தமிழில் குடமுழுக்கு: செயல் அலுவலருக்குப் பாராட்டு!


செயல் அலுவலரைப் பாராட்டும் வெங்கட்ராமன் உள்ளிட்டோர்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா தமிழில் நடைபெற்றதற்காக, அக்கோயிலின் செயல் அலுவலருக்கு தெய்வத் தமிழ்ப் பேரவையின் சார்பில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

கோயில் வளாகத்தில் செயல் அலுவலருடன் தெய்வத்தமிழ் பேரவையினர்

விருத்தாசலத்தில் உள்ள பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா, கடந்த பிப்.06 அன்று நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, தெய்வத் தமிழ்ப் பேரவையின் முன்னெடுப்பின் மூலம் தமிழ் ஓதுவார்களைக் கொண்டு கோயில் கோபுரக் கலசத்தில் தமிழ் மொழி ஒலித்தது. தமிழ் ஓதுவார்கள் திருமுறை பாடல்களைப் பாடினர்.

குடமுழுக்கு விழாவுக்குப் பல நாட்களுக்கு முன்னதாக, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பாக விருத்தகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கின்போது யாகசாலை பூசைகளில், மந்திரங்கள் தமிழில் ஓதவேண்டும் என்றும், கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றும்போதும் தமிழ் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் என்றும் கோயில் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் தமிழ் தேசிய பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதையடுத்தே தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது.

குடமுழுக்கில் தமிழில் மந்திரங்கள் ஓதுவதற்கு முயற்சி எடுத்ததற்காகவும், குடமுழுக்கு விழாவை சிறப்பாகவும், நல்ல முறையிலும் நடத்தியமைக்காகவும் கோயில் செயல் அலுவலர் முத்துராஜாவுக்கு தெய்வத்தமிழ் பேரவை சார்பாக இன்று கோயில் வளாகத்தில் நேரில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் தேசிய பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், மாநில செயற்குழு உறுப்பினர் முருகன்குடி முருகன், தெய்வத் தமிழ்ப் பேரவையின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு வே. சுப்ரமணியசிவா உள்ளிட்டோர் செயல் அலுவலர் முத்துராஜாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

x