ரூ.30 லட்சத்தில் 2 மின்சார பேருந்துகள்: பழநி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடை!


பழநி: பழநி முருகன் கோயிலுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் 2 மின்சார (பேட்டரி) பேரூந்துகளை சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் இன்று (ஜூன் 22) நன்கொடையாக வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தனியார் வாகனங்களை கிரிவீதியில் அனுமதிக்க கூடாது. பக்தர்களின் வசதிக்காக பேட்டரி, மின்சார வாகனம் இயக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தனியார் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சென்று வர வசதியாக பேட்டரி கார்கள், மினி பேருந்து மற்றும் மின்சார பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த நியூ டெல்டா கியர் நிறுவன உரிமையாளர்கள் ஸ்ரீநிஷா இளமாறன், சரவணன், சுமதி, செல்வம் ஆகியோர் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 2 மின்சார பேருந்துகளை இன்று (ஜூன் 22) சனிக்கிழமை காலை நன்கொடையாக வழங்கினர்.

இதை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, பழநி அடிவாரம் பாத விநாயகர் கோயிலில் மின்சார பேருந்துகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கிரிவீதியில் இயக்கப்பட்டது. இந்த பேருந்தில் 22 பேர் வரை பயணிக்கலாம் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.