சிவகாசி | திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம்


சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம் இன்று (ஜூன் 25) காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்று திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் கோயில் குடைவரை கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் மற்றும் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆனி பிரம்மோற்சவ விழாவில் தினசரி இரவு நின்ற நாராயண பெருமாள் சிம்மம், சேஷம், கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக நின்ற நாராயணப்பெருமாள் மற்றும் செங்கமலத் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விஷேச ஆராதனை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினார். மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, செயல் அலுவலர் தேவி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு ரத வீதிகள் வழியாக தேர் இழுத்துச் சென்றனர்.

x