அருள்தரும் சக்தி பீடங்கள்- 13


அம்மனின் சக்தி பீட வரிசையில், குஜராத் மாநிலம், பனஸ்கந்தா பகுதியில் அரசுரி என்ற ஊரில் அமைந்துள்ள அம்பிகா மாதா கோயில் மிகவும் முக்கியமானது. அம்பிகையின் தனங்களுள் ஒன்று விழுந்ததாகக் கூறப்படும் இத்தலத்தில் தேவி, யந்திர வடிவில் விளங்கி அருள் பாலிக்கிறார்.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரின் மூன்று பக்கங்களிலும் மலைத் தொடர்கள் உள்ளன. அதில் ஒன்று அபு மலை ஆகும். அபு மலைக்கு அருகில் உள்ள அரசுரி என்ற ஊரில், அம்பிகா, அம்பே மா அம்மன், அம்பாஜி, சச்சார் சவுக்வாலி ஆகிய பெயர்களைத் தாங்கி தேவி அருள்பாலித்து வருகிறார்.

தல வரலாறு

மகிஷாசுரன் என்ற அசுரன் அக்னிதேவனை நோக்கி தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த அக்னிதேவன், அவன் வேண்டியபடி, எந்த ஆயுதத்தாலும் அவனுக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தை அருளினார்.

இந்த வரத்தைப் பெற்றதும் மகிஷாசுரன் இந்திரலோகம், வைகுண்டம், கயிலாலத்தை அடைய விருப்பினான். இந்திரலோகம் மகிஷாசுரனின் வசம் ஆனது. அசுரனின் எண்ணத்தை உணர்ந்த தேவர்கள், இதுகுறித்து தேவியிடம் முறையிட்டனர். தேவியும் அவர்களுக்கு உதவுவதாகக் கூறி, மகிஷாசுரனை அழித்து, இத்தலத்தில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

மற்றொரு சமயம், சீதையைத் தேடி ராமபிரானும், லட்சுமணனரும் கானகத்தில் அலைந்து கொண்டிருந்தபோது, சிருங்கி முனிவரை தரிசித்தனர். அவரின் ஆலோசனைப்படி அம்பிகா மாதாவை வணங்கினர். தேவியும் ராம சகோதரர்களுக்கு ‘அஜய்’ என்ற அஸ்திரத்தை அளித்து அருள்பாலித்தார். இருவரும், அந்த அஸ்திரத்துடன், இலங்கைக்குச் சென்று ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பினர்.

அம்பிகா மாதா

அரசுரியில் கோயில் கொண்டிருக்கும் தேவிக்கு, சிலை வடிவம் இல்லை. ‘விஷா ஸ்ரீ எந்திரம்’ என்ற தங்கத்தால் ஆன எந்திரமே இங்கு வழிபடப்படுகிறது. இந்த எந்திரமே சிலை போன்று தோற்றம் கொண்டதாக அமைந்துள்ளது.

51 எழுத்துகள் கொண்ட ஸ்ரீ எந்திரம் ஆமை வாகனத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ எந்திரத்தை தரிசித்தால் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒரு மார்பிள் தகட்டில் பொருத்தி நகைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ எந்திரம், மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அருகில் சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அம்மனின் பாதம், ஒரு விளக்கு மட்டுமே சந்நிதியில் உண்டு.

கோயில் அமைப்பு

அம்பிகா மாதா கோயில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மா. அவரது மூன்றாவது வயதில், நந்தகோபர், யசோதையுடன் இத்தலத்துக்கு வந்து, வேண்டுதல் நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது.

அம்பிகா மாதா சந்நிதி மிகவும் சிறிய அளவில் உள்ளது. மண்டபம், பிரகாரம் மார்பிள் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிளால் ஆன கலசம் அமைக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாக அமைந்துள்ள இக்கலசம், தங்க கவசத்தால் மூடப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் மன்னர்கள் கட்டிய அரண்மனைகள், கோயில்கள் கலை அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் அம்பிகா மாதாவுக்கும் கோயில் எழுப்பப்பட்டது. கோயிலின் வாயிற் கதவு, முரசு ஆகியன வெள்ளியால் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலும் வெள்ளியால் அமைக்கப்பட்டது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது. சலவைக் கற்களின் வெண்மையும், தன்மையும் அத்தகைய உணர்வை அளிக்கின்றன.

