தினமும் நடைபயிற்சி, ஜாலி குளியல்; ஸ்ரீரங்கம் யானைகளின் புதுவாழ்வு


ஜாலி குளியல் போடும் ஆண்டாள், லெட்சுமி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள் மற்றும் லெட்சுமி என்ற 2 யானைகளுக்கும் தினமும் 10 கிலோ மீட்டர் நடைபயிற்சி, 3 நாட்களுக்கு ஒருமுறை பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குளத்தில் குளியல் என்று புதுவாழ்வு கிடைத்துள்ளது.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதசுவாமி திருக்கோயிலில், ஆண்டாள் மற்றும் பிரேமி (எ) லெட்சுமி ஆகிய 2 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த 2 யானைகளும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், தினசரி விஸ்வரூப பூஜை மற்றும் திருவிழா நாட்களில் பங்கேற்று கைங்கர்யப் பணிகள் செய்து வருகின்றன.

இந்த யானைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி இயற்கை உணவுகள் மற்றும் சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன. மாதம் இருமுறை கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் வனத் துறை அலுவலர்களிடம் உரிய கால இடைவெளியில் ஆலோசனைகள் பெறப்பட்டு, நல்லமுறையில் அவை பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில் யானைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக குளியல் மற்றும் நடைபயிற்சி வசதி செய்வதற்கு, கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கொள்ளிடம் அருகே பஞ்சக்கரை சாலையில், சுமார் 5.48 ஏக்கரில் இயற்கை சூழலில் திருக்கோயிலுக்குச் சொந்தமான உடையவர் தோப்பு என்ற இடத்தில், சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவிப்பு எண்.104-ன்படியும், இக்கோயில் யானைகளுக்கு குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 40 அடி நீளம், 40 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்துடன் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் இந்த தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யானைகள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு தோதாக, ஒரு சுற்றுக்கு 857 மீட்டர் என்ற விகிதத்தில் நடைபாதையும் கோயில் நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. சராசரியாக 3 நாளைக்கு ஒருமுறை குளியல் தொட்டியில் நீராடி மகிழவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தினசரி கோயிலிலிருந்து சுமார் 1.1 கி.மீட்டர் தொலைவிலுள்ள இந்த தோப்புக்கு 2 யானைகளும் நடைபயிற்சியாக சென்று, மேற்படி தோப்பிலுள்ள வட்டப்பாதையில் மட்டும் குறைந்தபட்சம் 5 கிமீ அளவுக்கு நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபயிற்சி முடிந்த பிறகு, மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு கோயில் யானைக் கூடத்துக்கு வந்து சேரும்.

இதனால், யானைகளுக்கு வழக்கமான பணிகளுடன் சேர்ந்து சுமார் 10 கி.மீ தூரத்துக்கு நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யானைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையும், குளியல் தொட்டியும் இன்று முறைப்படி பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்வு நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட 2 யானைகளும், மேள, தாளங்கள் முழங்க, ஊர்வலமாக உடையவர் தோப்புக்கு அழைத்து வரப்பட்டு, நடைபாதை, குளியல் பயிற்சிகள் தொடங்கின. இந்நிகழ்வில், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x