ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில், நந்தியால் புகைவண்டி நிலையம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீசைலம் (திருப்பதம்). இத் தலத்தில் அம்பிகையின் கழுத்துப் பகுதி விழுந்ததாகக் கூறப்படுகிறது. சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோரால் பாடல்பெற்ற இத்தலம் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
பருப்பதநாதர் என்று அழைக்கப்படும் இத்தல ஈசன், மல்லிகார்ஜுனர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். பருப்பத நாயகி, பிரமராம்பாள் என்று இத்தல அம்பிகை அழைக்கப்படுகிறார். ‘செல்லூர் வரிய சிவன் சீ பர்ப்பத மலையை’ என்று சுந்தரமூர்த்தி நாயனார் ஸ்ரீசைல மலையைப் போற்றிப் பாடியுள்ளார்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்று சிவபெருமானின் புனிதத் தலங்களின் பெருமைகளைக் கூறுவதுபோல, ஸ்ரீசைல ஈசனை தூரத்தில் இருந்தே வணங்கினாலும் வீடுபேறு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தல வரலாறு
சிலாதர் என்ற மகரிஷி, பிள்ளைப்பேறு வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். சிவபெருமான் மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்து வரம் அளித்தார். மகரிஷிக்கு நந்திதேவர், பர்வதன் ஆகிய இரு மகன்கள் பிறந்த நேரத்தில், நந்திதேவர் குறைந்த ஆயுளே இவ்வுலகில் இருப்பார் என்று சனகாதி முனிவர்கள் கூறினர். சிலாதர் மகரிஷி இதுகுறித்து வருந்தினார்.
தந்தையின் வருத்தத்தை உணர்ந்த நந்திதேவர், அதுகுறித்து வருந்த வேண்டாம் என்று கூறி, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவபெருமானும் நந்திதேவருக்கு சாகா வரமளித்து அவரை தன் வாகனமாக்கிக் கொண்டார். மேலும், நந்திதேவர் அனுமதியின்றி தன்னை யாரும் காண இயலாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.
நந்திதேவர் தவம் புரிந்த மலை ‘நந்தியால் மலை’ என்று அழைக்கப்பட்டது. நந்திதேவர் அவதரித்த தலம் என்பதால் இத்தலத்தில் சிவபெருமானை வணங்கினால், எளிதில் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. நந்திதேவரின் தம்பி பர்வதனும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றார்.
மல்லிகார்ஜுனர்
மல்லிகாபுரியில் ஆட்சி புரிந்த மன்னர் சந்திரகுப்தனுக்கு சந்திரலேகா என்ற மகள் உண்டு. அவர் தினமும் மல்லிகை மற்றும் அர்ஜுனா மலர்களால் சிவபெருமானை பூஜித்து வந்தார். இதன்காரணமாகவே இத்தல ஈசனுக்கு ‘மல்லிகார்ஜுனர்’ என்ற பெயர் விளங்கியதாகக் கூறப்படுகிறது. மல்லிகார்ஜுனருக்கு பக்தர்களே அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். கைலாயத்துக்கு அடுத்தபடியாக ஸ்ரீசைலம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காசியில் பல ஆண்டுகள் தவமிருந்து கிடைத்த பலன், மல்லிகார்ஜுனரை ஒருமுறை தரிசனம் செய்தால் கிடைத்துவிடும் என்று கந்த புராணம் உரைக்கிறது.
பிரமராம்பாள் தேவி
நந்திதேவர், இறைக் காட்சியைக் காணவேண்டும் என்று இத்தலத்தில் தவம் இருந்தபோது, பார்வதி தேவி ‘பிரம்ம ரம்பை’ வடிவத்திலும், சிவபெருமான் ‘மல்லிகார்ஜுனர்’ வடிவத்திலும் அவருக்கு அருள்பாலித்தனர். அம்மையும் அப்பனும் இணைந்து நந்திதேவருக்கு அருட்காட்சி அருளிய தலம் என்பதால், இத்தலம் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.