விநாயகர் சித்தி, புத்தி ஆகிய மனைவியருடனும், சுப், லாப் (சுபம், லாபம்) ஆகிய மகன்களுடனும், குஷல், சாம் ஆகிய பேரன்களுடன் இருப்பது போன்று, அவரது சந்நிதியில் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவியின் சந்நிதிக்கு எதிரில் நாகேஸ்வரர், அனுமன், நாகராஜர் விக்கிரகங்கள் உள்ளன. 900 படிக்கட்டுகள் கொண்ட இக்கோயிலுக்கு ரோப்கார் வசதி உண்டு.

இதிகாசத் தொடர்பு

அதர்மத்தை அழிப்பதற்கு ராமபிரான், கண்ணனின் அவதாரங்களை எடுத்த திருமாலுக்கு அன்னையாக தேவி விளங்குவதால், சக்தி பீடங்கள் அமைந்த தலங்கள் அனைத்துமே, ராமாயண, மகாபாரத இதிகாச சம்பவங்களுடன் தொடர்பானவையாகவே விளங்குகின்றன.

அம்பிகா மாதாவுக்கு கோயில் எழுப்பிய அரசர்கள், ஸ்ரீராமபிரானின் மைந்தன் குகனின் சந்ததியினராக அறியப்படுகிறார்கள். மலையடிவாரத்தில் வேணு கோபாலன் கோயில் அமைந்துள்ளது. இந்த இடம் மகாபாரதத்தில் திகழக்கூடிய விராட தேசம் (பிராட்) என்று அறியப்படுகிறது.

கானகத்துக்கு அனுப்பப்பட்ட பாண்டவர்கள், ஒரு வருட காலம், யாரும் அறியாவண்ணம் மறைந்து வாழ வேண்டும் என்று துரியோதனனால் நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் ஒரு வருட காலம் இங்கு தங்கியிருந்து, விராடனின் அரண்மனையில் பணியாட்களாக வேடம் தரித்து வாழ்ந்தனர்.

துர்கையாக அவதாரம்

அபு மலைக்கு அருகில் சரஸ்வதி நதி உற்பத்தி தொடங்குகிறது. இங்கு கோபீச்சுர மஹா தேவ் கோயில் அமைந்துள்ளது. அம்பிகா மாதா இந்த மலையில் பல்வேறு சக்திகளுடன் அருள்பாலிக்கிறார். இங்கு துர்கையின் வடிவத்தை கொண்டவராகவும், சிவபெருமானுடன் உறையும்போது பவானியாகவும், கோப சக்தியாக இருக்கும் சமயத்தில் காளியாகவும், புருஷ சக்தியாக விளங்கும்போது திருமாலாகவும், போர் சக்தியாகத் திகழும்போது மீண்டும் துர்கையாகவும் விளங்குகிறார்.

அசுரன் ஒருவன் பிரம்மதேவரை நோக்கி தவம் புரிந்து, அன்னை தேவியின் மகளால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். அப்போது சிவபெருமான், பார்வதி தேவியைப் பார்த்து, ‘காளியே’ என்று அழைத்தார். உடனே அம்மையும் கருமை நிறம் கொண்ட காளியாக அவர் முன் தோன்றினார். அசுரர்களை அழிப்பதற்காக ஒரு பெண்ணை உருவாக்கும்படி, பார்வதி தேவியை, சிவபெருமான் பணித்தார்.

தேவியும் கானகத்தில் தவம்புரிந்து துர்கையை தோன்றச் செய்தார். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று அசுரர்களை அழித்தார். மேலும், துர்கை எந்தப் பக்கம் இருக்கிறாரோ, அந்தப் பக்கமே வெற்றி ஏற்படும் என்று அருளினார்.

ஸ்ரீராமபிரான், ராவணனுடன் போர் புரியும் சமயத்தில், அனைவரையும் இழந்த சமயத்தில், ராவணன் துர்கையை வழிபட்டு, பூஜை செய்தான். துர்கா தேவி, ராவணனுக்கு சாரதியாக வந்து அமர்கிறார். துர்கா தேவி ராவணனுக்கு உதவி புரிவதை அறிந்த ஸ்ரீராமபிரான், அன்னையை எதிர்த்து போரிடுதல் முறையன்று என்று எண்ணி, துர்கா பூஜை செய்கிறார். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ராவணனை விட்டு துர்கா தேவி விலகுகிறார். அந்த சமயத்தில் ஸ்ரீராமபிரான் தன் கணைகளைத் தொடுத்து ராவணனை மாய்க்கிறார்.

தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெற்றியையும், விவேகத்தையும் ஒருங்கே அளிப்பவராகவும், நல்லவர்களுக்கு துணை நிற்பவராகவும் துர்கா தேவி விளங்குகிறார் என்பதே இச்சம்பவங்களின் உட்பொருள் ஆகும்.

மீரா பாய்

ஜெய்ப்பூர் என்ற பெயரிலேயே வெற்றி உள்ளது. உதய்ப்பூர் என்ற பெயரும் இருளைப் போக்கி ஒளியைத் தரும் என்ற பொருளில் அமைந்துள்ளது. இத்தகைய வெற்றிக்குக் காரணம், அம்பிகா மாதாவின் அருள்தான் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஜெய்ப்பூர் நகரத்தில் வாழ்ந்த மீராபாய், சித்தோர் இளவரசரை மணம் புரிந்து வாழ்ந்தார். மீராபாய் பல தொல்லைகளை அனுபவித்து, பின்னாட்களில் கிரிதர கோபாலனை சரண் புகுந்தார். கிருஷ்ணனை நினைத்து பாடல்கள் பல புனைந்தார். ஆண்டாள் நாச்சியாரைப் போல் இறையருள் பெற்று அவருடன் இரண்டறக் கலந்தார்.

பிற கோயில்கள்

அம்பிகா மாதாவின் கோயிலைச் சுற்றி 8 கிமீ தூரத்தில் சோம்நாத் என்ற இடத்தில் சோமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் இருந்து 4 கிமீ தொலைவில் கப்பார் மவுண்டன் என்ற இடத்தில் பழைய அம்பிகா மாதா கோயில் உள்ளது.

ஜெய்ப்பூர் நகரத்தை ஒட்டியுள்ள பகுதியில் காலவ மகரிஷி பூஜித்த இடம் உள்ளது. கெய்தே என்ற ஊருக்கு வெளிப்புறத்தில், ஜெய்ப்பூருக்கு கிழக்கே கால்டாவில் சூரிய பகவானுக்கு ஒரு கோயில் உள்ளது. இந்த இடத்தில் காலவ மகரிஷி தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. சந்திபால் என்ற இடத்தில் அனுமன் (சந்திபால் கா பாலாஜி) கோயில் உள்ளது.

மகாராஜா ஜெய்சிங்கின் குருவான பாலாதாஸின் பெயரில் இங்கு, பாலனந்தாஜிகா கோயில் (விஷ்ணு கோயில்) அமைக்கப்பட்டுள்ளது. விநாயகருக்கும் கத்தார் கேட்டின் அருகே கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இனி வரவிருக்கும் கல்கி அவதாரத்துக்கும் இங்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. மகாராஜா ஜெய்சிங் இங்கு அஸ்வமேத யாகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை நினைவுபடுத்தும் விதமாகவும், கல்கி பகவான் குதிரை மீது அமர்ந்து வருவதை நினைவுபடுத்தும் விதமாகவும், சலவைக் கல்லில் குதிரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

நவராத்திரி நாட்களில் இந்த தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஜூலை மாதத்தில் பத்ராவி பூர்ணிமா கொண்டாடப்படும். தீபாவளி நாளில் கோயில் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். லட்சுமி தேவி எண்ணெயில் வாழ்வதால், ராஜஸ்தான் மக்களும், தீபாவளித் திருநாளில் எண்ணெய் குளியல் எடுப்பது வழக்கமாக உள்ளது. அன்றைய தினத்தில் லட்சுமி பூஜை செய்வதுண்டு.

ஆண்டுதோறும், பல மதங்கள் மற்றும் இனங்களைச் சார்ந்த பக்தர்கள் இங்கு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, கோயிலுக்கு பொருளுதவி அளித்து வழிபாடு செய்கின்றனர். அவரவர் பிறந்த நாளுக்கு மறுநாள், முடி காணிக்கை செலுத்தும் வழக்கமும் இங்கு உள்ளது. அவ்வாறு செய்தால் அக்குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்புடனும், கிருஷ்ணரைப் போல் விவேகத்துடன் செயல்படுபவராகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. ஆண்கள் மட்டுமே இங்கு முடி காணிக்கை செலுத்த முடியும் என்பது கூடுதல் தகவல்.

x