பிக்குகளுக்கான போதனைகள் மிகவும் வலுவானவை. பிக்குகள் மிகவும் சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்பது புத்தரின் கட்டளை என்றுகூட சொல்லலாம். அவர் பிக்குகளுக்காக ஆற்றிய உரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. நல்லொழுக்கத்தின் தேவை பிக்குகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் மிகவும் அவசியமானது என்பது பௌத்தத்தின் கருதுகோள்.
ஒருமுறை அநாதபிண்டிகரின் ஆசிரமத்தில் புத்தர் தங்கியிருந்த போது அவரை வந்து சந்தித்தார் மிகுந்த அறிவுப்பெற்ற ஒருவர். அவர் புத்தரிடம் மனிதர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்று வினவினார். பதினோரு காரணங்களை புத்தர் கூறினார்.
அவற்றில் ஒன்று தீய குணமுடையோர் பற்றியது,
“தீய குணமுடையவர்கள் தங்களையே மிகப்பெருமையாகப் பேசிக்கொள்வர். ஒழுக்கமுடையவர்களிடம் அவர்களுக்கான எதையும் அவர்கள் அறியமுடியாது. தீய நெறியாளரின் கொள்கைகளையே அவர்கள் எப்போதும் ஆதரிப்பார்கள். இது மனிதர்கள் வீழ்ச்சியுறுவதற்கான இரண்டாம் காரணம்” (புத்தமும் அவர் தம்மமும் 3293)
தீமைகளிலிருந்து விலகி இருப்பது மகிழ்ச்சிக்கான வழி. துயரமில்லாத, அவமானங்களில்லாத வாழ்க்கை வேண்டும் என்றால் எவை தீமை என்பதை அறிந்து அவற்றை ஆற்றாமலிருப்பது.
பொய்யுரைப்பவர்
துன்பநிலையை அடைவர்
தீமையொன்றைப் புரிந்துவிட்டு
இல்லையென்போர்
துன்பநிலையடைவர்
இருவரும் தீயவர்
இருவரும் ஒன்றாய் உழல்வர்
துன்பநிலை அதிகமிருக்கும் இருப்பிடத்தில் (தம்மபதம் 306)
தீயவர்கள் எங்குமிருக்கலாம். ஏன் துவராடை அணிந்தவர்களிலும் தீயவர்கள் இருக்கலாம். அவர்களின் வார்த்தைகள் தீமையைத் தரக்கூடியன. அவர்களின் செயல்கள் தீமையைத் தரக்கூடியன. அப்படி என்றால் அத்தகையவர்களும் துன்பத்தில்தான் உழல்வார்கள். அவர்கள் இல்லறத்தாராக இருந்தாலும் பிக்குகளாகவே இருந்தாலும் இதுதான் நியதி. பிக்குவாக மாறிவிட்டார் ஒருவர் என்றால் அவர் உயர்நிலையை அடைந்திருக்க வேண்டுமே ஒழிய ஒருபோதும் தீயவராக ஆகக்கூடாது. அப்படி ஆகிவிடுவாராகில் அவருக்குத் துன்பத்திலிருந்து விலக்கென்று எதுவும் இல்லை. அவரும் துன்பத்திற்குள்ளாவார் என்பதுதான் புத்தரின் சமத்துவத்திற்கானக் கோட்பாடு.
