ஊரடங்கில் வந்த முகூர்த்தம்; கோயில் வாசலில் திருமணம்!


திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் நடந்த திருமணம்.

கரோனா பரவல் கரணமாக, தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளன. இதன்படி மதுரையில் நேற்றிரவு 10 மணி முதலே ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்ததுடன், எச்சரிக்கையும் விடுத்தார்கள்.

இன்று ஊரடங்காக இருந்தபோதிலும் முகூர்த்த நாள் என்பதால், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட திருமணங்கள் எளிமையான முறையில் நடந்தன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாகப் போற்றப்படும் திருப்பரங்குன்றம் கோயில், முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்த தலம். எனவே, மதுரை மட்டுமின்றி விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் முருக பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் வந்து திருமணம் செய்வது வழக்கம். இன்று முகூர்த்த நாள் என்பதால், ஊரடங்கால் கோயில் நடை சாத்தப்பட்டிருந்த போதிலும், கோயிலின் முன்பு நின்று மணமக்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

மணமக்களின் உறவினர்கள் 30-க்கும் குறைவானவர்கள் மட்டுமே அதில் பங்கேற்றதால், போலீஸாரும் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. அதே நேரத்தில், கூட்டம் சேராமல் ஒவ்வொரு குழுவினராக கோயில் வாசலில் திருமணம் நடத்திக் கொள்ளுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். திருமணம் முடிந்து கோயிலின் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்யமுடியாமல் போனாலும், நாளை கோயில் நடை திறந்த பிறகு சாமி தரிசனம் செய்யவிருப்பதாக மணமக்கள் தெரிவித்தனர்.

x