அருள்தரும் சக்தி பீடங்கள் - 19


கயிலைமலை தோற்றம்

அம்மனின் சக்தி பீட வரிசையில் மானசரோவர் தாட்சாயணி மிகவும் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, காளி, பகவதி ஆகிய பெயர்களைத் தாங்கி பல இடங்களில் கோயில் கொண்ட தேவி, இத்தலத்தில் தாட்சாயணி என்ற பெயரையே தாங்கி அருள்பாலிக்கிறார். தேவியின் தலைப்பகுதி இத்தலத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இமயமலையில் மணி முடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் கயிலை மலைக்கு அருகில் அமைந்துள்ளது மானசரோவர் தடாகம். கயிலை மலையையே ஈசனின் உருவமாகக் காண்பது வழக்கம். இங்கு சிவபெருமான், பார்வதி தேவியுடன் எழுந்தருளியுள்ளார். 22,028 அடி உயரமும், 32 மைல் சுற்றளவைக் கொண்டது கயிலை மலை.

கயிலை மலையும், மானசரோவர் தடாகமும் சேர்ந்து கவுரி சங்கரம் என்று அழைக்கப்படுகிறது. கயிலாயம் சிவ வடிவமாகவும், மானசரோவர் சக்தி வடிவமாகவும் கருதப்படுகிறது. இங்கு தாட்சாயணியே தடாக வடிவத்தில் அருளாட்சி புரிவதாக அறியப்படுகிறது.

தல வரலாறு

தட்சன் என்ற அரசர், சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். ஈரேழு உலகத்தையும் அடக்கி ஆள வேண்டும் என்றால் சிவபெருமான் தனது மருமகனாக வர வேண்டும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டார். தட்சனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு வேண்டிய வரங்களை அளிப்பதாக உறுதி அளித்தார். சிவபெருமான் தனக்கு மருமகனாக வர வேண்டும் என்று அவரிடம் வேண்ட, ஈசனும் அவ்வாறே வரமளித்தார். தட்சனின் எண்ணத்தை உணர்ந்து கொண்ட சிவபெருமான் தக்க சமயத்தில் தட்சனுக்கு பாடம் புகட்ட எண்ணினார்.

சிவபெருமான் அருளிய வரத்தின் காரணமாக தட்சனுக்கு தாட்சாயணி என்ற மகள் தோன்றினார். தக்க பருவத்தில் தாட்சாயணியை கரம் பிடித்தார் சிவபெருமான். திருமணம் நடைபெற்று முடிந்ததும், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், பார்வதியை அழைத்துக் கொண்டு கயிலை மலை புறப்பட்டார் சிவபெருமான். தட்சனிடம் உண்மையான அன்பு இல்லாத காரணத்தால் சிவபெருமான் இவ்வாறு செய்தார்.

தன்னிடம் கூறிக் கொள்ளாமல் சென்ற சிவபெருமானை, பலவாறு தூற்றினார் தட்சன். இதை அறிந்த தேவர்கள், தட்சனை அழைத்து, இவ்வாறு சிவபெருமானை நிந்தனை செய்தல் ஆகாது என்று கூறி, அவரிடம் சமாதானமாகப் பேசுமாறு அறிவுறுத்தினர். அதை ஏற்றுக் கொண்ட தட்சன், சிவபெருமானைக் காண, கயிலை மலை வந்தார். ஆனால், சிவபெருமானை நிந்தனை செய்தவர் என்பதால் நுழைவாயிலில், நந்திதேவரால் அனுமதி மறுக்கப்படுகிறார்.

நந்திதேவரின் நடவடிக்கை, தட்சனுக்கு கோபத்தை வரவழைத்தது. தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, யாகத்துக்கு ஏற்பாடு செய்கிறார் தட்சன். தேவர்கள் அனைவரையும் யாகத்துக்கு அழைத்த தட்சன், தனது மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை. இதைக் கேள்வியுற்ற தாட்சாயணி, தட்சனிடம் இதுகுறித்து கோபம் கொண்டார். “மாமனார் இல்லத்தில் ஒரு விழா என்றால், முதல் அழைப்பு மருமகனுக்குத்தான் என்பது தாங்கள் அறிந்திருக்கவில்லையா?” என்று தந்தையிடம் கேள்வி எழுப்பினார் தாட்சாயணி.

