அம்மனின் சக்தி பீட வரிசையில், கரவீரத்தலம் என்று அழைக்கப்படும் கோலாப்பூர் தலத்தில் தேவியின் கண்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் மகாலட்சுமி என்ற திருநாமத்துடன் தேவி அருள்பாலிக்கிறார். தேவியுடன் திருமாலும் இங்கு கோயில் கொண்டிருக்கிறார்.
காந்தம் இரும்புத் துகள்களை தன் வசம் ஈர்ப்பது போல, அன்னை மகாலட்சுமி, வானவர்கள், முனிவர்கள், மண்ணகத்தார் அனைவரையும் இத்தலத்தை நோக்கி வரச் செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தல வரலாறு
முன்பொரு காலத்தில் மார்க்கண்டேய மகரிஷி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் நான்கு வேதங்கள், பூர்வ மீமாம்ஸம், உத்தர மீமாம்ஸம், ஆயுர்வேதம், ஜோதிடம், தர்ம அர்த்த மந்திரங்களை கற்றுணர்ந்தவராக விளங்கினார். ஒருநாள் அவர், தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்து முக்தி அடைய எண்ணினார். இதுகுறித்து நாரத மகரிஷியின் ஆலோசனையை வேண்டினார். முக்தி அடைய தவம் மேற்கொள்ள தகுந்த இடத்தையும் குறிப்பிடுமாறு, நாரத மகரிஷியை கேட்டுக் கொண்டார்.
அப்போது நாரத மகரிஷி, அவரிடம் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது: ஒருசமயம் சிவபெருமானுக்கும் மகாலட்சுமிக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. ஆதிகாலத்தில் தான் வசித்து வந்த கரவீரத்தலமே சிறந்தது என்று மகாலட்சுமியும், தான் உறையும் காசித் தலமே சிறந்தது என்று சிவபெருமானும் வாதிட்டனர். அப்போது திருமால் ஒரு தராசைக் கொண்டு வந்து, ஒரு தட்டில் காசித் தலத்தையும், மற்றொரு தட்டில் கரவீரத் தலத்தையும் வைத்தார். கரவீரத்தலம் இருந்த தட்டு தாழ்ந்தது. காசித் தலம் இருந்த தட்டு உயர்ந்தது. இதனால் கரவீரத்தலமே உயர்ந்தது என்று திருமால் கூறினார்.
இதற்கான காரணத்தை சிவபெருமான் வினவினார். அதற்கு திருமால், “காசித் தலம் முக்தியை மட்டுமே அருளும். கரவீரத்தலம் புத்தி, முக்தி இரண்டையும் அருளும் என்பதால் கரவீரத்தலம் காசியை விட உயர்ந்தது” என்றார்.
இதைக் கேட்ட சிவபெருமான், உடனடியாக தனது கணங்களுடன் கரவீரபுரத்தை அடைந்தார். ஈசனைத் தொடர்ந்து, மணிகர்ணிகை, பிரயாகை, கங்கை முதலான தீர்த்தங்களும் கரவீரத்தலத்தை அடைந்தன. பஞ்சகங்கா என்ற திருநாமத்துடன், கரவீரத்தலம் அருகே (10 கிமீ தொலைவில்) கங்கை வசிக்கத் தொடங்கினார்.
பாண்டுரங்கர் முதலான தேவர்களும் துர்வாசர், நாரத மகரிஷி போன்றவர்களும் கரவீரத்தலம் வந்தடைந்தனர். ஜெயந்தி நதி, கோமதி நதி இணையும் இடத்தில் துவாரகாபுரி நிர்மாணம் ஆனது.
இத்தகவல்களை நாரத மகரிஷி மார்க்கண்டேய மகரிஷிக்கு கூறியதால், மார்க்கண்டேய மகரிஷிக்குள் ஒரு தெளிவு பிறந்தது. உடனே, அன்னை மகாலட்சுமி அருள்பாலிக்கும் கரவீரத்தலத்துக்கு (கோலாப்பூர்) விரைந்து, அங்கு கடும் தவம் புரிந்தார்.
அன்னை பவானி
கோலாப்பூர் தலத்தில் நாரத மகரிஷி வசிக்கிறார். தட்சணத்தில் துர்வாசர், அகத்தியர், வாயு திக்கில் பராசரர், விசால தீர்த்தத்தின் அருகில் வேதவியாசர் வசிக்கின்றனர். மேலும், தலத்தைச் சுற்றி முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிஷ்டாதி நாற்பத்தொண்ணாயிரம் ரிஷிகளும் வசிப்பதாக கூறப்படுகிறது. அன்னை மகாலட்சுமி, பக்தர்களின் பாவங்களை தன் கடைக்கண் பார்வையால் சுட்டெரிப்பவராக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். பாவங்கள், துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக இத்தலத்துக்கு வந்து அன்னை மகாலட்சுமியை வேண்டும் பக்தர்கள், அன்னையை அவர்கள் தாயாகக் கருதி ‘அன்னை பவானி’ என்று அழைத்துப் போற்றுகிறார்கள்.
