பாகூர் மூலநாதர் கோயில் தேர் திருவிழா: துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்


புதுச்சேரி: பாகூரில் பழமையான மூலநாதர் கோயில் தேர் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேரினை வடம் பிடித்து இழுத்து விழாவினைத் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி மாநிலம் பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமையான வேதாம்பிகை சமேத மூலநாதர் சாமி கோவில் உள்ளது. இக்கோயில் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் பல்லக்கில் சந்திரசேகரர் புறப்பாடும் இரவினில் யானை, மயில், ரிஷபம், நந்தி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதியுலாவும் நடைபெற்று வந்தது.

கடந்த 16-ம் தேதி இரவு பரிவேட்டையும், 18-ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை தேரோட்டம் தொடங்கியது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாக்கிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து விழாவினைத் தொடங்கி வைத்தனர்.

விழாவில் பாகூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாளை (ஜூன் 21) இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும், 22-ம் தேதி இரவு 7 மணிக்கு 63 நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெற இருக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

x