நாகூரில் சிறப்புத் தொழுகையுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்


நாகை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி, வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

ஜாக் அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில், இஸ்லாமியர்கள் மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை ஒருவரையொருவர் பகிர்ந்து கொண்டனர். நாடு முழுவதும் மக்கள் அமைதி வாழ்வை வாழ வேண்டும் என்று துவா செய்தனர். ஜாக் மாநில செயலாளர் அன்சாரி பிர்தௌசி பக்ரீத் பண்டிகை தொடர்பான வாழ்த்துக்கள் மற்றும் அது தொடர்பான உரையை நிகழ்த்தினார். நாகூர் கிளை நிர்வாகிகள் தொழுகைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு குர்பானியாக ஆடு மாடு உள்ளிட்டவற்றின் மாமிசத்தை தானமாக கொடுத்து இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.