திருநெல்வேலி: திருநெல்வேலி காந்திமதி அம்பாள் சமேத சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான இத் திருக்கோயிலில் ஆனிப் பெருந் திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலையும், மாலையும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். விழாவின் 9- ம் நாளான நேற்று ஆனித்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருளினர். முன்னதாக விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டன. பின்னர் சுவாமி நெல்லையப்பர், பிரியாவிடை அம்பாளுடன்எழுந்தருளிய பெரிய தேர் இழுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹரஹர மகாதேவா, ஓம் நமச்சிவாய என கோஷமிட்டபடி தேரை இழுத்தனர்.
நெல்லையப்பர் தேர் தமிழகத்தில் மிகவும் உயரம் கொண்ட 3-வதுதேர் என்ற பெருமை கொண்டது. மேலும் இந்த தேர் முழுக்க முழுக்க மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்படுகிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 147 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் திருக்கோயிலின் உட்புறமும், வெளிப்புறமும் கண்காணிக்கப்பட்டது.
தேரோட்டம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
நான்கு முறை அறுந்த வடம்: பெரிய தேரை நேற்று காலை இழுக்கத் தொடங்கியதுமே அதன் நான்கு வடங்களில் மூன்று வடங்கள் அடுத்தடுத்து அறுந்தன. பின்னர், காந்திமதி அம்பாள் தேரில்இருந்து வடங்களை எடுத்து வந்து,பெரிய தேரில் பொருத்தி பக்தர்கள் இழுத்தனர். கூடுதலாக இரும்பு வடமும் பயன்படுத்தப்பட்டது. அப்படியும் நான்காவது முறையாக வடம் அறுந்ததால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து தேர்வடம் எடுத்துவரப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி தேருக்கு பின்னர், அம்பாள் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் இழுக்கப்பட வேண்டும். ஆனால், சுவாமி தேரோட்டமே தாமதமானதால், மற்ற தேர்கள் இழுக்க மிகவும் தாமதமானது.