12 மணி நேரத்தில் விலக்கப்பட்ட 144 தடை உத்தரவு


சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரம் நகரில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த ஒரு மாத காலத்துக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு 12 மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்டது.

நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடை எனப்படும் கனகசபையில் பக்தர்கள் ஏறிச் சென்று நடராஜரை வழிபடுவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தீட்சிதர்கள் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. கரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டியும், கீழிருந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறியும் பக்தர்கள் சிற்றம்பல மேடையில் ஏறுவதற்கு தீட்சிதர்கள் அனுமதி மறுத்து வருகின்றனர்.

இதற்கு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சியினர், ஆன்மிக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் பெரும்பாலான நாட்களில் சிதம்பரம் கீழ வீதி, நடராஜர் கோயில் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை உருவாகிறது. போராட்டக்காரர்களை கைது செய்வதும், அவர்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதும் போலீஸாருக்கு கூடுதல் சுமையாக மாறியது.

இந்த நிலைமையை கண்காணித்து வந்த சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவி நேற்று மாலை 144 தடை உத்தரவு பிறப்பித்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னிதியில் மேடையேறி தேவாரம் திருவாசகம் பாடுவது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சட்டப் பிரச்சினைகள் காரணமாக அரசின் அடுத்த முடிவு சட்ட வல்லுனர்களால் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரையில் ஒரு மாத காலத்திற்கு சிதம்பரம் பகுதியில் மேற்கண்ட நடராஜர் கோயில் சம்பந்தமாக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கோட்டாட்சியர் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

கோட்டாட்சியரின் இந்த தடை உத்தரவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இந்த தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை அடுத்து நேற்று மாலை பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று காலையே திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் கவனித்துக் கொள்வதாக போலீஸார் உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையிலும், மக்கள் நலன் கருதியும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

x