வந்த வேலையை மட்டும் பார்க்கணும்!


சில பிக்குகள் இருந்தனர். அவர்கள் எப்போதும் அவர்களின் காலணிகளைப் பற்றியே கவலைக் கொண்டிருந்தனர். அவற்றைத் துடைப்பது அலங்கரிப்பது அவற்றை அணிந்து கொண்டு இங்கும் அங்கும் நடந்து பார்ப்பது என்று அவர்களின் சிந்தனை முழுவதும் அவர்களின் காலணிகள் மீதே இருந்தது. அவர்கள் எதற்காக பிக்குகள் ஆனார்கள் என்பதை மறந்து இந்த வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.

இந்தச் செய்தியை அறிந்த புத்தர் அவர்களை அழைத்துச் சொன்னார், “அன்பிற்குரியவர்களே, நீங்கள் முழுமையை அடைவதற்கான சுத்தமான தம்மத்தின் பாதைக்குள் இருக்கிறீர்கள். ஆனாலும் இன்னும்கூட நீங்கள் உங்கள் செருப்புகளைப் பற்றித்தான் கவலைப்படுகிறீர்கள்”.

புத்தர் சொன்னதைப் புரிந்துகொண்டனர் பிக்குகள். உடனே தாங்கள் மேற்கொண்ட பாதையை உணர்ந்தவர்களாய் விடுதலைக்கான தியானத்தைப் புரிய ஆரம்பித்தனர்.

இது ஒரு சிறு நிகழ்வுதான். ஆனால், அது தருகிற பேரர்த்தம் மிக உன்னதமானது மட்டுமல்ல மிகவும் முக்கியமானதும் கூட. நாம் வந்த வேலையை விட்டுவிட்டு சொந்த வேலையைப் பார்க்கிறவர்களாகத்தான் இருக்கிறோம். எவ்விடத்தில் எதற்கு வந்தோமோ அவ்விடத்தில் அவ்வேலையைச் செய்ய வேண்டும். ஆசைப்படாத பிக்குகளாக மாறிவிட்டு அழகான செருப்புக்காக வாழ்பவர்களாக இருக்கக்கூடாது.

சிற்றின்பத்தைக் கைவிடுவதால்

பேரின்பத்தை அடையலாம்

பேரின்பத்தை அடைய

சிற்றின்பத்தைக் கைவிடுபவர்

பேரறிவர். (தம்மபதம் 290)

தன்னின்பத்தை அடைவதற்காக ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது மிகவும் தவறானது, பிறருக்குத் துன்பம் தந்து அடையும் இன்பம் பெரும் ஆபத்தை விளைவிக்கும். தப்பிக்கவே முடியாத பகையை நமக்கு அது பெற்றுத்தரும். ஆகவே எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்பதை அறிந்து செயலாற்ற வேண்டும். அதைவிடுத்துச் செய்யக் கூடாதவற்றைச் செய்பவர் செருக்குடன் இருப்பவர். அவர் எந்த விழிப்புணர்வுமின்றி துன்பத்தைத் தரும் பற்றினை வளர்த்துக்கொள்கிறவர் ஆகிறார்.

அப்படியாகில் மனம் நினைத்தவற்றிற்கு ஏற்ப உடலைப் பழக்குதல் மிகவும் முக்கியம். பௌத்தம் உடலுக்குத் தரும் முக்கியத்துவம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. மனத்தையும் உடலையும் ஒன்றிணைக்கும் முறைமைகளை இன்று தாங்கள் சொல்வதைப்போல எத்தனையோ பேர் சொல்கிறார்கள். ஆனால், அவற்றை எல்லாம் முன்பே கூறியவர் புத்தர். உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கல், மனதை கட்டுக்குள் வைக்கும் மன அமைதிக்கானப் பயிற்சியைத் தருகின்றது பௌத்தம். அப்படி மனத்திற்கேற்ப உடலினை வளைத்து, செய்யக்கூடாதவற்றைத் தவிர்த்து எவற்றைச் செய்ய வேண்டுமோ அவற்றை மட்டும் செய்தால் துன்பம் வரும், பற்றுகள் இல்லாமல் போகும். எந்த மாயமோ மந்திரமோ இல்லாமல் நம் வாழ்க்கை முறையைச் செம்மைப்படுத்தினாலே போதும் வாழ்வு மகிழ்ச்சியானதாகிவிடும்.

