடக்க வேண்டும் (தம்மபதம் 380)

பிக்குகள் தனிமையில் இருக்க வேண்டும். அவர்கள் சதா தம்மத்தை சிந்திப்பவர்களாகவே இருக்க வேண்டும். ஆற்றலும் தூய்மை உடையோரிடம் நட்பு கொள்ள வேண்டும். தூய வாழ்க்கை, நன்னடத்தை, அடக்கம் உள்ள பிக்குகள் துன்பத்தை இழப்பர் மகிழ்வில் திளைப்பர்.

ஒரு பிக்கு இருந்தார். அவருக்கு ஒரு தனித்திறன் இருந்தது. கற்களைக் குறிபார்த்து வீசுவதில் அதி திறமைசாலி அவர். வேகமாகச் செல்லும் எதனையும் அவரால் கல்வீசித் தாக்க முடியும். ஒருநாள் இன்னொரு பிக்குவுடன் ஆற்றில் குளித்து விட்டு கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, இரு கொக்குகள் பறப்பதைப் பார்த்துவிட்டு பக்கத்திலிருந்து பிக்குவிடம் அந்தப் பறவைகளில் ஒன்றின் கண்ணை என்னால் தாக்க முடியும் என்று கூறி பறவையின் கண்ணை குறிபார்த்துக் கல்லை அடிக்க அக்கல் மிகச்சரியாகப் பறவையின் கண்களைத் தாக்கி, பறவை இறந்து வீழ்ந்துவிட்டது.

இதைப்பார்த்துக் கொண்டிருந்த மற்ற பிக்குகள் இந்த நிகழ்ச்சியை புத்தரிடம் கூறினார்கள். புத்தர் அந்த பிக்குவை அழைத்து “அந்தப் பறவையை ஏன் கொன்றீர்கள் பிக்குவே? ஒரு பிக்குவாக நீங்கள் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும். அந்த உயிர்களைத் துன்பங்களிலிருந்து விடுதலை அடையச் செய்ய நீங்கள் தீவிரமாகப் போராட வேண்டும். ஒரு பிக்கு தன் சிந்தனைகள், வார்த்தைகள் செயல்கள் என எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

புத்தரின் போதனைகளுக்கு

தன்னை அர்ப்பணிக்க

இன்னும் இளமையாய் இருக்கும் பிக்கு

மேகங்களிலிருந்து வெளியேறிய

நிலவினைப் போல

உலகிற்கு ஒளிப்பால் ஊட்டுகிறார். (தம்மபதம் 382)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
ஆசை கூடாது என்று புத்தர் கூறவில்லை!

x