அருள்தரும் சக்தி பீடங்கள் – 15


அம்மனின் சக்தி பீட வரிசையில் துவாரகாபுரியில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயில் அருகே உள்ள ருக்மணி தேவி கோயிலும் ஒன்று. குஜராத் மாநிலத்தின் கோமதி நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள துவாரகா நகரத்தில், ருக்மணி என்ற பெயரில் ஆதிசக்தி அருள்பாலித்து வருகிறார்.

108 வைணவத் தலங்களுள் ஒன்றான துவாரகாதீசர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது ருக்மணி தேவி கோயில். துவாரகாதீசன், துவாரகா நாதன், கல்யாண நாராயணன் ஆகிய பெயர்களைத் தாங்கி கிருஷ்ண பரமாத்மா இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். கல்யாண நாச்சியார், லட்சுமி தேவி, ருக்மணி தேவி ஆகிய பெயர்களைத் தாங்கி இதே தலத்தில் தனி கோயிலில் ஆதிசக்தி அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

தங்கை தேவகிக்கு பிறக்கும் குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்ற அசரீரியின் வாக்கைக் கேட்ட அரசன் கம்சன், அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை அழித்து வந்தான். தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையான கிருஷ்ண பரமாத்மாதான் கம்சனை அழிக்கப் போகிறார் என்பது ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டதால், கிருஷ்ணர் பிறந்து, இடமாற்றம் செய்யப்பட்டு கோகுலத்தில் நந்தகோபர் – யசோதை மைந்தனாக வளர்ந்து வந்தார்.

துவாரகா கிருஷ்ணர் கோயில்...

உரிய நேரம் வந்ததும் கிருஷ்ணர், கம்சனை மாய்த்து, உக்ரசேனனை மதுராவுக்கு அரசனாக்கினார். இது கம்சனின் மாமனார் ஜராசந்தனுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதனால் ஜராசந்தன், கிருஷ்ணருடன் போரிட்டு, மதுராவைக் கைப்பற்றத் தயாராக இருந்தார். இச்செய்தி, கிருஷ்ணருக்கு தெரிய வந்தது. ஜராசந்தன் படையெடுத்து வரும்போதெல்லாம் யாதவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரை விரட்டியடித்தார்கள். இப்படி பதினேழு முறை யாதவர்களிடம் தோற்றார் ஜராசந்தன்.

தக்க தருணம் பார்த்து பதினெட்டாவது முறையாக போரிடத் தயாராக இருந்தார் ஜராசந்தன். அப்போது போரின் நிலைமை தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த கிருஷ்ணர், மதுரா நகரத்தில் இருந்து யாதவர்களை வெளியேறப் பணித்தார். ஜராசந்தன் அவமானப்படுத்தப்பட்டதை அறிந்த, அவரது மகன் காலயவனன், மதுரா நகரைத் தாக்குவதற்குத் தயாரானான். தற்போது இரண்டு எதிரிகள் ஆகிவிட்டதால், கிருஷ்ணர், தன் அண்ணன் பலராமனையும், யாதவர்களையும் அழைத்துக் கொண்டு மதுராவை விட்டு கிளம்பினார்.

துவாரகா கிருஷ்ணர் - ருக்மணி

மேற்கு கடற்கரைப் பக்கம் வந்து, ஒரு புதிய நகரை உருவாக்குவதற்காக, சமுத்திரராஜனிடம், 12 யோசனை தூரம் கடலில் இடம் கேட்டார் கிருஷ்ணர். சமுத்திரராஜனும் அதற்கு உடன்பட்டு இடம் தருகிறார். அதே இடத்தில் ஒரே இரவில் தங்கத்தால் ஆன நகரத்தை உருவாக்குகிறார் கிருஷ்ணர். இந்த இடமே துவாரகா என்று அழைக்கப்படுகிறது.

ருக்மணி தேவி

துவாரகையில் கிருஷ்ணர் இருந்தபோது, சௌராஷ்டிரா தேசத்து மகாராஜாவின் மகள் ருக்மணி தேவிக்கு தீயவர்களால் ஆபத்து நேர இருந்தது. சிசுபாலன் என்பவர் ருக்மணி தேவியை மணக்க எண்ணினார். ஆனால், ருக்மணி தேவிக்கு கிருஷ்ணரை மணம் புரியவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்நிலையில் ருக்மணி தேவியின் சகோதரனான ருக்மண், கிருஷ்ணர் மீது தீராக பகை கொண்டவராக இருந்தார். ஆதிசக்தியின் அம்சமாக இத்தலத்தில் அவதரித்த ருக்மணி தேவிக்கு, அதர்மத்தில் ஈடுபடும் சிசுபாலன், ருக்மண் ஆகியோர் மீது வெறுப்பு வந்தது. கிருஷ்ணரும் அதர்மத்தை அழிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் என்பதால், துவாரகாபதியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