துறவோர்களாகிய அறவோர்கள் எப்படி வாழ்கிறார்கள்? தம்ம பதம் கூறுகிறது,

ஆசை என்னும் தாயையும்

ஆணவம் என்னும் தந்தையையும் கொன்று

மனம், ஐம்பொறி இன்னல்களை வென்று

பிறவி நாட்டை அழித்து

பற்றென்னும் அரசினை வென்று

அறவோர் துன்பங்களை விடுவிக்கிறார்கள் (தம்மபதம் 294)

இப்படித்தான் துன்பங்களை விடுக்க வேண்டும். முற்றும் துறந்த முனிவர்களாகிய பிக்குகளுக்கு இது சரி. இது எப்படி இல்லறத்தாருக்குப் பொருந்தும் என்னும் கேள்வி உங்களுக்கு எழலாம். பௌத்தம் மட்டும்தான் இல்லறத்தார்க்கும் அறவோர்களாகிய பிக்குகளுக்கும் தனித்தனியே பாதைகளை வகுத்திருக்கிறது. நியாய உணர்வோடு பொருளீட்டி இன்பம் அனுபவித்து இல்லறத்தை நல்லறமாக்கும் அறமே அது. நான்கு இன்பங்களை இல்லறத்தார்க்கு புத்தர் வரையறுக்கிறார் 1. உடைமையின்பம் 2.இன்பம் துய்ப்பு 3.கடனற்றிருத்தல் 4.குற்றமற்றிருத்தல். இவற்றைப் பின்பற்றும் இல்லறத்தார்க்கு துன்பங்கள் ஏது?

ஆனால், பிக்குகள் எப்போதும் விழிப்புக்கொண்டே புத்தரைச் சிந்திக்கிறார்கள், தம்மத்தைச் சிந்திக்கிறார்கள், சங்கத்தைச் சிந்திக்கிறார்கள். பிற உயிர்களுக்குத் துன்பம் தராத அகிம்சையைச் சிந்திக்கிறார்கள். பிறப்பு இறப்பு ஆகியவற்றிலிருந்து அவர்கள் விலகியிருக்கிறார்கள்.

தம்மத்தில் முழுநம்பிக்கையும்

மேனறிவும் உடையவர்கள்

புகழ்

செல்வம்

செல்லுமிடமெல்லாம் சிறப்பு

உடையவராகின்றனர் ( தம்மபதம் 303)

நன்மைக்கும் தீமைக்கும் ஒரு தொலைவை அளக்கிறார் புத்தர். தொலைவில் இருந்தாலும் இமயம் தெரிவதைப் போல, நல்லவை தெரியும். அருகிலிருந்தாலும் எய்யப்பட்ட அம்பு தெரியாததைப் போல தீமைகள் தெரியாது. தீமைகள் தெரியாமலேயே அதிகமாக வேண்டாத புதர்போல வளர்ந்து விடும். அதில் துன்பப்பாம்புகள் எப்போதும் துயில் கொண்டிருக்கும். தூரத்திலிருந்தாலும் தெரிகின்ற நன்மையைப் போல் எப்போதும் நாம் இருக்க வேண்டும் என்பதுதான் பௌத்தம்.

தனிமையில் அமர்ந்து

தனிமையில் இருந்து

தனிமையாய்த் தியானித்து

தனிமையில் அடக்காமாய் இருப்பவர்

காட்டிலும் மகிழ்வர் (தம்மபதம் 305)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
புத்தர் வெறும் கைக்காட்டி மரம்!

x