வார்த்தைகளிலும்
செயல்களிலும்
ஒழுக்கம் இல்லாதவர்
துறவியர் உண்ணும் பிச்சையை
உண்பதைவிட
செவ்வண்ணத்தில் எரியும்
இரும்புப் பந்தை உண்ணலாம் ( தம்மபதம் 308)
ஐந்து ஒழுக்கங்களில் ஒன்று பிறழ்காமம் கொள்ளாமை. தன் மனைவியிடம் நிறைவு கொள்ளாமல் பிறர் மனைவிகளிடமோ அல்லது வேறுவகைகளிலோ பிறழ்காமம் கொள்பவர்கள் தங்களுக்கான மதிப்பை இழந்துவிடுகிறார்கள் என்கிறார் புத்தர். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டது இது. இன்றைக்கும் நம்மால் பார்க்க முடிகிறது, பெரிய பதவிகளில் இருப்பவரிலிருந்து சாதாரண மனிதர்வரை இந்தத் தீய ஒழுக்கத்தினால் எத்தகைய மோசமான அவமதிப்பைப் பெறுகிறார்கள் என்பதை தம்மபதம் கூறுகிறது
ஒழுக்கத்தில் விழிப்பற்ற
பிறன்மனை நேசிப்பவர்களுக்கு
மதிப்புப் போகும்
தொந்தரவான துக்கம்
அஞ்சத்தக்க பழி
துக்கநிலை
இந்நான்கும் பரிசு (தம்மபதம் 309)
இது ஆணுக்கு மட்டுந்தானா? பெண்ணுக்கும்தான். பயந்துகொண்டு இப்படி பிறர் இல் விழையும் ஆணும் பெண்ணும் கூடிப்பெறும் இன்பம் மிகவும் சிறியது. ஆனால், அதற்காக அவர்கள் பெறும் தண்டனையோ மிகப்பெரியது. அது வேறெந்த தீமைக்கும் இல்லாத பெருந்தண்டனையாக இருக்கும். எனவே ஆணோ பெண்ணோ பிறன்மனை நோக்காதிருப்பது மிகவும் நலம் தரும் செயலாகவே இருக்கும்.
தீயவற்றைச் செய்ய ஒருபோதும் துறவைப் பயன்படுத்தக்கூடாது. தவறாகப் பறிக்கப்படும்போது பறிப்பவரின் கைகளை ‘குசப்புல்’ குத்தி விடும். அது வலியைத் தரும். அதுபோல்தான் துறவையும் தவறாகப் பயன்படுத்தினால் அது துன்பத்தைத் தரும். அவர்கள் துறவியராக இருந்தாலும் அவர்களின் துறவறத்தால் ஒரு நன்மையும் இல்லை. துவராடை என்னும் துறவியர் ஆடை அணிந்திருந்தாலும், அவர்கள் உயர்வடையவில்லை என்றால் அவர்கள் மதிப்பற்றவர்கள்தான்.
எந்தச் செயலிலும் உறுதியாக இருக்க வேண்டும். நன்மை மட்டும் ஆற்ற வேண்டும். தீயன செய்தல் கூடாது. தவறான பழக்கங்கள் கூடாது. ஐயத்திற்கிடமிலாதாத தூய்மை இவை மட்டுமே நன்மை பயக்கும். இவற்றுக்கு எதிராக இருப்பின் துன்பத்தைத் தவிர வேறு இல்லவே இல்லை. இது மிகவும் எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடியது.
எனவே எதைச் செய்தாலும் அதைச் சரியாக செய்யவேண்டும். ஆற்றலோடு செய்ய வேண்டும். அப்படி செய்ய ஒரு துறவியே தவறிவிடுவாராகில் அவர் வெறும் தூசியைத்தான் சிதறடிக்க முடியுமே தவிர வேறெதையும் செய்ய முடியாது.
ஒரு எல்லைபுற நகரம் எப்படி உள்ளேயும் வெளியேயும் காவல் காக்கப்படுமோ அப்படித்தான் ஒவ்வொருவரும் அகத்தையும் புறத்தையும் தீமைகள் அண்டாமல் காவல் காக்க வேண்டும். நல்வாய்ப்புகள் வரும்போது அவற்றைத் தவற விடக்கூடாது. வெட்கப்படவேண்டியவற்றுக்கும் அஞ்ச வேண்டியவற்றுக்கும் குற்றத்தையும், வெட்கப்பட வேண்டாதவற்றுக்கும் அஞ்ச வேண்டாதவற்றுக்கும் குற்றமில்லாததற்கும் வேறுபாடுகளை உணர்ந்து, தவறான பாதையைத் தவிர்த்து நடந்தால் வாழ்வில் மகிழ்ச்சி பெறலாம். இல்லையென்றால் துன்பத்தைக் காணலாம்.
தவறைத் தவறாகவும்
சரியைச் சரியாகவும்
உணர்பவர்கள்
சரியானப் பார்வையால்
இன்புறுநிலை எய்துவார்கள். (தம்மபதம் 319)
(தம்மம் தொடரும்)
கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.comவந்த வேலையை மட்டும் பார்க்கணும்!