பிரளய காலத்தில் கடல் பொங்கியதால், அனைத்து இடங்களும் மூழ்கின. இப்பகுதியை மட்டும் அன்னை மகாலட்சுமி, தன் கரங்களின் வீரத்தால் உயர்த்தி நிறுத்தினார். அதனால் இத்தலம் கரவீரத்தலம் என்று போற்றப்படுகிறது.
கோலாப்பூர் தலத்தில் வீற்றிருக்கும் மகாலட்சுமி விக்கிரகம், 40 கிலோ எடை கொண்ட மணிக்கற்களால் அமைந்துள்ளது. அன்னை மகாலட்சுமி 3 அடி உயரத்தில் நான்கு கரங்களுடன், மகுடம் தரித்து, மேற்கு திசை நோக்கியபடி அருள்பாலிக்கிறார். இவரது வாகனமான சிங்கம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அன்னையின் மகுடத்தில் திருமாலின் நாகம் செதுக்கப்பட்டுள்ளது.
வலது மேல் கரத்தில் கிச்சிலி பழம், வலது கீழ் கரத்தில் கவுமோதகி (தண்டாயுதம்), இடது மேல் கரத்தில் கேடகம் (கவசம்), இடது கீழ் கரத்தில் பானபாத்திரம் (கிண்ணம்) தாங்கி அன்னை மகாலட்சுமி இங்கு அருள்பாலிக்கிறார். கதிரவனின் ஒளிக்கீற்று, ஆண்டுக்கு இருமுறை (மார்ச், செப்டம்பர் மாதங்களில்) தலா மூன்று நாட்களுக்கு அன்னை மகாலட்சுமியின் பாதங்கள், மார்பு, உடல் மீது படும் (கிரண் உற்சவம்). அப்போது அன்னையின் திருமுகம் பளிச்சிடும்.
சிங்க வாகனத்தில் எழுந்தருளி, தேவி, கோலாசுரன் என்ற அரக்கனை, தன் கதையால் அழித்த தலம் என்பதால் இத்தலம் ‘கோலாப்பூர்’ என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு
மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் அன்னை மகாலட்சுமி கோயில் அமைந்துள்ளது. கிழக்கு கோபுர வாயிலுக்கு அருகே சத்ய நாராயணர் சந்நிதி உள்ளது. கோயில் பிரகாரத்தில் விஷ்ணு மந்திரம், கோகர்ணேஸ்வரர், கவுரி சங்கர், சனீஸ்வரர், முரளிதரர், கால பைரவர், சிம்மவாஹினி, துளஜா பவானி, மஹா சரஸ்வதி, மஹா காளி, தத்தாத்ரேயர், காசி விஸ்வேச்வரர், அகத்தியர், லோபா முத்திரா தேவி, பஞ்ச காப்கா தேவி, இலக்குமா பாயி சந்நிதிகள் அமைந்துள்ளன.
அன்னை மகாலட்சுமி கோயிலுக்கு இடதுபுறத்தில் மாகாளி கோயில் உள்ளது. இதற்கு எதிரில் கங்கை, மணிகர்ணிகா கூபங்கள் உள்ளன. கோலாப்பூருக்கு வருவதற்கு முன்னர், 10 கிமீ தொலைவில் உள்ள குன்றின் மீது அருள்பாலிக்கும் ஸ்ரீ ஜோதிபா மூர்த்தியை, பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்.
இந்த மலை உச்சியில் 300 வீடுகள் கொண்ட சிற்றூர் ஜோதிபா ஆகும். இங்கு ஸ்ரீ ஜோதிபா மூர்த்தியை வணங்குபவர்கள் (குரு) வசித்து வருகின்றனர். இந்தக் கோயிலுக்கு தென்கிழக்கில் ஸ்ரீ ஜோதிபாவின் தமக்கை ஹேமாபாயி கோயில் அமைந்துள்ளது.
பராசர முனிவரின் அலட்சியம்
ஒரு சமயம் பராசர முனிவர், திருமாலை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தின் பயனாக அன்னை மகாலட்சுமி அவர் முன் தோன்றினார். திருமாலை நோக்கி தவம் புரிந்ததற்கு, அன்னை மகாலட்சுமி தோன்றியதால், பராசரர், அவரிடம் எந்த வரத்தையும் கேட்காமல் அவரை அலட்சியம் செய்தார். சற்று நேரத்தில் திருமால், பராசரர் முன் தோன்றினார்.
