பௌத்தம் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமானது என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. உண்மையில் பௌத்தம் மிகவும் எளிமையானது, இனிமையானது. பின்பற்ற மிகவும் இயல்பானது. தாகமெடுத்த ஒருவருக்கு நீங்கள் எந்தத் தயக்கமுமின்றித் தண்ணீர் தருவீர்கள் என்றால், நீங்கள் பௌத்தத்தின் ஒரு கூற்றைப் பின்பற்றுகிறீர்கள் என்று பொருள். அவ்வளவுதான்.
உங்களை வெறுப்பவர்களிடம் நீங்கள் அன்பாய் ஒரு புன்னகையைப் பூப்பீர்களெனில் நீங்கள்தான் பௌத்தர். எந்த வேறுபாடும் அற்று நீங்கள் பிறரை நேசித்தால் போதும், நீங்கள் புத்தரைப் பின்பற்றுகிறீர்கள் என்று பொருள்.
மாயங்களும் தந்திரங்களும் அற்புதங்களும் நிகழ்த்தமுடியாத இடம் பௌத்தம். இது உலக உயிர்களின் உன்னத மகிழ்ச்சிக்கான வாழ்க்கைத் தத்துவம். உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவம்தான் ஒரே வழி என்னும் அறிவியல் பார்வை அதற்கு உண்டு. அது அக மருத்துவமானாலும் புற மருத்துவமானாலும் சரி. வேறெந்த வழியும் உடலைச் சரிசெய்ய இங்கில்லை என்னும் பகுத்தறிவுப் புரிதலே பௌத்தம்.
அது எப்போதும் மனமாகிய சிந்தனைக்கூட்டையே சரிசெய்ய முற்படுகிறது. நற்சிந்தனை, நற்சொல், நற்செயல் என்னும் தூய்மைப் பாதையில் நடக்கும்போது, துன்பங்கள் என்ற முட்கள் இல்லாமல் மகிழ்ச்சிப் பூக்களால் நிறைந்து காணப்படும் வாழ்க்கை வாய்த்துவிடுகிறது.
ஆகா!
வெறுப்புள்ளவரிடையே வெறுப்பில்லாமல்
உவகையோடு வாழ்கிறோம்
வாழ்கிறவர் மத்தியில்
வெறுப்பில்லாமல் ஒளிர்கிறோம் (தம்மபதம் 197)
பௌத்தம் விழையும் உவகை இதுதான். வெறுப்பவர்களிடையே வெறுப்பின்மை. பிணியாளர்களிடையே பிணியற்ற ஆரோக்கியம். பிணி என்பது வெறும் உடலுக்கு வரும் நோயாக மற்றும் நேரிடையாகப் பொருள் கொள்ளல் கூடாது. மனத்தின் பிணிகளான சினம், வெறுப்பு, அழுக்காறு, அவதூறு பேசுதல், இவற்றை எல்லாம் தவிர்த்தால் மிக எளிமையான அதேவேளையில் மிக மகிழ்வான வாழ்க்கை நம் கைகளில். பேரிச்சைக் கொண்டோர் மத்தியில் இச்சையை அறுத்து ஒளிவோம்.
வெற்றி பிறருக்கு வெறுப்பை உண்டாக்குகிறது
தோல்வி வலியை
வெற்றி தோல்விகளை விட்டுவிட்ட
வாழ்க்கையே மகிழ்வால் அமைதியாகிறது (தம்மபதம் 201)
இத்தகைய தன்மையை அடைய, வெற்றி/தோல்வி, இன்பம்/துன்பம் என்னும் இருமைகளை எப்போதும் சமமாய்ப் பாவிக்கும் உளப்பாங்கு மனச்சமநிலை எனப்படுகிறது. எதற்கும் தளராமல் அல்லது பொங்காமல் எப்போதும் சமநிலையாய் இருக்கும் மனம் அமைதி அடைகிறது.
