இரண்டாவது நாளாக சசிகலா தொடர்ந்த ஆன்மிக பயணம்


திட்டையில் குரு பகவானை வழிபடும் சசிகலா

தஞ்சைக்கு வந்து தங்கியிருக்கும் சசிகலா அங்கிருந்தபடியே இன்று இரண்டாவது நாளாகவும் கோயில்களுக்குச் செல்லும் தனது பக்தி பயணத்தை தொடர்ந்தார்.

தனது கணவரின் நினைவு நாளை முன்னிட்டு கடந்த 4 தினங்களுக்கு முன் தஞ்சைக்கு வந்திருக்கும் சசிகலா அருளானந்த நகரில் உள்ள தனது கணவரின் இல்லத்தில் தங்கி இருக்கிறார். அங்கிருந்தவாறு நேற்று ஒரு நாள் முழுக்க கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆன்மிக தலங்களுக்கு பக்திப் பயணம் மேற்கொண்டார். நேற்றைய நாளில் நவக்கிரக தலங்களில் 4 இடங்கள் உட்பட பல்வேறு முக்கிய கோயில்களுக்கு சென்று வந்த சசிகலா இறுதியாக அய்யாவாடியில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோயிலுக்கும் சென்று வழிபட்டார்.

இன்று காலை திரும்பவும் தனது ஆன்மிக பயணத்தை ஆரம்பித்தவர் முதலில் குரு பகவானின் பரிகார தலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அதனையடுத்து சோழர்கள் காலத்தில் இருந்து முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கும் புராணப் பெருமை வாய்ந்த வல்லம் ஏகௌரி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபட்டார்.

திருவானைக் கோயிலுக்கு வருகை தரும் சசிகலா

அதனையடுத்து திருச்சிக்கு சென்ற சசிகலா முதலில் திருவானைக்கோயில் சென்று அன்னை அகிலாண்டேஸ்வரியையும், ஈசன் ஜம்புகேஸ்வரரையும் வழிபட்டார். ஐயப்பன் குருக்கள் உள்ளிட்டவர்கள் உடனிருந்து சசிகலாவுக்கு சாமி தரிசனம் செய்து வைத்தனர். கோயில் யானை அகிலா, சசிகலாவுக்கு ஆசிர்வாதம் அளித்தது. அதனை தொடர்ந்து சமயபுரம் சென்று மாரியம்மனை வழிபட்டுத் திரும்பினார். அவருக்கு திருச்சி நகரின் பல்வேறு இடங்களில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

x