பரிணாம வளர்ச்சியின் முழுமை புத்தர்


அவரின் வெற்றி

தோல்வி அடைந்ததில்லை

அவரிடம் தோற்றவை

பின்பற்றுகின்றன அவரை

மிகு உயர்வடைந்த புத்தரை

எவ்வழியில் கண்டடைவாய்? (தம்மபதம் 179)

காலம் மிகவும் நுணுக்கமானது. அது தனக்கானவற்றை எப்போதும் தெரிவு செய்வதில் வல்லமை மிக்கது. அப்படித்தான் புத்தரையும் காலம் தெரிவு செய்தது. புத்தர்கள் அடிக்கடி தோன்ற முடியாது. ஏனென்றால் அது ஒரு பரிணாம வளர்ச்சி. முழுமையான நிறைமைகளோடு ஒரு புத்தர் உருவாவதற்கு காலம் மிக அதிகத்தை எடுத்துக்கொள்கிறது.

கடவுள் அல்லர்!

பல நூற்றாண்டுகளைக் கரைத்துக் கொண்டுதான் முழு நிறைமையான குணநலன்களையுடைய புத்தரை காலத்தால் தரமுடியும். பொறுமை, இரக்கம், இடைவிடாத முயற்சி, தீர்க்கமான நன்செய் மனம், ஞானம் தன்னலம் கருதாமை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே புத்தர் என்னும் ஈகை என்பது காலத்தின் நெடுமையில் விளையும் நிறைமையின் முழுமை.

புத்தரைப் போன்ற நிறைமை பெற்றவரை இந்த உலகத்தில் காணலாகாது. அவருக்கு உயர்ந்த ஒழுக்கம் இருந்தது. ஆழ்ந்த தியானம் இருந்தது, மிக உயர்ந்த ஞானம் இருந்தது. அதனால்தான் அவர் நிப்பாணத்தை போதித்தார். அவர் ஒரு சாதாரண மனிதர். கடவுளோ மாயமோ மந்திரமோ அல்லர்.

மனிதராய்ப் பிறப்பது அரிது

துன்பங்களைக் கொண்ட வாழ்வு

அழிவுக்குரியது

உண்மைகளைக் கேட்பது அரிது

புத்தர்கள் தோற்றமளிப்பதும் அரிது (தம்மபதம் 182)

உயிரினங்கள் அனுபவிக்கும் துன்பத்தை அவர் அறிந்தவர், அத்துன்பத்திலிருந்து விடுதலைப் பெறுவதற்கு அவர் போதித்தார். அது தம்மம். தம்மம் என்பது ஒழுக்கம். ஆகவேதான் தம்மம் சமூகத்துக்கானது எனப்படுகிறது.

பதிலளிக்க மறுத்த புத்தர்!

போத்தபாதர் என்பவர் புத்தரைச் சந்தித்து பல கேள்விகளைக் கேட்டுத்துளைத்தார். கேள்விகள் புத்தரின் மேல் பூக்களைப் போல விழுந்தன. ஜனநாயகத்தின் ஆணிவேரான உரையாடல்கள் மூலமே தன் தம்மத்தைப் பரப்பியவர் புத்தர். கேள்விகளை மிக நிதானமாக எதிர்கொண்டார்.

இந்த உலகம் நிலையானதா, நிலையற்றதா? இந்த உலகம் எல்லையுடையதா, எல்லையற்றதா? ஆன்மாவும் உடலும் ஒன்றா, வேறுவேறா? மரணத்திற்குப் பிறகும் வாழ்வுண்டா, இல்லையா?

புத்தர் சொன்னார். “போதபாதரே இவைப் பற்றி நான் எந்தக் கருத்தும் கூறவில்லையே!”

“ஏன் புத்தரே நீங்கள் எந்தக் கருத்தும் கூறவில்லை?”