ஆசையாகிய தீ மிகவும் அச்சமும் துன்பமும் தரக்கூடியது. நேர்மையான தேவைகளை மீறி நாம் கொள்ளும் ஆசையின் முடிவு ஒவ்வொன்றும் துன்பத்தின் மூலமாகி விடுகிறது. இதுவே, நாம் அன்றாடங்களில் எப்போதும் காண்கின்ற ஒன்றாகவே இருக்கிறது. அதேபோல் வெறுப்பு. இது பெரும் குற்றம் என்கிறது தம்மபதம். வெறுப்பினால் நாம் மனம் புழுங்குவதைத் தவிர எதுவும் செய்யலாகாது. ஆகவே, இவற்றுக்கான மாற்று அம்சமாக புத்தர் வைப்பது நிப்பாணத்தை. நிப்பாணத்தை ஒருவர் மேற்கொள்ளும்போது அவருக்கு அதைவிட மகிழ்ச்சித்தருவது வேறில்லை.
பசிநோய், புலன்கள் தரும் துன்பங்கள் இவற்றிலிருந்து வெளியேற நமக்கு புத்தர் திறக்கும் கதவுதான் நிப்பாணம். நிப்பாணம் என்பது என்ன? நிப்பாணம் என்பது நன்னெறியில் நடப்பது. பௌத்தம் அதை பஞ்சசீலம் எனவும் எண்மார்க்கம் எனவும் வைத்திருக்கிறது. இந்த வழிகள்தான் ஒருவருக்கு நிரந்தர மகிழ்ச்சியைத் தரும்.
ஆரோக்கியம் நல்ல வரவு
பற்றின்மைச் செல்வம்
நம்பிக்கைக்குரியவர் நல்லுறவினர்
நிப்பாணம்
எனது உயர்ந்த மகிழ்ச்சி (தம்மபதம் 204)
மகிழ்ச்சியில் இன்னொரு வகைமைப் பற்றியும் பௌத்தம் பேசுகிறது. நாமெல்லாம் நல்ல உணவு, நல்ல உடை, செல்வம் மிக்க வாழ்க்கை என மகிழ்ச்சியின் கருதுகோள்களை வைத்திருப்போம். ஆனால், புத்தர் நமக்கு வேறுவகை மகிழ்ச்சி ஒன்றைக் காட்டுகிறார். அது உண்மையும்கூட.
அறிவாளிகளைக் காணுதல் நலம்
அவர்களுடன் வாழ்வது
இன்பம் இன்பம்
அறிவிலிகளைக் காணாமல் இருப்பது
எப்போதும் இன்பம் (தம்மபதம் 206)
துன்பத்தை இதற்கு எதிர்நிலையில் வைக்கிறார். அறிவிலிகளுடன் வாழ்பவர் நீண்ட நாட்களுக்குத் துன்பத்தில் உழல்வர். அறிவற்றவர்களுடன் இருப்பது எதிரிகளிடம் இருப்பது போன்று வலி மிகுந்தது. உண்மையான அன்புள்ள உறவினர்களுடன் இருப்பது போன்று இன்பமானது அறிவாளிகளுடன் இருப்பது.
நட்சத்திரங்கள் மின்னும் வான்சாலையில் வெள்ளி ஒளிவீச மெல்ல நடப்பது எத்தனை அழகானது! எத்தனை மகிழ்வானது! அப்படித்தான் மகிழ்ச்சி நிறைந்தது கூர்மையான அறிவும், படிப்பும், நிப்பாணத்துக்கு வழியைக் காட்டும் பேரறிவும்.
தனிமையின்
நீடமைதியின்
சுவையறிந்து
தம்மத்தின் மகிழ்வை
அருந்தியவர்கள்
தீமைகளிலிருந்து விடுதலையடைகின்றனர் (தம்மபதம் 205)
(தம்மம் தொடரும்)
கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.comபரிணாம வளர்ச்சியின் முழுமை புத்தர்