திருமாலைப் போற்றிப் புகழ்ந்த பராசரர், தனக்கு பிள்ளை வரம் அளிக்குமாறு வேண்டினார். அப்போது திருமால் பராசரரை நோக்கி, “நான் வேறு, மகாலட்சுமி வேறு அல்ல. என் மீது கொண்ட பக்தி காரணமாக மகாலட்சுமியை அலட்சியம் செய்தது தவறு. அதனால் உன் மனைவியை விட்டுப் பிரிந்து, பிறகு அவருடன் இணைந்து வாழும்போதுதான் உனக்கு அந்த வரம் கிடைக்கும்” என்று அருளினார்.
அதன்படி பராசர முனிவர், தன் மனைவி சத்தியவதியைப் பிரிந்தார். சத்தியவதி செம்படவனின் மகளாக வளர்ந்தார். ஒரு குறிப்பிட்ட நாளில், இவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதன் பிறகே இவர்களின் மகனாக வேத வியாசர் அவதரித்தார்.
பராசரர், மகாலட்சுமியை அலட்சியம் செய்ததால் அவருக்கு வேத வியாசர் மூலமாக போற்றுதலும், பாண்டவர்கள், கவுரவர்கள் மூலமாக தூற்றுதலும் கிடைத்தன. தாயை அவமதிப்பவர்கள், அலட்சியப்படுத்துபவர்கள் எத்தகைய உயர்ந்த நிலையில் இருந்தாலும், அவர்களது செயல் மூலம் பாதாளத்தில் விழ வேண்டிய சூழல் ஏற்படும் என்பது இதன்மூலம் அறியப்படுகிறது.
அகத்தியரின் பயணம்
சிவபெருமான் மீது பக்தி கொண்டு, காசி தலத்தில் தவ வாழ்க்கையை மேற்கொண்ட அகத்திய முனிவர், ஒருசமயம், சத்யும்ன முனிவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அகத்திய முனிவரை, சத்யும்ன முனிவர் சரியாக உபசரிக்காததால், கோபம் கொண்ட அகத்தியர், அவரை யானை வயிற்றில் பிறக்கும்படி சபிக்கிறார். தனக்கு அகத்தியரின் சாபம் கிடைத்துவிட்டதே என்று வருந்திய சத்யும்ன முனிவர், இதுகுறித்து பரந்தாமனிடம் முறையிடுகிறார்.
பரந்தாமனும் அகத்திய முனிவரை காசி தலத்தில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தார். அதன்படி நாரத முனிவரை அழைத்து, ஏதேனும் செய்து அகத்திய முனிவரை காசி தலத்தில் இருந்து வெளியேற்ற ஏற்பாடு செய்யும்படி பணிக்கிறார்.
பரந்தாமன் கூற்றை ஏற்று, நாரத முனிவர் மேரு மலைக்கும், விந்திய மலைக்கும் இடையே கருத்து வேறுபாட்டைத் தோற்றுவிக்கிறார். தான் தான் பெரியவன் என்பதைக் காட்டிக்கொள்ள, விந்திய மலை நீண்டு வளர்ந்தது. அதன் காரணமாக, ஒரு பக்கம் அதிக வெப்பம் (வெளிச்சம்) கொண்டதாகவும், மறு பக்கம் குளிர்ந்த (இருள்) பகுதியாகவும் மாறியது. இதுகுறித்து அகத்திய முனிவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அகத்திய முனிவர் வருவதை அறிந்த விந்திய மலை, அவரால் சபிக்கப்படலாம் என்று அஞ்சி தன், உயரத்தை பழையபடி குறைத்துக் கொண்டு, அவருக்கு வழிவிட்டது.
அகத்திய முனிவரும் தான் தென்பகுதிக்கு சென்றுவிட்டு வரும்வரை இப்படியே இருக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் செல்கிறார். ஆனால், தென்பகுதியில் இருந்து திரும்பும்போது, சிவபெருமானுக்கும் மகாலட்சுமிக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் குறித்து அறிகிறார். உடனே கரவீரத்தலத்துக்குச் செல்வது என்று முடிவு செய்து, கரவீரபுரத்தை அடைந்தார்.
திருவிழாக்கள்
கோயிலில் தினமும் ஐந்து சேவைகள் நடைபெறும். விடியற்காலை (துயிலும் தேவியை எழுப்புவது), காலை (சோடச உபசாரங்கள்), மதிய, மாலை, இரவு (ஷேஜாரதி பூஜை) நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் அன்னை மகாலட்சுமி பிரகாரத்தில் பவனி வருவார். கிரண் உற்சவ தினங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அன்னை மகாலட்சுமியை தரிசனம் செய்வது வழக்கம். நவராத்திரி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.