திருவானைக்காவல் தேரோட்டம்


பஞ்சபூத தலங்களில் நீருக்கான தலமான திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், செங்கோட் சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில் திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்திருந்தது. இதனால் பங்குனி தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருவானைக்காவல் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவான பங்குனித் திருவிழாவானது கொடியேற்றத்துடன் கடந்த மார்ச் 11-ம் தேதி துவங்கியது. அதன் பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து தினசரி சுவாமி, அம்பாளுடன் ரிஷப வாகனம், காமதேனு வாகனம், சூரிய சந்திர பிரபை வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதிஉலா கண்டருளும் வைபவம் நடைபெற்று வந்தது. 6-ம் திருநாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒரு திருத்தேரில் சுவாமியும், அம்பாளும், மற்றொன்றில் அகிலாண்டேஸ்வரி தாயாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் தேங்காய் உடைத்து தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச்சிவாயா என்ற முழக்கங்களை எழுப்பியபடி சிவனடியார்கள் முன் செல்ல திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். முதலாவதாக சுவாமியும், அம்பாளும் அருள் பாலித்த தேரை பக்தர்கள் இழுத்துவந்து நிலைக்கு வந்த பின்னர், அகிலாண்டேஸ்வரி தாயாரின் தேர் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. தேரானது 4 வீதிகளிலும் வலம் வந்து பின்னர் நிலையை வந்தடைந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் பெற்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வியாபாரிகள் சார்பில் தண்ணீர்பந்தல், அன்னதானம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் உள்ளிட்ட கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

x