புனித வெள்ளி - வேளாங்கண்ணியில் மக்கள் வெள்ளம்


வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள்

நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் புனித வழிபாட்டுத் தலமாகப் போற்றப்படுகிறது. பிற சமூகத்து மக்களும் வேளாங்கண்ணிக்கு வந்து மாதாவை தரிசித்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

40 நாட்கள் உபவாசமிருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். இயேசு சிலுவையில் உயிர் விட்ட நாளை 'புனிதவெள்ளி' ஆகவும் உயிர்த்தெழுந்த நாளை 'ஈஸ்டர்' தினமாகவும் அவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

இந்த தவக்காலத்தின்போது வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும், இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் இடம்பெறுவதும் வழக்கம். கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தவக்காலம் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து தினமும் ஜபம், மன்றாட்டு, திருப்பலி போன்றவை நடைபெற்றது. கடந்த 10-ம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

நேற்று பெரிய வியாழன் தினமும், இன்று புனித வெள்ளி தினமும் மிகப் பெரிய அளவில் சிறப்பாக இங்கு அனுசரிக்கப்படும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். நேற்றும், இன்றும் வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள் தந்தையர்கள் , அருள் சகோதரிகள் கலந்து கொண்டனர்.

இன்று மாலை 5.30 மணிக்கு இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திரு சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப்பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்டவைகள் பேராலயத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் 17-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இவற்றில் கலந்து கொள்வதற்காக பாதயாத்திரையாக பல ஆயிரம் பக்தர்கள் வந்திருக்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்தும் கார், பேருந்து, ரயில்கள் மூலம் ஏராளமானவர்கள் வந்திருக்கின்றனர். இதனால் வேளாங்கண்ணி மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிகிறது. நாகை மாவட்ட காவல்துறையினர் கடற்கரை, பேராலயம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த இருக்கின்றனர். சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேராலயம் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

x