ஸ்ரீசைலத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதால், வேண்டுவோர் அனைவருக்கும் தாய், தந்தையாக இருந்து அனைத்து வரங்களையும் அருள்வர் என்பது நம்பிக்கை. பெற்றெடுத்த தாயின் கருணை உள்ளத்தோடு அனைவரையும் இத்தலத்து தேவி காத்தருள்கிறார். தன் சக்தி அனைத்தையும் பாலாக்கி குழந்தைகளுக்கு அருளும் தாயாக தேவி விளங்குகிறார். தாட்சாயணியின் கழுத்துப் பகுதி இத்தலத்தில் விழுந்ததாக கருதப்படுவதால், 12 ஜோதிர்லிங்கத்துள் ஒன்று என்ற சிறப்புடன், இத்தலம் சக்தி பீடங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தலச் சிறப்பு
திருஞானசம்பந்தர் தனது தேவாரப் பாடலில்,
‘விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டு
படுமணி விடு சுடரார் பருப்பதம் பரவுதுமே’
என்று இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். மேலும், ‘சேண் பார்த்தவர்க்கு வீடருள் சீ பர்ப்பத நற்றாலம்’ என்று ஞானவரோதயரின் உபதேச காண்டம் உரைக்கிறது. விதிவசத்தால் ஒருவர் இறக்க நேரினும், அவர்களுடைய எண்ணங்கள் அடுத்த பிறவியில் செயலாக்கம் பெறும் என்பதால், நாம் உள்ளவரை இவ்வுலகில் நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும். நமது எண்ணங்கள் செயல்வடிவம் கொள்ள தருணம் வந்தால், ஸ்ரீசைலம் தலத்துக்குச் செல்ல எண்ணம் பிறக்கும். எண்ணத்தைச் செயல்வடிவம் பெற வைப்பது இத்தலத்து ஈசனும், தேவியும் என்பது நம்பிக்கை.
கோயில் சிறப்பு
ஸ்ரீசைலம் மலை 1,560 அடி உயரத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. வேதாந்திகள், சித்தி பெற்ற புருஷர்கள், பரமயோகிகள் இத்தலத்தில் வசிப்பதால் இதற்கு ‘தட்சிண கைலாயம்’ என்ற பெயரும் உண்டு. கிருதாயுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமரும், துவாபரயுகத்தில் பாண்டவர்களும், கலியுகத்தில் ஆதிசங்கரரும் இங்கே சிறப்பு ஆராதனைகள் செய்துள்ளனர்.
மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால், கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை இங்குள்ளது. பாண்டவர்கள் தங்கிய மடம், மலைப்பாறை மீது செதுக்கப்பட்டுள்ள பீமனின் பாதங்கள் இங்குள்ளன. சிவபெருமான் தன் சூலத்தை ஊன்றி நின்று அருள்பாலித்த தலம் என்பதால், இத்தலத்து மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு, எவ்வித நித்திய கர்மங்களையும் செய்யாமலேயே (நீராடாமல்) இறைவனுக்கு பக்தர்களே அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். இதற்கு ‘தூளி தரிசனம்’ என்று பெயர். தூய மனதுடன், சாதி, மத பேதமின்றி யாரும் இறைவனை அணுகலாம் என்பதே இதன் விளக்கம்.
இத்தலத்தில் மிக பிரம்மாண்டமான நந்திதேவர் சிலை அமைந்துள்ளது. மல்லிகார்ஜுனர் சந்நிதி கீழே இருக்க, 30 படிகள் உயரத்தில் பிரமராம்பாள் தேவி சந்நிதி அமைந்துள்ளது. சாட்சி விநாயகருக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. திருவிடை மருதூர், திருப்புடை மருதூர் ஆகிய தலங்களில் இருப்பதுபோல, இத்தலத்திலும் மருத மரமே ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளது. சஹஸ்ரலிங்கத்துக்கு தனி சந்நிதி உள்ளது. கிருஷ்ணா நதி, ஸ்ரீசைலத்தில் ‘பாதாள கங்கை’ என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீபர்வதம், ஸ்ரீகிரி, ரிஷபகிரி, ஸ்ரீநகரம், ஸ்ரீசைலம், திருப்பதம் என்று அழைக்கப்படும் இத்தலத்தில் இந்திரன் முதலான தேவர்கள் வந்து வணங்கியதாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் தீயவர்களை அழிக்கும் வீரபத்திரர் சந்நிதியும் உள்ளது. இத்தலத்தருகே, பீமன் குளம் என்ற இடத்தில் மல்லிகை மடு என்ற மலை காணப்படுகிறது. இக்கோயில் அருகே பாதாள தீர்த்தம் அமைந்துள்ளது.
