வரவு, செலவுக்கு பேனர் வைத்த கோயில் நிர்வாகம்


காடுனா சிங்கம் இருக்கணும், கோயில்னா எங்க சங்கம் இருக்கணும் என சில ஆண்டுகளுக்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் ஒரு வசனம் இடம் பெறும். கோயில் திருவிழா நிகழ்ச்சி தொடர்பாக படத்தில் வரும் காட்சி ஒன்றில் உள்ள வருத்தப்படாத வாலிபர் சங்க நிர்வாகிகளை மொட்டை ராஜேந்திரன் பேச அழைக்கும்போது பரோட்டோ சூரி மேற்குறிப்பிட்ட வசனத்தை பேசி கலகலப்பூட்டுவார்.

கூடவே கோயில் திருவிழாவுக்கென வசூல் செய்யும் பணத்தை ஆட்டைய போட்டுக்குறது தான் காலம் காலமாக நடக்கிற வேலை என்றும் பரோட்டோ சூரி கொளுத்திப் போடும் வசனத்தால் கூச்சல் குழப்பமும், கைகலப்பும் ஏற்படும். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இடம் பெறும் இக்காட்சிகளை, கோயில் திருவிழா செலவு கணக்கு காண்பிக்கும் கூட்டங்களில் பரவலாக காணமுடியும். ஆனால் இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் வெடிக்கூடாது என்பதற்காக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மாசித்திருவிழா கோயில் செலவு கணக்குகளை கோயில் நிர்வாகத்தினர் பிளக்ஸ் பேனர் அடித்து, அதை மக்களின் பார்வைக்கு வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் நிர்வாகி ஆர். பிரகாஷ்

இதுகுறித்து கோயில் நிர்வாகி ஆர். பிரகாஷ் கூறுகையில், "குமாரபாளையத்தில் காளியம்மன், மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா வெகு பிரசித்தி பெற்றவை. இந்தாண்டு விழா பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி நிறைவு பெற்றது. இந்த விழா நடைபெறும் சமயத்தில் நகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் மாசித் திருவிழா நடைபெறுவது வழக்கம். கோயில் திருவிழாவுக்காக பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யப்படு வழக்கம். இந்த செலவு கணக்குகளை திருவிழா முடிந்ததும் ஊர் பெரியவர்களை அழைத்து காண்பிக்கப்படுவது வழக்கம். ஒரு சில கோயில்களில் இதுவும் நடக்காது. இதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும். அடுத்தமுறை கோயில் திருவிழா செலவுக்காக பணம் கேட்டால் மனமுவந்து கொடுக்கமாட்டார்கள்.

இதுபோன்ற எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக குமாரபாளையம் ஸ்ரீ சக்தி மாரிம்மன் கோயில் மாசித் திருவிழாக்கான வரவு, செலவு, மீதமுள்ள தொகை, இதர வரவு மற்றும் கையிருப்பில் உள்ள தொகை ஆகியவற்றை குறிப்பிட்டு பிளெக்ஸ் பேனர் வைத்துள்ளோம்.

இதுதொடர்பாக நேரடியாக கேட்டாலும் வரவு, செலவை காண்பிப்போம். வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக திருவிழா வரவு செலவுகள் குறித்து பேனர் வைத்துள்ளோம். கையிருப்பில் உள்ள தொகை கோயில் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும். தவிர, மக்களை அழைத்து கூட்டம்போட்டும் வரவு செலவுகள் குறித்து தெரிவிப்போம்" என்றார்.

மக்கள் சொத்தே மகேசன் சொத்து என்பதை நிரூபிக்கும் வகையில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் குமாரபாளையம் கோயில் நிர்வாகத்தினருக்கு வாழ்த்துகள்.

x