தன் மகள் இப்படிக் கேட்டதும், சிவபெருமான் தனது மருமகன் இல்லை என்றும், தாட்சாயணி தனது மகள் இல்லை என்றும் ஆவேசத்துடன் கூறினார் தட்சன். தன் தந்தை கூறியதைக் கேட்ட தாட்சாயணி, உடனே சிவபெருமானிடம் சென்று தட்சனை அழிக்கும்படி வேண்டுகிறார். தாட்சாயணியின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமானிடம் இருந்து வீரபத்திரரும், தாட்சாயணியிடம் இருந்து மகா காளியும் தோன்றினர். அவிர் பாகம் அளிக்க மறுத்ததால், தட்சனை அழிக்க பணித்தார் சிவபெருமான். வீரபத்திரர் யாகத்தை அழித்தார். மகா காளியும் யாகத்தை அழிக்க முற்படும்போது, தட்சனின் தலை உருண்டது. தட்சன் அழிந்ததும், தட்சன் மகள் என்று தாம் அழைக்கப்படுவதை விரும்பாத தாட்சாயணி, தன் உடலை தீக்கிரையாக்கிக் கொண்டார்.

தாட்சாயணியின் உடலைத் தாங்கிய சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். அதன் காரணமாக, அனைத்து உலகங்களும் நடுங்கின. இந்த ஆட்டத்தைக் கண்ட திருமால் தனது சக்கரத்தை ஏவினார். திருமாலின் சக்கரம், தாட்சாயணியின் உடலை 51 துண்டுகளாகச் சிதறி விழும்படி செய்தது. அப்படி தாட்சாயணியின் தலைப்பாகம் விழுந்த இடம்தான் கயிலை மலைக்கு அருகில் உள்ள மானசரோவர். அதனாலேயே தாட்சாயணி என்ற பெயரிலேயே இத்தலத்தில் தேவி அருள்பாலிக்கிறார்.

மானசரோவர் தடாகம்

கயிலை மலையில் இருந்து பெரும் சிந்து நதி, சட்லஜ் ஆறு, காக்ரா ஆறு, பிரம்மபுத்திரா ஆறுகள் உற்பத்தியாகின்றன. 52 கிமீ தொலைவு கொண்ட இந்த கிரிவலப் பாதையில் பயணிக்க 15 மணி நேரம் ஆகும்.

கயிலை மலையின் சுற்று வட்டாரத்தில் கவுரி குண்டம், ராட்சச தடாகம் (உப்புநீர் ஏரி), மானசரோவர் தடாகம் (நன்னீர் ஏரி) ஆகிய தீர்த்தங்கள் அமைந்துள்ளன. கயிலை மலைக்கு தெற்கில் அதன் அடியில் இருந்து 40 மைல் தூரத்தில் மானசரோவர் தடாகம் அமைந்துள்ளது. இது 200 சதுர மைல் பரப்பும், 62 மைல் சுற்றளவும் கொண்டது. இதன் கருநீல நிறம் ஆழத்தையும் அமைதியையும் வெளிப்படுத்துகிறது. 250 அடிக்கும் மேலாக ஆழம் கொண்டது.

கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இத்தடாகம், படைத்தல் தொழில் புரியும் பிரம்மதேவரால் தோற்றுவிக்கப்பட்டது என்று புராணங்கள் உரைக்கின்றன.

‘மானசரோவர்’ என்றால் ‘மனதில் இருந்து தோன்றிய தடாகம்’ என்று பொருள். வசிஷ்டர், மரீசி உள்ளிட்ட முனிவர்கள், தாங்கள் நீராடுவதற்காகவும், சிவ வழிபாட்டுக்காகவும் நீர்நிலையை அருளுமாறு பிரம்மதேவரை வேண்டினர். அதன்படி பிரம்மதேவர் தன் மனதில் இருந்து இந்த தடாகத்தை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. தடாகத்தின் நடுவே சுவர்ணலிங்கமாக ஈசன் முனிவர்களுக்காக காட்சி கொடுத்தார். இந்தக் குளத்தின் நீரே பூமிக்கடியில் சென்று கங்கையாக உற்பத்தியாவதாக கருதப்படுகிறது.

இந்தத் தடாகத்தில் ஒரு முறை நீராடினால், கடந்த 100 பிறவிகளில் செய்த தீவினைகளும் நீங்குவதாக திபெத்திய புராணம் தெரிவிக்கிறது. தேவியின் அம்சமாக இத்தடாகம் கருதப்படுவதால், மேலும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த ராட்சச தடாகத்தில் இருந்து ராவணன், சிவபெருமானை நோக்கி தவம் புரிந்ததாகவும் கூறப்படுகிறது.

சாம கானம்

இலங்கை வேந்தன் ராவணன், தனது தேரில் இப்பகுதியில் வலம் வரும்போது, கயிலை மலை இடையூறாக இருந்தது. அதனால் கோபமுற்ற ராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க எண்ணினான். இமயம் என்பது அம்மையும், அப்பனும் இணைந்த கவுரி சங்கரம் என்பதை அறியாத ராவணன், மலையைத் தூக்க முயன்றான். மலை லேசாக ஆட்டம் கொடுத்தது. அப்போது ஈசன், தன் கால் பெருவிரலால் சற்றே அழுத்தினார். ராவணனின் கரங்கள், மலைக்கு அடியில் சிக்கிக் கொண்டன.

