தந்தையை அவமதித்தாரா புத்தர்?


உலகை நிலைபெறச் செய்யும் அற்புத மந்திரம் அன்பு மட்டுமே. அன்பின்றி வாழ்தல் உலகில் எந்த உயிருக்கும் ஆகாது. உலகின் பொதுவான இயக்கம் அன்பினால் இருக்கிறது. அறம் அதன் காப்பாக இருக்கிறது. அந்த அறமும் அன்பும் சேர்ந்து இருக்கும் இடம் துன்பமற்ற ஒன்றாக மாறிவிடுகிறது. இடம் என்பது வாழ்க்கை என்றுகூட நாம் வைத்துக்கொள்ளலாம். அதனால் தான் உலகிற்கு பௌத்தம் மிக முக்கியத்துவம் தருகிறது. மைத்திரி என்று ஒரு சொல் பௌத்தத்தில் மிக முக்கியமானது.

தூய்மையான வாழ்க்கை, நன்னெறி நடத்தை இவற்றைப் பேசுகின்றபோது புத்தர் பிரதன்யத்தினைப் பற்றிக் கூறுகிறார். ’பிரதன்யம்’ என்றால் ஒருவர் பெறுகிற உயர் சிந்தனை. இந்த உயர் சிந்தனை கல்வியால் வரும். எனவே அனைவருக்கும் கல்வி என்ற மாற்றுச்சிந்தனையை இந்தியாவில் வைத்தவர் புத்தர்.

மைத்திரி போதித்த புத்தர்

கல்வி மறுக்கப்பட்ட சமூகங்கள் அதற்கான காரணத்தைக்கூட அறிந்துகொள்ளாமல் இருந்தனர். ஆனால், புத்தர் பிரதன்யத்தை பொதுவாக்கினார். வெறும் பிரதன்யம் மட்டும் போதாது. அவர்களுக்கு சீலம் என்னும் ஒழுக்கமும் இருக்க வேண்டும். இவை மட்டும் போதாது அவர்களுக்கு மைத்திரி என்னும் அனைத்துயிர்கள் மேல் காட்டும் அன்பும் நட்பும் வேண்டும் என்பது புத்தரின் போதனைகளாக இருந்தது.

நன்முயற்சியும் நல்லெண்ணமும் இருக்கும் மனிதர்கள் நிறைந்திருக்கும் உலகம் மகிழ்ச்சியும் துன்பமற்றதாகவும் இருக்கும்.

தீமையின் வாழ்வினைப்

பின்பற்றத் தேவையில்லை

விழிப்பின்றி இருத்தல் வேண்டாம்

தவிர் தவறான நோக்கம்

உலகப்பூர்வத்தை மதிப்பிடாதே (தம்மபதம் 167)

மகிழ்ச்சி என்பது இந்த வாழ்வில் இருக்க வேண்டும். அடுத்த ஜென்மத்தில் அல்லது சொர்க்கத்தில் மகிழ்ச்சி இருக்கும் என்பதற்காக இவ்வாழ்வின் மகிழ்ச்சியை இழப்பது மனிதர்களின் வேலையாக இருக்கிறது. மகிழ்ச்சி என்பது தீயவழிகளில் வரும் மகிழ்ச்சியல்ல. மாறாக நன்னெறியில் மகிழ்ச்சி. விழிப்புடனிருந்து நியாயமாய் வாழ மனிதர்கள் முயற்சி செய்ய வேண்டும். அவர்களே இந்த வாழ்வில் எப்போதும் மகிழ்ந்திருப்பர். இந்த வாழ்க்கை என்பது இப்போதிருக்கும் வாழ்க்கை. அதுமட்டுமல்ல தவறற்று சரியாய் நடத்தலே இம்மையில் எப்போதும் மகிழ்ச்சி.

புத்தர்கள் என்றென்றும் செய்தவை!

ஞானம் பெற்றபின் புத்தர் முதன்முறையாக கபிலவஸ்துவுக்கு வந்திருந்தார். அதுதான் அவருடைய தந்தை ஆண்டுக்கொண்டிருந்த மண். அங்கிருந்துதான் புத்தர் துறவறமேற்று காடேகினார். மீண்டும் அந்த மண்ணில் அவர் காலடிகள் பட்டிருக்கின்றன. ஆனால், அவை ஞானத்தின் கால்கள்.