ருக்மணி தேவியின் எண்ணத்தை உணர்ந்த கிருஷ்ணர், அவரை தேரில் ஏற்றிச் சென்று மணம்புரிந்து கொண்டார். இச்செயலால் கோபம் கொண்ட சிசுபாலன், கிருஷ்ணரை வீழ்த்த எண்ணினார். இந்த நேரத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் மூண்டது. சிசுபாலன் கவுரவர்களை ஆதரித்துப் பேசி, கிருஷ்ணரை அவமதித்தார். இதைத் தொடர்ந்து, தனது சுதர்சன சக்கரத்தைக் கொண்டு சிசுபாலனை, கிருஷ்ணர் மாய்த்தார்.

ருக்மண், தன் படைகளைத் திரட்டிக் கொண்டு, பாண்டவர்களை சந்திக்கிறார். பாண்டவர் படை சிறிய அளவில் இருப்பதால் அவர்களுக்கு போரில் உதவிபுரிவதாக ருக்மண் வாக்களிக்கிறார். உதவ வந்திருந்தாலும் ருக்மணின் ஆணவப் போக்கு பாண்டவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதர்ம வழியில் செல்லும் தன் சகோதரனை, ருக்மணி தேவி வெறுத்து ஒதுக்கினார். பாண்டவர்கள், ருக்மணி தேவியின் போக்கால் அவமானம் அடைந்த ருக்மண் போரில் கலந்து கொள்ளாது ஒதுங்கினார்.

அதர்மத்தின் வழி செல்லும் நபர் தன் சகோதரனாக இருந்தாலும், தாட்சாயணி போலவே தானும் சொந்த பந்தங்களைப் பார்க்காமல், தர்மத்தின் வழி நின்றார் ருக்மணி தேவி. சிவசக்தி என்று பெயர் பெற்றவரே வைஷ்ணவி என்ற பெயரைத் தாங்கி இங்கு அருள்பாலிக்கிறார். காளியாக உருவெடுத்து தட்சணையும், அவர் செய்த யாகத்தையும் அழித்த தேவியே, கிருஷ்ணரின் பிராட்டியாக அவதரித்துள்ளார்.

துவாரகாதீசர் கோயில் அமைப்பு

கோமதி நதி கடலோடு கலக்கும் இடத்தில் துவாரகா நகரம் அமைந்துள்ளது. கோமதி நதியின் சங்கமத்தில் 12 துறைகள் உள்ளன. அவை பிரம்ம காட், சாதன் காட், வசுதேவ காட், காவூ காட், பார்வதி காட், பாண்டவா காட், பலி காட், ரங்கம் காட், நாராயணன் காட் என்று பெயர் பெற்றுள்ளன. இங்கு ரிஷபா குண்டம் என்ற தீர்த்தம் உள்ளது. கோமதி நதியிலும் ரிஷபா குண்டத்திலும் அவசியம் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் இருந்த துவாரகா நகர் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது. கி.பி 8 முதல் 10-ம் நூற்றாண்டுகளில் அந்நிய படையெடுப்பால் துவாரகா நகரம் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர், 15, 16-ம் நூற்றாண்டுகளில் குஜராத்தை ஆட்சிபுரிந்த சாளுக்கிய அரச வம்சத்தினர், தற்போதுள்ள கோயிலைக் கட்டியுள்ளனர்.

இந்தக் கோயில் சோமநாதர் கோயில் போல அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோமதி நதிக்கரையை ஒட்டி உயரமான இடத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 56 படிக்கட்டுகள் ஏறி, இக்கோயிலுக்குச் செல்ல வேண்டும். நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின் உயரம் 51.8 மீட்டர். 72 தூண்களைக் கொண்டு பெரிய நுழைவாயில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில், சிரசில் கொண்டையுடன், 3 அடி உயரத்தில் நின்ற கோலத்தில், மேற்கு நோக்கி, கரிய திருமேனி கொண்டவராக துவாரகாதீசர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயில் பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய பகுதிகள் அனைத்தும் 5 மாடங்களைக் கொண்டுள்ளன. ஐந்தாவது மாடம் 60 தூண்களால் தாங்கப்பட்டுள்ளது. கோயில் விமானத்தின் மீது வெள்ளை நிறக் கொடி எப்போதும் பறந்து கொண்டிருக்கும். வெள்ளை நிறம் அமைதியையும் சமாதானத்தையும் குறிப்பதால், இப்பகுதிக்கு (துவாரகாதீசர் கோயில், சக்தி பீடம்) வருபவர்கள் மன அமைதியையும், சமாதானத்தையும் அடைவது உறுதி என்று கூறப்படுகிறது. சூரியன், சந்திரன் பொறிக்கப்ப்ட்ட இக்கொடி ஒருநாளில் 5 முறை ஏற்றப்படுகிறது. இக்கோயிலில் கிருஷ்ணரின் தாய் தேவகிக்கும் சிறு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