இது சிவபெருமானின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த ராவணன், அவரை குளிர்விக்க சாம கானம் பாடினான். சாம கானத்தில் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், தனது அழுத்தத்தைக் குறைத்தார். தனது கரங்களை விடுவித்துக் கொண்ட ராவணன். அம்மையப்பனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பினான்.

ராவணனின் சாம கானத்துக்கு செவி சாய்த்த சிவபெருமான், தன்னிடம் ஆணவத்தைக் காட்டிய ராவணனை மன்னித்தார். ஆணவம் கொண்ட தட்சனை தண்டித்தார் தாட்சாயணி. சுயநலம், தூய்மையின்மை, ஆணவம் ஆகியவற்றை அழித்து, மானசரோவரை அணுகி அன்னையை வேண்டினால், அனைத்து வரங்களையும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கயிலை தரிசனம்

இமயத்தை அம்மையப்பராகக் கருதியதால் காலால் மிதிக்க அஞ்சி தலையாலேயே நடந்து வந்து கயிலை நாதரை தரிசித்தார் காரைக்கால் அம்மையார். அதனாலேயே சிவபெருமான், காரைக்கால் அம்மையாரை, “அம்மையே வருக” என்று அழைத்தார்.

கயிலைநாதரின் தொண்டராக இருந்த சுந்தரர், திருத்தொண்டத் தொகை பாட தென்னாட்டில் தோற்றுவிக்கப்பட்டார். பின்னர் உலகியலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஈசனால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். தம்மை நோக்கி பாடல்கள் புனைய, சுந்தரரைப் பணித்தார் சிவபெருமான். அதன்படி பாமாலைகள் இயற்றினார் சுந்தரர். சிவபெருமான் ஆணைப்படி, தேவர்கள், முனிவர்கள் புடைசூழ யானை மேல் சுந்தரர் அமர்த்தப்பட்டு, கயிலை மலைக்கு அழைத்து வரப்பட்டார்.

“கயிலை நாயகனைக் காணாது மீளேன்” என்று கூறி, நடந்தும், புரண்டும், தவழ்ந்தும் கயிலை யாத்திரையைத் தொடங்கினார் அப்பர் பெருமான். அவரது உறுதியை உணர்ந்த சிவபெருமான், வழியில் தோன்றி, அப்பர் பெருமானை திருவையாறுக்கு செல்லப் பணித்தார். ஈசன் அருளால் திருவையாற்றில் குளத்தில் மூழ்கி கயிலாய தரிசனத்தைக் கண்குளிரக் கண்டார் அப்பர் பெருமான்.

விநாயகப் பெருமான், தன் துதிக்கையால் ஔவையாரை கயிலை மலைக்கு தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. சேரமான் பெருமாள் நாயனார், பெருமிழலைக் குறும்பர் நாயனார் உள்ளிட்டோரும் கயிலை நாதனை தரிசித்துள்ளனர். திருமந்திரம் பாடிய திருமூலர் கயிலையில் முனிவர்களுடன் இருந்த பின்னரே தென்னாடு அடைந்ததாக பெரிய புராணம் உரைக்கிறது.

குருட்சேத்திரத்தில் நடைபெற்ற பாரதப் போர் சமயத்தில், அர்ஜுனன், கயிலை மலைக்கு கிருஷ்ணருடன் வந்திருந்து படைக்கலன்களைப் பெற்றுச் சென்றதாகக் கூறப்படுகிறது. தருமபுத்திரரும் கயிலை நாதனை தரிசித்ததாக மகாபாரதம் கூறுகிறது.

கயிலைச் சிறப்பு

ஒவ்வொரு ஆண்டு, பல்லாயிரக்கணக்கானோர் கயிலாய யாத்திரை மேற்கொள்கின்றனர். சீனாவின் திபெத்திய பீட பூமியில் அமைந்துள்ள கயிலை மலைக்கு இந்துக்கள் மட்டுமின்றி, புத்த மதம், சமண மதம், பொம்பா மதத்தைச் (திபெத்தின் ஆதி மதம்) சேர்ந்தவர்களும் வருகை புரிகின்றனர். இந்து மதத்தினர் கயிலை மலையை வலமாகச் சுற்றும்போது, பொம்பா மதத்தினர் இடமாகச் சுற்றுகின்றனர்.

நேபாளம் வழியாகச் செல்லும் வழி சுற்றுப் பாதையாக இருப்பதால், தற்போது இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பிதவ்ரகட் மாவட்டம் வழியாக திபெத் எல்லை வரை இந்திய அரசு சாலை அமைத்துள்ளது. இப்பாதை வழியாக 97 கிமீ மட்டும் திபெத் வழியாகப் பயணித்து கயிலை மலையை அடையலாம்.

x