புத்தர் வெறும் கைக்காட்டி மரம்!


பயணம் வாழ்க்கையின் ஒரு குறியீடாகிவிடுகிறது. பயணத்தில் தொடக்கம், முடிவு இருப்பதைப் போல வாழ்விலும் இருக்கிறது. பயணத்தின்போது நாம் விரும்பியதைச் செய்வதைப்போல வாழ்க்கையிலும் விரும்பியதைச் செய்கிறோம். பயணத்தில் நாம் விரும்பாதவைகளும் நிகழ்ந்துவிடுவதைப்போலத்தான் வாழ்க்கையிலும். நாம் விரும்பாதவைகள் எத்தனையோ வந்து சேர்ந்துவிடுகின்றன. ஆனாலும் பயணத்தின் வழி நாம் மகிழ்ச்சியை அடைகிறோம்.

வாழ்க்கையிலும் நாம் மகிழ்ச்சியை அடைய வேண்டும் என்பதற்காகக் காட்டப்பட்ட வழி பௌத்த வாழ்வு முறை. இந்த வாழ்வு முறையில் நாம் எப்படி பயணிக்கிறோம் என்பது முக்கியமானது. இன்பம் துன்பம் என்னும் இரு கரைகள் உயர்ந்து நிற்க வாழ்க்கை நதி உருண்டோடிக்கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் உலகில் பிறந்துவிட்ட உயிர்கள் தங்கள் மரணத்தை நோக்கித்தான் நடக்கின்றன. அதற்குள் என்னென்ன முடியுமோ அத்தனையையும் சாதிக்க முயல்கிறோம். சிலர் வெல்கிறார்கள். சிலர் தோற்றுவிடுகிறார்கள். புறவாழ்வு இப்படிப் போகையில் அகவாழ்வு எப்படி இருக்கிறது என்பது அவரவர் அகத்திற்கு மட்டுந்தான் தெரியும். அகவாழ்வையும் மகிழ்ச்சியாக ஒருவர் நடத்துவதற்கான வழிகள் எண் வழிகள் என்னும் எட்டு வழிகள்.

எண்வழிப் பாதை

பாதைகளில் சிறந்தது

உண்மைகளில் சிறந்தது

நான்குண்மைகள்

பற்றற்று இருப்பது ஒழுக்கம்

உள்கூர்ந்து பார்த்தல்

புத்தர்களின் பாதை ( தம்மபதம் 273)

நான்கு உண்மைகளில் முதல் உண்மை துக்கம் பற்றியது. துக்கம் இல்லாதவர் இந்த உலகில் யாரும் இல்லை. பிறந்தது முதல் இறப்புவரை துக்கம்தான் வாழ்க்கையின் அனைத்துமே. துக்கம் நம் வாழ்வில் பிரிக்கவியலாத ஒன்றாகவே இருக்கிறது. இரண்டாவது உண்மை துக்க மூலம். இந்த துக்கத்தின் காரணம் எது என ஆராய்தல். துன்பத்தின் காரணம் ஆசைதான் என்றார் புத்தர். ஆசையே மனிதருக்குத் துக்கத்தைக் கொண்டுவந்து சேர்க்கும். எனவே துக்கத்தை யாராலும் மாற்றமுடியாது. மூன்றாவது உண்மை நிப்பாணம். துன்பத்திற்குக் காரணமான ஆசையை விடுதல். ஆசை, வெறுப்பு, காமம் ஆகியவற்றை விட்டொழிக்கும் நிலை.ஆகவே இது துக்க நிவாரணமாகிறது. இந்த துக்க நிவாரணத்திற்கு வழிகள் தான் நான்காவது உண்மை.