அன்று உணவுக்காக அவரை யாரும் அழைக்கவில்லை. அதனால் உணவுப் பிச்சைக்காக வீதிகளில் வருகிறார் புத்தர். இதைக் கேள்வியுற்ற மன்னர் சுத்தோதனர், புத்தரிடம் வேகமாக வந்து, “என்னை ஏன் இப்படி அவமானப்படுத்துகிறாய்? உனக்கான நம் வீட்டின் கதவுகள் நெடுங்காலமாகத் திறந்தே கிடக்கின்றன. நீ நேராக நம் அரண்மனைக்கு வருவாய் என்றல்லவா எண்ணியிருந்தேன்” என்றார்.

புத்தர் மெல்லப் புன்னகைத்தார். “இல்லை மன்னா நான் உங்களை அவமானப்படுத்தவில்லை, வழிவழியாக புத்தர்கள் எதைச் செய்தார்களோ அதைத்தான் செய்தேன்” என்றார்.

புத்தரின் சரியான செயலைச் சுத்தோதனர் புரிந்துகொண்டார். இந்த வாழ்வில் புத்தர் சரியாக நடந்துகொண்டார்.

ஒரு குமிழியைக் காண்பது

கானல் நீரைப் பார்ப்பது

அவற்றைப் போல

உலகினைப் பார்த்தால்

படாஅது அவர்மேல்

மரணக்கடவுளின் பார்வை ( தம்மபதம் 170)

இந்த உலகத்தின் வாழ்வின் மீதும் அதன் அழகுகளின் மீதும் பற்றுக்கொண்டு அவற்றுக்காகத் துன்புற்றுக் கொண்டிருக்கும் மக்களே புரிந்துகொள்ளுங்கள் அது அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட மண் தேரைப்போன்றது. அதனால் ஒருபயனும் இல்லை.

சூரியனை நோக்கும் பறவை

அறவோர்கள் அந்த உலகின் மீது பற்றற்று இருப்பார்கள். ஆகவே விழிப்பாயிருங்கள். அப்படியென்றால் கண்விழித்துத் தூங்காமல் இருங்கள் என்று பொருள் இல்லை. எல்லாவற்றிலும் தெளிவாகவும் அவற்றின் நன்மை தீமைகளை அறிந்தவர்களாகவும் இருங்கள். அப்படி இருப்பவர்கள் மேலும் தங்களைத் தூய்மையாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள்மேல் கறைகள் படிவதில்லை.

மேகக் கூட்டத்திலிருந்து விலகிய நிலவினைப் போல் அவர்கள் ஒளிவீசுவார்கள். அவர்கள் நற்செயல் செய்வதிலிருந்து எப்போதும் பின்வாங்க மாட்டார்கள். தீமைகளிலிருந்து எப்போதும் விலகியே இருப்பார்கள். வலையிலிருந்து சில பறவைகள் மட்டும் தப்புவதுபோல சிலர் மட்டும் உலகப்பிடிகளிலிருந்து விடுபட்டு உயர்வுற்று விடுகின்றனர். இந்த உலகம் இருள் நிறைந்தது. சிலர் மட்டுமே ஒளிபெற்று நற்பார்வைக் கொள்வர். காமம் முதலான ஆசைகளிலிருந்து அறுபட்டு அறிவாளர்கள் இந்த உலகினை அகன்றுவிடுகின்றனர். அவர்கள் சூரியனை நோக்கிப் பறக்கும் பறவைகளைப் போன்றவர்கள்.

பொய்யுரைப்பவர் செய்யாத தீமைகள் இருக்காது. அவர்கள் உண்மைக்கு எதிரானவர்களாகவே எப்போதும் இருப்பார்கள். அவர்கள் உயர்ந்திருக்கும் உண்மைகளை நோக்கிச் செல்ல முடியாதவர்கள். விடுதலை அவர்களுக்கு வாய்க்காது. ஆனால், அறிவாளர்களோ கொடுப்பதில் மகிழ்வர். எனவே உலகப்பற்றற்று இருப்பது வாழ்விற்கு நல்லது.

நிரந்தர மகிழ்ச்சி

வீடுபேறடைதல்

கடவுள் தன்மை

இவற்றைவிட மேன்மையானது

நிப்பாணத்தை அடைவது (தம்மபதம் 178)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
‘தான்’ தான் எல்லாம்!

x