இக்கோயில் 20 அடி உயரமும், 2,121 அடி நீளமுடைய கோட்டைச் சுவரைக் கொண்டு அமைந்துள்ளது. வெளிப்புறத்தில் குதிரைகள், யானைகள், போர்க்காட்சிகள், பார்வதி திருமணம், சந்திரவதி சுதை, சிபிச்சக்கரவர்த்தி, சிவதாண்டவம், கஜாசுர சம்ஹாரம், கண்ணப்பர் கதை, மகிஷாசுரமர்த்தனி போன்ற புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
மல்லிகார்ஜுனர் சந்நிதிக்கு மேற்கில் சந்திரமாம்பா சந்நிதியும், கிழக்கே ராஜராஜேஸ்வரி சந்நிதியும் உள்ளன. பிரதான மண்டபத்தில் சனகல பசவண்ணா நந்திதேவர் சிலை அமைந்துள்ளது. கலியுகம் நிறைவுபெறும் சமயத்தில், இந்த நந்திதேவர் கர்ஜனை செய்வார் என்பது ஐதீகம். ஆதிசங்கரர் இத்தலத்திலேயே அமர்ந்து, ‘சிவானந்த லஹரி’ இயற்றியதாகக் கூறப்படுகிறது.
ராணுவத் தளம்
மல்லிகார்ஜுனர், திராக்ஷாராமம், நாகார்ஜுனம் ஆகிய 3 லிங்கங்கள் ஆந்திர மாநிலத்தில் இருப்பதால், இப்பகுதி ‘த்ரிலிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. அப்பெயரே மருவி பிற்காலத்தில் ‘தெலுங்கு’ என்று மாறியது. மூன்றில் ஒன்றான மல்லிகார்ஜுனர் கோயில் கொண்ட இடமே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகிறது. பழமை வாய்ந்த இத்தலம் சரித்திர பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
கிபி 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கதம்ப குலத்தரசர்கள் இம்மலையில் கோட்டை கொத்தளங்களை கட்டிக்கொண்டு ஆட்சி புரிந்துள்ளார்கள். காடுகளும், மலைகளும் இயற்கை அரண்களாக அமையப் பெற்றுள்ளதால், மன்னர்கள் இந்த இடத்தை ராணுவத் தளமாகக் கொண்டிருந்தனர். தம்மை நாடி வந்த பக்தர்களுக்கு அரணாக இறைவனும் இறைவியும் விளங்குகின்றனர் என்று கருதப்படுகிறது.
பவானி வடிவம்
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி இத்தலத்தில் அமர்ந்து தியானம் செய்துள்ளார். சிவபெருமான் மீது பக்தி கொண்டு, மனைவி, மக்களை மறந்தும், இம்மலையின் இயற்கை எழிலைக் கண்டு மயங்கியும் பல நாட்கள் சிவாஜி இங்கு தங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது பிரமராம்பாள் தேவி, சத்ரபதி சிவாஜிக்கு தரிசனம் கொடுத்து, பெரிய வாள் ஒன்றை அளித்து, பகைவரை அழிக்க அருள்பாலித்ததாகவும் தகவல் உண்டு. மல்லிகார்ஜுனர், பிரமராம்பாள் மீதுள்ள பக்தி காரணமாக, சத்ரபதி சிவாஜி இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும், தியான மண்டபத்தையும் அமைக்க உத்தரவிட்டார்.
சாட்சி கணபதி
ஸ்ரீசைல மலைக்கு 2 கிமீ தொலைவில் சாட்சி கணபதி கோயில் அமைந்துள்ளது. இங்கு, திருமாலே கணபதி உருவத்தில் அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. தன்னைக் காண வருபவர்களில் யார் முக்திபெற தகுதியானவர்கள், யாருக்கு அத்தகுதி இல்லை என்று தட்சிண கயிலாயத்தில் (ஸ்ரீசைலம்) உள்ள சிவபெருமானுக்கு பட்டியலிட்டு கொடுப்பதால், இவர் சாட்சி கணபதி என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீசைலம் வரும் பக்தர்கள் முதலில் சாட்சி கணபதியை வணங்கிவிட்டு, பிறகு மல்லிகார்ஜுனரை தரிசிக்கச் செல்வது வழக்கம்.
திருவிழாக்கள்
யுகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு) ஆவணி மாத சப்தமி, மஹா சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், பிரதோஷ தினங்களில் மல்லிகார்ஜுனருக்கும் பிரமராம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, பக்தர்கள் திருமணத் தடைகள் நீங்க, பிள்ளைப்பேறு கிட்ட, வழக்குகளில் வெற்றிபெற, லட்சியம் நிறைவேற அம்மை, அப்பனின் அருள்வேண்டி அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, வஸ்திரம் அணிவித்து, திருக்கல்யாண உற்சவம் செய்வது வழக்கமாக உள்ளது.