“ஏனென்றால் இந்தக் கேள்விகளால் எந்தப் பயனும் இல்லை. நல்லொழுக்கத்திற்கோ, பற்றற்ற தன்மைக்கோ, உள்ளத் தூய்மைக்கோ, அவா அறுத்தலுக்கோ, சமநிலைக்கோ, உண்மை அறிவிற்கோ, நற்பாதைக்கோ, நிப்பாணத்திற்கோ இவ்வினாக்கள் பயன்படுவதில்லை.” என்றார் புத்தர். புத்தர் உலகைப் படைத்ததைப் பற்றி விளக்க வரவில்லை. அவர் உலகை நிர்மாணிக்க வந்தார்.

ஏன் பற்றுக் கூடாது?

நல்லனவற்றையெல்லாம் இந்த மானிடம் பெறவேண்டும்.மனத்தூய்மையுடன் வாழ்வதற்கான பொய்யாமை, களவு செய்யாமை, கொல்லாமை, பிறழ்காமம் கொள்ளாமை, மதுவருந்தாமை ஆகிய ஐந்து ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும். இவற்றைப் பின்பற்றினால் மனிதர்கள் பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். பிறருக்குத் தீங்கு செய்ய நினைக்காத சமூகம் சுரண்டலற்ற சமூகம். இவை புத்தரின் போதனைகள்.

நோகடிக்கும் சொற்கள் பேசாமை

தம்மக் கொள்கையின்படி கட்டுப்பாடு

அளவான உணவு

தியானம்

இவையே புத்தரின் போதனை (தம்மபதம் 185)

பெருஞ்செல்வம் சேர்த்தல், புகழ் சேர்த்தல் போன்றவற்றால் புலனின்பத்தை அடையலாகாது என்கிறார் புத்தர். எவ்வளவு பணம் இருந்து என்ன பயன் மகிழ்வான மனம் இல்லையென்றால்? ஒருவேளை அது நமக்கான நல்ல வசதியான வாழ்வைத் தரலாம். நம் புலன்களுக்குத் தரும் இன்பங்களை வாரி வழங்கலாம். ஆனால், அவை எப்போதும் நிலையானவை அல்ல. இனிப்பை அதிகமாக விரும்பிச் சாப்பிடும் பணக்காரருக்கு நீரிழிவு நோய் வந்து விட்டால் அவரால் இனிப்புச் சாப்பிட முடியாமல் போகும் அல்லவா? அப்படித்தான். எனவே சிற்றின்பங்கள் எல்லாம் பெருந்துன்பத்தில்தான் போய் முடியும். இதை உணர்ந்து கொண்டு இவற்றின்மேல் இருக்கும் பற்றுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நான்கு உண்மைகள்

ஆபத்துகள் அச்சுறுத்துகையில் மனிதர்கள் எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாம். மலைகள், காடுகள், சோலைகள், குகைகள், என எங்கேனும் போகலாம். அவை அவ்வளவு பாதுகாப்பானவை இல்லை என்பதை நாம் உணரவேண்டும். அவை ஒருவேளை தற்காலிகப் பாதுகாப்பானவையாக இருக்கலாமே ஒழிய நிரந்தரமானவை அல்ல. துன்பங்களிலிருந்து விடுபடாமல் இத்தகைய தற்காலிக பாதுகாப்புகளால் பயன் இல்லை.

அப்படியானால் துன்பங்களிலிருந்து விடுபட என்ன செய்ய? இதுதான் பௌத்தத்தின் அடிப்படை. புத்தரை தம்மத்தை சங்கத்தைச் சரண் அடைந்தால் ஒருவர் உண்மையான பாதுகாப்பை அடையலாம். அப்போது அவர் நான்கு உண்மைகளை உணர்கிறார்.

துக்கம், துக்கமூலம், துக்கநிவாரணம், துக்கநிவாரண வழிகள்.

தம்மத்திற்கானத் தடைகளைத் தகர்த்து

புலம்பல்களிலிருந்து விடுபட்டவர்கள்

ஆசை நெருப்பை அணைத்தவர்கள்

அச்சமற்றவர்களாகிய

புத்தரையோ அவரது சீடரையோ

பின்பற்றுபவர்களின் இன்பத்தை

அளவிடமுடியாது யாரேனும் (தம்மபதம் 195 – 196)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
தந்தையை அவமதித்தாரா புத்தர்?

x