5 நாட்கள் தீபாவளி கொண்டாட்டம்


எமதர்மர்

வட மாநிலங்களில் 5 நாட்கள் தீபாவளி கொண்டாடப்படும். ஐப்பசி அமாவாசைக்கு 2 நாட்கள் முன்னர் தன்வந்திரி ஜெயந்தி (தன்திரயோதசி, தன்திரேயாஸ்) வருவதால் (கிருஷ்ணபட்ச திரயோதசி), அன்று முதலே கொண்டாட்டம் ஆரம்பமாகும்.

அன்று 13 வெள்ளி காசுகள் அல்லது தங்க காசுகள் வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

அதற்கு முதல்நாள், மிளகு, மல்லி, சுக்கு, ஓமம் முதலான பொருட்களை சேர்த்து மருந்து தயாரிப்பது வழக்கம். இந்த நாளை எமதர்மருக்கு உண்டான நாளாக கொண்டாடுவதுண்டு. அன்று இரவு ‘எமதீயா’ என்ற எமதீபம் ஏற்றப்படுகிறது. இதற்கு ஒரு புராணக் கதை கூறப்படுகிறது.

ஹிமா என்ற அரசருக்கு ஒரு சாபம் இருந்தது. அதாவது அவருக்கு திருமணம் ஆன 4-வது நாள் அரவு தீண்டி அவர் உயிரிழக்க நேரும் என்பதே அந்த சாபம். இதை அறிந்த அவரது மனைவி, அந்த நாளில் (தன்வந்திரி ஜெயந்தி) இரவு நேரத்தில் கணவரைச் சுற்றி நிறைய விளக்குகளை ஏற்றி, நிறைய ஆபரணங்களை வைத்து, அவர் உறங்காதபடி அவருக்கு புராணக் கதைகளைக் கூறி வந்தார்.

பாம்பு உருவில் வந்த எமதர்மருக்கு, தீப ஒளியில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கண்கள் கூசின. அதனால் காலைவரை காத்திருந்தார்.

எமதீபம்

உயிரைப் பறிக்க வேண்டிய நேரம் தப்பியதால், எமதர்மர், ஹிமாவின் உயிரைப் பறிக்காது திரும்பினார் என்று கூறப்படுகிறது.

தன்னைத் தன் மனைவி காப்பாற்றியதற்கு தன்வந்திரி பகவானே காரணம் என்று ஹிமா நம்பினார். அனைவரும் இந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்றும், இரவு நேரத்தில் எமதீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மஹாராஷ்டிராவில் இந்த நாளில், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லத்தை இடித்துப் பிரசாதமாக இறைவனுக்கு படைப்பது வழக்கம். அதற்கு அடுத்தநாள் சோடி தீபாவளி, ஒருநாள் கழித்து தீபாவளி தினத்தில் லட்சுமி பூஜை, அடுத்தநாள் கோவர்த்தன பூஜை, கடைசிநாள் அன்று சித்ரகுப்த பூஜை, கோதானம் என்று 5 நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

திருமால் மக்களுக்கு மருத்துவராகத் தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தி ஆகும். தன்வந்திரி பகவானை தினமும் போற்றி நல்ல உடல்நலம் பெறுவோம்.

ஓம் நமோ நாராயணாய…

x