சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆனி மாத நரசிம்ம சுவாமி பிரம்மோற்ச விழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா நின்ற கோலத்தில் வேங்கடகிருஷ்ணன் என்ற திருநாமத்துடன், தனது தேவியார் ருக்மிணி பிராட்டி, மகன் பிருத்யும்னன், பேரன் அநிருத்தன், தம்பி சாத்யகி ஆகியோருடன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சேவை சாதிக்கிறார். உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் குருசேத்திரப் போரில் தன் முகத்தில் ஏந்திய வடுக்களுடன் இங்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன.
எனினும் சித்திரை மாதம் பார்த்தசாரதி பெருமாளுக்கான பிரம்மோற்சவமும், இதே கோயிலில் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாளுக்கு ஆனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவமும் பிரசித்திபெற்றவை. அந்த வகையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆனி மாதம் நரசிம்ம பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதை முன்னிட்டு, நேற்று மாலை 6.30 மணிக்கு அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் விழா நடந்தது.
தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் 2-ம் நாளான நாளை காலை 6.15 மணிக்கு சேஷ வாகன புறப்பாடும், இரவு 7.45 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளியசிங்கர் புறப்பாடும் நடைபெறுகிறது. 19-ம் தேதி கருட சேவை உற்சவம், கோபுர வாசல் தரிசனமும், இரவு அம்ச வாகன புறப்பாடும் நடக்கிறது.
பிரம்மோற்சவத்தின், 4-ம் நாள் சூரிய, சந்திர பிரபை புறப்பாடு, 5-ம் நாள் விழாவான, 21-ம் தேதி காலை பல்லக்கு நாச்சியார் திருக்கோலமும், மாலையில் யோக நரசிம்மன் திருக்கோல புறப்பாடும், இரவு அனுமந்த வாகன புறப்பாடும் நடக்கிறது. ஜூன் 22-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அன்று காலை 9.30 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது. அன்று இரவு யானை வாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 23-ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.15 மணிக்குள் உற்சவர் தேரில் எழுந்தருள்கிறார்.
காலை 7 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது. 8-ம் நாள் விழாவில் காலை லட்சுமி நரசிம்ம திருக்கோல புறப்பாடும், இரவு குதிரை வாகன புறப்பாடும் நடக்கிறது. ஜூன் 25-ம் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. அன்று இரவு த்வஜ அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. வெட்டி வேர் புறப்பாடு 26-ம் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது. 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.