தீட்சிதர்களுக்குள் தொடரும் மோதல்


சிதம்பரம் நடராஜர் கோயில்

நடராஜர் கோயிலின் உள்ளே இருக்கும் சிற்றம்பல மேடை எனப்படும் கனகசபையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்த விஷயத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் அடிக்கடி அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சக்திகணேஷ் தீட்சிதர் என்பவரை ஒரு தரப்பு தீட்சிதர்கள் தாக்கியதாக சிதம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு கோயிலுக்கு வழிபட வந்த ஜெயசீலா என்ற பெண்ணை சாதியை சொல்லி திட்டியதாக எழுந்த புகாரில் ஜெயசீலா பின்னணியில் ஒரு தரப்பு தீட்சிதர்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேற்று இரவு தீட்சிதர் ஒருவரை சக தீட்சிதர்கள் தாக்கியதாக மீண்டும் புகார் எழுந்துள்ளது.

நடராஜப் பெருமான்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் ஒருவரான கிருஷ்ணசாமி தீட்சிதர் (62) புதன்கிழமை இரவு கோயிலுக்கு வந்திருந்தார். அப்போது தீட்சிதர்கள் அலுவலகத்திற்கு சென்று தனக்கு லச்சார்ச்சனை நெய்வேத்தியம் பிரசாதம் தருமாறு கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த கோயில் செயலாளர் ராஜகணேசன் தீட்சிதர் என்பவருடைய தம்பி ரவிசெல்வன் தீட்சிதர், கிருஷ்ணசாமி தீட்சிதரிடம் உனக்கு பிரசாதம் தர முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில் ரவிசெல்வன் தீட்சிதர் கிருஷ்ணசாமி தீட்சிதரை கையால் அடித்து நெட்டி தள்ளி உதைத்தாராம்.

இதனால் வலி தாங்க முடியாத கிருஷ்ணசாமி தீட்சிதர், அருகில் இருந்தவர்களால் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அங்கு வந்த கிருஷ்ணசாமியின் மகள் தனது தந்தை மருத்துவமனையில் இருப்பதற்கு விருப்பமில்லை எனக்கூறி அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார். இந்நிலையில் தீட்சிதர் ஒருவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரிந்ததும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் பொருட்டு மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் கிருஷ்ணசாமி தீட்சிதர் (சட்டை இல்லாமல் இருப்பவர்)

நடராஜர் சன்னதி இருக்கும் கனகசபையில் பொதுமக்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், அனுமதிக்கக்கூடாது என மற்றொரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அவர்களுக்குள் இப்படி அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகிறது. காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கும் வழக்கத்தை மீண்டும் கோயில் தரப்பில் நடைமுறைப்படுத்தினால் இப்படிப்பட்ட சிக்கல்கள் இருக்காது என்கின்றனர் கோயில் மீது அக்கறை உள்ளவர்கள். பொது தீட்சிதர்கள் சபை இதை நடைமுறைப்படுத்துமா?

x