சுசீந்திரம் கோயிலுக்கு புனித நீர் வரும் பாதையில் இறந்துகிடந்த பசுமாடு!


சுசீந்திரம் கோயில்

இந்திரன் புனிதம் அடைந்த தலம், சிவன், பிரம்மன், விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒருசேர காட்சி தரும் ஆலயம் என மட்டில்லாத சிறப்பு கொண்ட சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலுக்கு புனித நீர் வந்துசேரும் கால்வாயில் இறந்துகிடந்த பசுமாடு நேற்று எலும்புக்கூடாக மீட்கப்பட்டது. இது ஆன்மிக அன்பர்களை மிகவும் வருத்தம் அடையவைத்துள்ளது.

எலும்புக் கூடாக காட்சியளிக்கும் மீட்கப்பட்ட மாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. ஆன்மிகத்தையும் தாண்டி பல வரலாற்று நிகழ்வுகளோடும் இந்த ஆலயத்திற்கு தொடர்பு உண்டு. சுதந்திர போராட்டக் காலத்தில் சுதந்திர வேள்வி சுடர்விட்டு எரிந்தபோது சுசீந்திரம் கோயில் தேரில் அன்றைய கால காங்கிரஸ் கொடி கட்டிய சம்பவம் முதல் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் லாட்டரி சீட்டு நடத்தி இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் எழுப்பியதுவரை வரலாற்றிலும் இந்த ஆலயத்திற்கு முக்கிய இடம் உண்டு.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்படும். அதன் ஒருஅங்கமாகத் தெப்பத் திருவிழாவும் நடப்பது வழக்கம். கோயிலின் அருகிலேயே நான்கரை ஏக்கர் பரப்பளவில் தெப்பக்குளம் உள்ளது. இந்தத் தெப்பக்குளத்தில் தான் தெப்பத் திருவிழா நடைபெறும். இந்தத் தெப்பக்குளத்திற்கு மணக்குடியான் கால்வாய் வழியே சோழன் திட்டை அணைக்கட்டில் இருந்து தண்ணீர்வரும். இப்போது பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான மணக்குடியான் கால்வாயே ஆக்கிரமிப்பின்பிடியில் உள்ளது.

இதனாலேயே சோழன் திட்டை அணைக்கட்டில் இருந்து ஆஸ்ராமம் வழியாக சுசீந்திரத்திற்கு அடிமடை ஒன்று நிறுவப்பட்டு, அதன் வழியாகவே தண்ணீர் வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக இங்கே சித்திரை தெப்பத் திருவிழா நடைபெறவில்லை. இதனால் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்படாமலும், அழுக்கான தண்ணீரை வெளியேற்றாமலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனிடையே சித்திரைத் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு குளத்திற்கு புதிய தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் துவாரகை கிருஷ்ணன்கோயில் பகுதியில் உள்ள கிணறு போன்ற மேனுவலைத் திறந்து அதுவழியே இறங்கி சுத்தம் செய்தனர். அப்போது அதிலிருந்து இறந்துபோன பசுமாடு ஒன்று எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது.

இந்த கால்யாய் வழியே தான் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருகின்றது. இங்குதான் சுவாமிக்கு ஆராட்டு விழாவும் நடந்திருக்கிறது. பசுமாடு இறந்து எலும்புக்கூடாக மீட்கப்பட்ட தண்ணீரையே திருக்கோவில் பயன்பாட்டுக்கு பயன்படுத்தியிருப்பது ஆன்மிக அன்பர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆகமவிதிகளைப் பின்பற்றி இதற்கு உரிய பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

x