அந்த வழிகள் தாம் எட்டு வழிகள்.அவை நற்காட்சி, நற்சிந்தனை, நற்சொல், நற்செயல், நல்வாழ்க்கை, நல் முயற்சி, நல்மனம், நல் அமைதி. இந்த எட்டையும் மீண்டும் வாசித்துப்பாருங்கள். அவை எத்தகைய சிறந்த வழிகளாக இருக்கின்றன. இதுதான் புத்தரின் பாதை. இந்தப் பாதையில் யார் மிகச்சரியாக நடந்தாலும் அவர்களும் புத்தர்கள் தாம். வேறு எதுவும் தேவையில்லை. இந்த வாழ்க்கை முறையைத்தான் பௌத்தம் கூறுகிறது. இந்த வழியை அடைபவர்கள் உயர்வுற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். தீமையைத் தோற்கடிக்க இதை விடச் சிறந்த மார்க்கமில்லை.

புத்தர், ”தன்னிடமிருக்கிற துயரத்தின் அம்புகளைப் பிடுங்கி எறியும் வழிகளைக் கண்டறிந்து பிரகடனப்படுத்தியிருக்கிறேன். அதைப் பின்பற்றினால் அது உங்கள் துயரங்களின் இறுதி” என்று கூறுகிறார்,

இந்த வழியில் நடப்பதென்பது அவ்வளவு எளிதானதா என்ன? எளிதானதுதான். அதற்கு நீங்கள்தான் முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சி துன்பமில்லா இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். புத்தர்கள் வெறும் கைக்காட்டி மரங்கள்தான் அவர்கள் கூடவே வந்து எதையும் காட்டமாட்டார்கள். அப்படி முயன்று நீங்கள் வருவீர்களேயானால் உங்களால் தீமைகளை அழிக்கமுடியும்.

பற்றினை அறுத்து தம்மத்தினைப் பின்பற்றினால் தூய்மையான வழி புலப்படும் அவ்வழி என்பது மானுடத்தின் மீட்சிக்கானது. ஆகவே இளமையும் வலிமையும் இருக்கும்போதே போராட வேண்டும். அப்படிப் போராடாமல் காலத்தை வீணடித்தால் மேன்மைமிக்க அறிவைப் பெறமுடியாது.

கவனிக்கப்படும் வார்த்தைகள்

மனக்காப்பு

தீச்செயலற்ற உடல்

இம்மூன்றும் தூய்மையாக்கும்

துறவிகள் கண்ட வழிகாட்டும் ( தம்மபதம்281)

பற்றென்னும் காட்டை அழிக்க வேண்டும் என்கிறார் புத்தர். பற்றுக்காட்டில்தான் பயம் வளர்கிறது.அப்பற்றினை அழிக்க வேண்டும். எந்தப் பற்று என்றாலும் அது பால் குடிக்கும் கன்றைப் போல் விரைவாக வளர்ந்து நம்மை வருத்தும். எனவே பற்றை விட்டுவிடுவது வேண்டும்.

வசந்தகாலத்தில் பூத்துக்குலுங்கும் லில்லி மலர்களை பறிப்பதைப் போல உனக்கான அமைதியை அறுவடைச் செய்துகொள். நான்கு உண்மைகளையும் எண்மார்கங்களையும் சொன்ன புத்தரின் நிப்பாணம் அது.

நிலையற்ற இவ்வாழ்க்கையில் நாளை அங்கிருப்பேன், இங்கிருப்பேன் என்று சொல்லக்கூட முடியாத சூழல்தான் நிலவுகிறது. நாளை பிள்ளை நம்மைக் காப்பான என்று நம்ப முடியாத வாழ்க்கைத் தடங்களே இங்கு அதிகம். வெள்ளம் வந்து எல்லாவற்றையும் அடித்துச் செல்வதைப் போல மரணம் எல்லாவற்றையும் கொண்டு சென்றுவிடும். எனவே

இவற்றைப் புரிந்துகொண்டு

உயர்வுற்ற மேனறிவுடையவர்

நிப்பாணத்திற்கான

தன் வழிகளைத் தூய்மையாக்குவாராக (தம்மபதம் 289)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
நல்ல நீதிபதிகள் தம்மத்தை பின்பற்றுகிறார்கள்!

x