வாராணசிக்கு யாத்திரை சென்ற நடிகை சரண்யா: காரணம் இதுதான்!


நடிகையும் செய்தி வாசிப்பாளருமான சரண்யா வாராணசிக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளார்.

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர்களில் நடிகை சரண்யாவும் ஒருவர். கடந்த 2017-ம் வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். படங்களில் நடிக்க தனக்கு பெரிதாக ஆர்வம் இருந்தது இல்லை என்றவர், சின்னத்திரையிலேயே கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் விஜய் டிவியிலேயே ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், குறைவான டிஆர்பி காரணமாக அந்த சீரியல் பாதியிலே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்ட சரண்யா திடீரென காசி, வாராணசிக்கு பயணம் சென்றுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த திடீர் ஆன்மிக பயணம் குறித்து அவர் கூறுகையில், "உங்களுக்கு வயதான பிறகுதான் வாராணசி போக வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், இந்த வருடம் நான் ஹோலி பண்டிகையை எதாவது ஒரு தீவில் கொண்டாடுவதற்கு பதிலாக கங்கை ஆற்றங்கரையில் கொண்டாடுவதற்கு தேர்ந்தெடுத்தேன்.

இதற்கு அடிப்படையான காரணம் இத்தனை வருடங்களாக நான் படங்கள் வாயிலாக பார்த்து பிடித்ததாக இருக்கலாம். கங்கை கரையின் படகில் நான் பயணம் செய்யும்போது அங்கிருந்த நேர்மறையான எனர்ஜி என்னுடைய ஆன்மாவில் கலந்தது. அது என்னுள் தீவிரமாக இறங்கி உள்ளது. கொண்டாட்டம், உண்மை, கவலை, மகிழ்ச்சி என மனித வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகளும் இங்கு ஒரே நேரத்தில் அமைதியாக ஒன்றிணைவதை என்னால் உணர முடிகிறது. அதே சமயத்தில் வாழ்க்கையின் நம்பிக்கைகளை நீங்கள் இங்கு வண்ணமயமாக பார்க்கும்போது உலக ஆசைகள் அனைத்தும் வெறுமையாக தூள் தூளாக மறையும்’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

பலரும் வயதானால் தானே காசி, வாராணசிக்கு செல்வார்கள். இப்போது ஏன் திடீரென என்ற கேள்விக்கு சரண்யா தன்னுடைய சமூக வலைதள பதிவில் பதிலளித்துள்ளார். ‘ஏன்னு தெரியலை, திடீர்னு தோணுச்சு. கிளம்பி வாராணசி வந்துட்டேன். இந்த கங்கை நதிக்கரையில் பார்க்கும் மனிதர்கள் நம்பிக்கைகள் விதவிதமாக இருக்கு. படித்துறையில இறங்கி காலாற நடந்தால், ஒரு பக்கம் 24 மணி நேரமும் எரியுற பிணங்கள். அப்படியே திரும்பினா கலர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகில் உற்சாகமாக ‘சிவ சம்போ’ கோஷம் போடும் யாத்ரீகர்கள். சுற்றி இருக்கும் எது பற்றியும் கவலைப்படாமல் புகைக்கும் தேசாந்திரிகள்.

அசுத்தமாக இருந்தாலும் அதுதான் புண்ணியம் என கங்கையை நீரை பிளாஸ்டிக்கில் எடுத்து செல்லும் டூரிஸ்ட் குரூப்புகள். தானாக வந்து கதை சொல்லி காசு கேட்கும் கதை சொல்லிகள். முதுமையில் உயிர் பிரிய படித்துறையில் காத்திருக்கும் வயோதிகர்கள் என இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். இத்தனைக்கும் இடையில் மாலை கங்கையை நோக்கி ஆரத்தி நடந்த போது அங்கே காத்திருந்த பக்தர்கள் ஒரே குரலாக முழங்கிய போது நிச்சயம் ஒரு எனர்ஜி இருந்தது. எதை நம்புகிறோம் என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். ஆனால், நம்பிக்கை ஒன்றுதான்’ என தத்துவார்த்தமாக பேசியுள்ள சரண்யா வாராணசி, கங்கை, லக்னெள என வட இந்தியாவில் மகிழ்ச்சியாக கழித்த நாட்களுடைய புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

x