முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, மாநிலம் முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபட்டுச் சென்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் குழுவில், பழனி மலைக்கோயிலில் ஒருநாள் இரவு தங்கி வழிபட்டுச் செல்லும் உரிமைபெற்ற ஒரே குழு எடப்பாடியைச் சேர்ந்த ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுவினர்தான். ஒவ்வொரு ஆண்டும் சேலம், தர்மபுரி, நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் இக்குழுவின் சார்பில் பழனிக்கு வருவது வழக்கம்.
இந்த ஆண்டு பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, எடப்பாடி ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுவினர் எடப்பாடி செல்லியாண்டியம்மன் கோயிலில் இருந்து, பழனி நோக்கி பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். இது அவர்களது 362-வது பாதயாத்திரையாகும். காங்கேயம், வட்ட மலை, தாராபுரம் வழியாக பழனி வந்தடைந்தார்கள். இன்று இரவு பழனி மலையில் தங்கி, பல்வேறு வழிபாடுகளை நடத்துகிறார்கள். வழக்கமாக ஆயிரக்கணக்கானோர் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, 400 பேருக்கு மட்டுமே அனுமதி தந்திருக்கிறது கோயில் நிர்வாகம்.
எடப்பாடி காவடிக் குழுவில் அன்னதான குழு, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழு என பல்வேறு குழுக்கள் உள்ளன. காவடிக்குழுவில் வருகை தரும் பக்தர்களுக்கு சுமார் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரித்து வழங்கப்பட உள்ளது. இதையொட்டி எடப்பாடி பஞ்சாமிர்தம் தயாரிப்புக் குழுவினர் முன்கூட்டியே பழனி மலைக்கோவிலுக்கு வருகை தந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 டன் வாழைப் பழங்கள், 6 டன் சர்க்கரை, 2500 கிலோ பேரீச்சம் பழம், 1000 கிலோ கற்கண்டு, 240 கிலோ தேன், 240 கிலோ நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவற்றைப் பயன்படுத்தி 20 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பஞ்சாமிர்தத்தை பழனியாண்டவருக்குப் படைத்து, பின்னர் பக்தர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.