துர்வாசரின் சாபம்

துவாரகாதீசர் கோயிலுக்கு வடக்கே ஒரு மைல் தூரத்தில் ருக்மணி தேவி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள இடமே எவ்வித பூஞ்சோலை, மரங்கள், மாளிகைகள், தாமரை தடாகங்கள் இன்றி காணப்படுகிறது. இதற்கு துர்வாச முனிவரின் சாபம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஒருசமயம், ருக்மணி தேவி, கிருஷ்ணருக்கு பணிவிடைகள் செய்து கொண்டிருந்தபோது, துர்வாச முனிவர் அங்கு வந்தார். அவரை ருக்மணி தேவி வரவேற்கவில்லை என்பதால், அந்த நாடே பாழாகப் போகும்படி முனிவர் சாபம் விடுத்ததாகக் கூறப்படுகிறது. கணவருக்கு பணிவிடை செய்வதே ஒரு பெண்ணின் முக்கிய கடமை என்பதை நினைத்து, துர்வாச முனிவரின் சாபத்தையும் ஏற்றார் ருக்மணி தேவி.

சில காலம் அரண்மனையில் இருந்து வெளியே தனித்து இருந்ததால், ருக்மணி தேவிக்கு தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கணவனை அவமதித்த தட்சனை தாட்சாயணி பகையாகக் கருதினார். அதுபோலவே ருக்மணி தேவியும், கணவருக்குப் பிறகுதான் மற்ற உறவினர்கள் என்பதைக் கடைபிடித்தார். ருக்மணி தேவி கோயில் சுவர்களில் துர்வாசர் சாபமிட்ட சம்பவம், பிறகு விமோசனம் பெற்ற சம்பவம் ஆகியன சித்திரங்களாக தீட்டப்பட்டுள்ளன.

துவாரகா சிறப்பு

துவாரகாவில் சித்தேஸ்வரர் கோயில் உள்ளது. சுவாமியைச் சுற்றி நாகபாணம் அமைத்து வழிபாடு நடைபெறுகிறது. இங்கிருந்து 30 கிமீ தொலைவில் பேட்டி துவாரகா உள்ளது. இது தனித் தீவாக இருக்கிறது. துவாரகையைத் தலைநகராக வைத்துக் கொண்டு, தன் குடும்பத்தினர் தங்குவதற்காக, கிருஷ்ணர், போட்டி துவாரகாவைப் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

துவாரகாவில் கிருஷ்ணர் இல்லம், ருக்மணி தேவி வீடு, சத்தியபாமா இருப்பிடம், ராதையின் வீடு என்று தனித்தனி பகுதிகள் காணப்படுகின்றன. பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமாக துவாரகா விளங்குகிறது.

துவாரகா கிருஷ்ணர் பிரசாதம்

கிருஷ்ணரின் நண்பர் சுதாமா (குசேலர்) பிறந்த இடம் என்பதால், ஒருகாலத்தில் இவ்வூர் சுதாமாபுரி என்று அழைக்கப்பட்டது. சுதாமாவுக்கு இங்கு தனி கோயில் உள்ளது. பக்த மீரா மேவாரில் இருந்து, இத்தலத்துக்கு வந்து, கிருஷ்ணரோடு இரண்டறக் கலந்தார்.

திருவிழாக்கள்

கிருஷ்ண ஜென்மாஷ்டமி இங்கே வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். அதையொட்டி ‘மட்கோபாட்’ என்ற உறியடி நிகழ்ச்சி நடைபெறும். ‘பாவன் பேடா’ என்ற நடனத்தை பெண்கள் ஆடுவர். ஒவ்வொரு பெண்ணும் 52 பானைகளை தலையில் சுமந்து ஆடுவதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். தீபாவளி, ஹோலி, குஜராத் புத்தாண்டு தினங்களில் இங்கே கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். இந்நாட்களில் துவாரகாதீசர் நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

துவாரகா கிருஷ்ணர் - ருக்மணி

தினமும் காலையில் திருப்பள்ளியெழுச்சியின்போது (உடாபன்) கிருஷ்ணருக்கு தங்கப் பல்குச்சியால் பல்விளக்கி, லட்டும் ஜிலேபியும் நைவேத்தியம் செய்யப்படும். இதுபோல, 17 முறை பலவித பலகாரங்கள் நைவேத்தியம் செய்து, மணிக்கு ஒரு தடவை கிருஷ்ணருக்கு உடை மாற்றுவதும் நடைபெறுகிறது.

x