ஃ அம்மனின் சக்தி பீடங்கள் வரிசையில், திருக்கோகர்ணம் தலத்தில் தேவியின் காது விழுந்ததாகக் கூறப்படுகிறது. பூமாதேவியின் காது வழியாக சிவபெருமான் வெளிப்பட்டு கோயில் கொண்ட தலமாக (கர்ண சக்தி பீடம்) திருக்கோகர்ணம் கருதப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள திருக்கோகர்ண தலத்துக்கு வந்து, கோகர்ணேஸ்வரரையும் கோகர்ண நாயகியையும் வழிபட்டால் கயிலை மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபட்ட பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை. சிறப்புமிக்க நதிகளையும் தீர்த்தங்களையும் கொண்டதாக இத்தலம் விளங்குகிறது.
இங்கு சிவபெருமான் மலையாகவும், பார்வதி தேவி நதியாகவும் அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் முன்புறம் நதியும் அதற்கடுத்து மலையும் இருப்பதால், இத்தலத்தில் கிரிவலம் செய்ய முடியாது. கோகர்ணம் தலத்தின் வரலாறு விபீஷணன் ரங்கநாதரை இலங்கைக்கு கொண்டு சென்றதை, விநாயகர் தடுத்ததைப் போன்று உள்ளது.
தல வரலாறு
கோகர்ணம் தலத்தில் உள்ள பிராணலிங்கத்தின் பெருமைகளைக் கேள்விப்பட்டதும், அதை இலங்கை கொண்டு செல்ல வேண்டும் என்று ராவணன் விருப்பம் கொண்டான். தன் விருப்பத்தை நிறைவேற்றுமாறு கயிலை மலைக்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் புரியத் தொடங்கினான்.
ராவணனின் தவத்தின் நோக்கத்தை உணர்ந்த நாரத முனிவர், தேவலோகம் சென்று இந்திரனிடம் இதைத் தெரிவித்தார். மேலும், பிராணலிங்கத்தை ராவணன் இலங்கைக்கு இடம் மாற்றினால் தேவர்களின் பலம் குறையும் என்று எச்சரித்தார். உடனே, இந்திரன் கயிலை மலைக்கு விரைந்தான்.
அந்த நேரத்துக்குள், சிவபெருமான் ராவணனின் தவத்தில் மகிழ்ந்து, அவன் வேண்டிய வரத்தை அளிக்கிறார். பிராணலிங்கத்தை ராவணனிடம் அளித்த சிவபெருமான், நடந்தேதான் இலங்கை செல்ல வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் பிராணலிங்கத்தை கீழே வைக்கக் கூடாது என்றும் கூறுகிறார்.
பிராணலிங்கத்துடன் இலங்கை திரும்பிக் கொண்டிருக்கும் ராவணனைத் தடுத்து நிறுத்த எண்ணினார் திருமால். உடனே விநாயகப் பெருமானை அழைத்த திருமால், ராவணன் சந்தியாவந்தனம் செய்யும் நேரத்தில் அவன் முன்னர் நிற்கப் பணிக்கிறார். மேலும், சில ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
திருமால் தன் கரத்தை பூமிக்கும் வானத்துக்கும் இடையே நிறுத்தினார். மாலை வேளைபோல் சற்றே இருள் சூழ்ந்ததும், சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்று ராவணன் நினைத்தான். அப்போது, யாரிடமாவது பிராணலிங்கத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்த ராவணன், சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கு விநாயகப் பெருமான் நின்றிருந்ததைப் பார்த்து, அவரை அழைத்து, சிறிது நேரம் பிராணலிங்கத்தை வைத்துக் கொள்ளும்படி கூறுகிறார்.
பிராணலிங்கத்தைப் பெற்றுக்கொண்ட விநாயகர், “காலம் தாழ்த்தாது திரும்பி வரவேண்டும். பாரம் தாங்காது தான் தவித்தால், மூன்று முறை கூப்பிடுவேன். அப்படியும் வரவில்லை என்றால், பிராணலிங்கத்தை கீழே வைத்து விடுவேன்” என்றும் கூறினார்.
ராவணன் அங்கிருந்து சென்றதும், தேவர்கள், மூவுலகின் பாரத்தை பிராணலிங்கத்தின் மீது செலுத்தினர். பிராணலிங்கத்தின் பாரத்தை தாங்க முடியாமல் விநாயகப் பெருமான், ராவணனை மூன்று முறை அழைத்தார். ஆனால், ராவணன் வரவில்லை. உடனே பிராணலிங்கத்தை கீழே வைத்துவிடுகிறார் விநாயகர். பிராணலிங்கம் நன்றாக ஊன்றி நிலைத்துவிட்டது. திரும்பி வந்த ராவணன், பிராணலிங்கத்தை கீழே வைத்ததற்காக விநாயகரின் தலையில் குட்டினான்.
