சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்காக அணிவகுத்துச் செல்ல முயற்சித்த தெய்வத் தமிழ் பேரவையினர் 50க்கும் மேற்பட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலம் என்னும் கனகசபையில் ஏரி பக்தர்கள் வழிபட சமீபகாலமாக அங்குள்ள தீட்சிதர்கள் அனுமதி மறுத்துவிட்டனர். அதன்மேல் தேவாரம் திருவாசகம் பாடவும் அனுமதிக்க முடியாது என்று தீட்சிதர்கள் சொல்லி வரும் நிலையில் அதனை எதிர்த்து சிதம்பரத்தில் பல்வேறு அமைப்புக்களின் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தெய்வத் தமிழ் பேரவை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடையில் ஆறு நாள் தொடர்ந்து தேவாரம் திருவாசகம் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும் என முன்னரே அறிவிக்கப்பட்டு அதற்கான பயிற்சியும் பரப்புரையும் நடந்து வந்தது.
அவர்கள் அறிவித்திருந்தபடி இன்று (பிப்.28) தேனி மாவட்டம் குச்சனூர் மடாதிபதி குச்சனூர் கீழார் தலைமையில் தெய்வத் தமிழ் பேரவையின் துணை ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கீழவீதி தேரடியில் இருந்து ஊர்வலமாக அணிவகுத்து புறப்பட்டனர். தேவாரம், திருவாசகம் பாடி கொண்டு சிவ வாத்தியங்கள் முழங்கியபடி கீழ சன்னதி வழியாக கோயிலுக்குள் செல்ல முயன்ற அவர்களை காவல்துறை ஏடிஎஸ்பி அசோக்குமார் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.
அதனை எடுத்து அங்கேயே தரையில் அமர்ந்து தேவாரம் திருவாசகம் பாட அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முழக்கங்களாக எழுப்பினர். இதனையடுத்து அவர்களது அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து தெய்வத் தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கூறுகையில், ``இது கண்டிக்கதக்கது. தமிழக அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி தனி சட்டம் இயற்றி கோயிலை அரசுடமையாக்க வேண்டும். யார் தடுத்தாலும் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாடுவதில் உறுதியாக உள்ளோம்" என்றார்.