மஞ்சமல்லி மந்திரபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் @ திருவிடைமருதூர்


தஞ்சை: திருவிடைமருதூர் வட்டம், மஞ்சமல்லியில் உள்ள பிரகன்நாயகி உடனுறை மந்திரபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலுக்குட்பட்ட இந்தக் கோயில் மிகவும் பழமையானதாகும். இந்தக் கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணி மேற்கொள்ள கோயில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டு, அதன் பணிகள் நிறைவடைந்துவயொட்டி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன அம்பலவாண தேசிக பராமச்சாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19-ம் தேதி எஜமான் அனுக்ஞை, 20-ம் தேதி நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, 21-ம் தேதி கிராம தேவதையை கலாகர்ஷனம், முதல் யாகசாலை பிரவேசம், இரவு மகாபூர்ணாஹூதி, 22-ம் தேதி 2- ம் மற்றும் 3- ம் கால யாக பூஜை மற்றும் மருந்து சாத்துதல் நடைபெற்றது.

பிரதான விழாவான நேற்று, காலை பரிவார யாக பூஜையும்,6.30 மணி முதல் 7.30 மணிக்குள் அய்யனார், செல்லியம்மன், மாரியம்மன் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், 10 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், மகா தீபாதரனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.