எவ்வளவு முயன்றும் லிங்கத்தைத் தூக்க முடியாததால், அப்படியே விட்டுவிட்டு இலங்கை திரும்புகிறான் ராவணன். தேவர்கள் தேவ சிற்பியை அழைத்து அவ்விடத்தில் கோயில் அமைத்து வழிபட்டனர். தன் பலம் முழுவதும் செலுத்தி ராவணன் பிராணலிங்கத்தைத் தூக்க முயன்றதால், லிங்கம் பசுவின் (கோ) காதுகளை (கர்ணம்) போல் குழைத்து நீண்டது. பசுவின் காது போல் அமைந்த லிங்கம் என்பதால், இத்தலம் ‘கோகர்ணம்’ என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள சிவபெருமான் மகாபலேஸ்வரர் (கோகர்ணேஸ்வரர்) என்று அழைக்கப்படுகிறார். ராவணனின் பலம் முழுதும் இங்கு உபயோகப்படுத்தப்பட்டும், இங்கு எதுவும் செல்லுபடியாகவில்லை. அதனால் மகாபலநாதர் என்ற பெயர் பெற்றார் சிவன். அவர் அருகிலேயே விநாயகப் பெருமான் அருள்பாலிக்கிறார். நதிவடிவில் அம்பிகை அருள்பாலிப்பதால் தாமிர கௌரி என்று அழைக்கப்படுகிறார். அவரே கோகர்ண நாயகியாக இங்கு வீற்றிருக்கிறார்.
கோகர்ண நாயகி
கலியுகத் தொடக்கத்தில் அனைத்து உலகங்களும் நீரால் சூழப்பட்டிருந்தன. பிரம்மதேவர் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க வேண்டியிருப்பதால், சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறார். அப்போது உருத்திரன், பிரம்மதேவரின் நெற்றியில் தோன்றினார். படைப்புத் தொழிலைச் செய்ய உருத்திரனிடம், பிரம்மதேவர் வேண்டுகிறார்.
அதையேற்று பாதாள உலகத்தில் இருந்து படைப்புத் தொழிலைத் தொடங்குகிறார் உருத்திரன். அனைத்து படைப்புகளும் தூய்மையானதாக இருக்கின்றன. உலக நடைமுறைக்கு இது ஏற்றதல்ல என்பதால், சத்வ, ரஜோ, தமோ குணங்கள் கலந்த உயிர்களைப் படைக்கிறார் பிரம்மதேவர்.
சத்வ குணம் என்பது அருள், தவம், வாய்மை, மேன்மை, ஐம்புலன் அடக்கம் முதலியனவாகும். ரஜோ குணம் என்பது மன ஊக்கம், ஞானம், தர்மம், தானம், கல்வி, கேள்வி, ஆராய்ச்சி முதலியன. தமோ குணம் என்பது கோபம், களவு, கொலை, வஞ்சகம், பொய், நீதிவழு, ஒழுக்கவழு, மறதி, நெடுந்துயில், பேருண்டி, சோம்பல் முதலியனவாகும். தன்னுடைய படைப்புகளுக்கு முற்றிலும் மாறான படைப்புகளைப் பிரம்மதேவர் படைப்பதால் கோபம் கொண்ட சிவபெருமான், பூமியைப் பிளந்துகொண்டு மேலே வருவதற்கு முயன்றார். அப்போது பூமாதேவி, தன்னை வருத்தாமல், தன் காதுவழியே வெளியே வருமாறு சிவபெருமானை வேண்டினார்.
அதன்படி சிவபெருமான், கட்டை விரல் அளவில் உடலைச் சிறிதாக்கிக் கொண்டு, பூமாதேவியின் காது வழியே (கோ – கர்ணம்) வெளிவந்தார். ஆகவே இத்தலம் (காது துவார தலம்) கோகர்ணம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் கோகர்ணேஸ்வரர் என்றும், இறைவி கோகர்ண நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
பிரம்மதேவரின் நெற்றியில் சிவபெருமானை தோன்றச் செய்ததும், தன் காது வழியாக உருத்திரனை வரவழைத்ததும் தேவிதான். பிரம்மதேவர், சிவபெருமான், திருமால் ஆகியோரின் செயல்களும் ஆதிசக்தியின் ஆணைக்கு இணங்கவே இருக்கும். மூவரையும் படைத்தது ஆதிசக்தியே. இத்தலத்தில் கோகர்ண நாயகியாகவும் பத்ரகர்ணிகையாகவும் அருள்பாலிக்கிறார் சக்தி.
கோயில் அமைப்பு
அம்மையும் அப்பனும் இணைந்ததே சிவலிங்க வடிவம் என்பதால், அம்மையின் சக்தியுடன் இணைந்த லிங்கத்தை, அசைக்க முடியாமல் ராவணன் தோல்வியுற்றான். மகாபலநாதரும் கோகர்ண நாயகியும் இங்குள்ள சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அருகே, திவிபுஜ விநாயகர் தனிக்கோயில் கொண்டு, கம்பீரமான உருவத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
மஹா காசி, மஹாபலகர விஸ்வநாதர், கோடித் தீர்த்தம், கங்கை சமுத்திரம் ஆகியவை இத்தலத்தில் அமைந்திருப்பதால் புண்ணிய பூமியாக இத்தலம் கருதப்படுகிறது. தாமிர கௌரி தீர்த்தம், காயத்ரி நதி, சத சிருங்க பர்வதம், உமா மகேஸ்வர பர்வதம் முதலியவற்றை இத்தலம் கொண்டுள்ளது.
தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு அன்னை செயல்பட்டதால், அசுர சக்தி வெற்றி பெறுதல் என்பது இயலாத ஒன்றாகியது. அம்மையும் அப்பனும் பிரிக்க முடியாதவர்கள் என்பதால், அப்பனின் பெருமைகள் அனைத்தும் அம்மைக்குப் பொருந்தும். அம்மையின் சிறப்பு அம்சங்கள் அனைத்தும் சிவபெருமானுக்கும் பொருந்தும்.
சத சிருங்க பர்வதம்
கயிலாயத்தில் சிவபெருமானும், இந்திர நீல பர்வதத்தில் திருமாலும், சத சிருங்க பர்வதத்தில் பிரம்மதேவரும் இருக்கும் இடங்களாகும். துர்முகன் என்ற நாகத்தை, கருடன் கொத்தி எடுத்துக்கொண்டு வந்தபோது, சத சிருங்க பர்வதத்தில் நாகம் நழுவி விழுந்தது. இதுதான் சமயம் என்று நினைத்த நாகம், சத சிருங்க பர்வதத்தில் ஒளிந்து கொண்டது. கருடன் எங்கு தேடியும் நாகம் கிடைக்கவே இல்லை.
அதனால் சத சிருங்க பர்வதத்தை, கருடன் தூக்க முயன்றது. பிரம்மதேவர் பர்வதத்தை நன்றாக ஊன்றினார். தடுமாறிய கருடன், உதவிக்கு அகத்திய முனிவரை அழைத்தது. கருடனுக்கு உதவும் நோக்கோடு, அகத்தியர் பர்வதத்தைப் பெயர்த்துக் கடலில் வைத்தார். அம்மலையில் இருந்து இரண்டு கோடித் தீர்த்தங்கள் உருவாகின. தனது இருப்பிடமான சத சிருங்க பர்வதம், கோகர்ணத்தில் அமைந்தது குறித்து பிரம்மதேவர் மகிழ்ச்சி அடைந்தார். இரண்டு கோடித் தீர்த்தங்களில் ஒன்று காயத்ரி நதியாக மாறி, கடலில் சேர்ந்தது. மற்றொன்று கீழ்ப்பக்கமாக வந்து கோடித் தீர்த்தக் குளமாக மாறியது.
கோடித் தீர்த்தக் கரையில் அகத்தியர் ஆசிரமம் அமைந்துள்ளது. அதனருகே அகத்தியர் தீர்த்தம், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வாசுதேவர் கோயில், கருட தீர்த்தம், கருட மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.
தாமிர கௌரி
கோகர்ணேஸ்வரர் சந்நிதிக்கு வடகிழக்கு மூலையில் தாமிர கௌரி சந்நிதி அமைந்துள்ளது. பிரம்மதேவர் நிஷ்டையில் இருந்தபோது, அவரது வலது கையில் நதி உருவில் ஒரு பெண் தோன்றினார். பிரம்மதேவரின் ஆலோசனைக்கிணங்க, அப்பெண் சிவபெருமானை நாடி கோகர்ணத்துக்கு வந்தார். வைலாஹிகம் என்ற மலையில் இறைவன் அவரை மணம் புரிந்தார். தாமிர நதியாக உருவான அப்பெண் தாமிர கௌரி என்ற பெயரைப் பெற்றார்.
கௌரி, பார்வதி, கோகர்ண நாயகி, பத்ரகர்ணிகை ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் தேவி, அனைவருக்கும் அன்னையாக இருந்து அருளைப் பொழிகிறார். கோகர்ணம், பிதுர்க்கடன்களை முடிக்க சிறந்த இடமாகும்.
திருவிழாக்கள்
இங்குள்ள லிங்க ஸ்தாபிதம், ஈஸ்வர ஆண்டு துலா மாதம் கார்த்திகை சித்தப்பிரதியாகம், ஆதி வாரம், விசாக நட்சத்திரம், மீன லக்னம் ஆகியவை கூடிய நேரத்தில் நடைபெற்றதால், ஒவ்வொரு வருடமும் கார்த்திகை சுத்தத்தில் சிறப்பு தீபாலங்கார சேவை நடைபெறும். கார்த்திகை பவுர்ணமியில் திரிபுர தகன விழா நடைபெறும். மாசி மாத சிவராத்திரி விழா 9 நாட்கள் நடைபெறும். முதல்நாளில் தேர்த் திருவிழாவும், 8-ம் நாள் பிரம்மோற்சவமும் நடைபெறும்.