ஸ்ரீ தன்வந்திரி


ஸ்ரீ தன்வந்திரி

திருமால் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர் ஆகிய அவதாரங்களை எடுத்துள்ளார். மேலும் கலியுகத்தில் கல்கி அவதாரத்தையும் எடுப்பார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த தசாவதாரங்கள் தவிர மேலும் 14 அவதாரங்களை எடுத்துள்ளார் திருமால்.

அந்த அவதாரங்கள்: ஹயக்ரீவர், இருதுமன்னன், நவநாராயணன், மோகினி, தத்தாத்ரேயர், தன்வந்திரி, ஜனகர், நாரதர், குப்தர், அம்சவர்த்தனர், ரிஷபர், கபிலர், வியாசர், யக்ஞர் அவதாரங்கள் ஆகும். ஸ்ரீ தன்வந்திரி அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணு புராணம், பிரம்மாண்ட புராணங்களில் குறிப்புகள் உள்ளன.

ஒருசமயம் துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளாகி, இந்திரன் தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்தார். திருமாலின் அறிவுரையின்படி, அசுரர்களுடன் கூட்டு சேர்ந்து பாற்கடலைக் கடைய ஏற்பாடுகள் செய்தார். அதன்விளைவாக ஆலகால விஷம் தோன்றியது. சிவபெருமான் அந்த விஷத்தை தன் கண்டத்தில் (கழுத்தில்) இருத்தியதால் ‘நீலகண்டர்’ என்ற பெயர் பெற்றார்.

இந்த விஷத்தைத் தவிர காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவத யானை போன்ற புனித பொருட்களும் வந்தன. நிறைவாகப் பாற்கடலில் இருந்து திருமாலே தன்வந்திரியாக அவதாரம் எடுத்து அம்ருத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார்.

இந்த அமிர்தத்தை அடைந்து, தன் செல்வங்களை மீட்டார் இந்திரன். திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள், தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னர் வரும் திரயோதசி நாள் (ஐப்பசி – கிருஷ்ணபட்ச திரயோதசி – ஹஸ்த நட்சத்திரம்) ஆகும். இந்த தினம் தன்வந்திரி ஜெயந்தியாக ‘தன்திரேயாஸ்’ என்ற பெயரில் வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி

தன்வந்திரி அவதாரம் திருமாலின் 17-வது அவதாரமாக விளங்குகிறது. ஆயுர்வேத மருத்துவத்தை மக்களுக்கு அளித்தவர் தன்வந்திரி பகவான். இறைவனே மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காக்கிறார் என்பதே, இந்த அவதாரத்தின் உட்பொருளாகும். பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம், முன்னிரு கரங்களில் அமிர்த கலசத்தை ஏந்தியவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் தன்வந்திரி பகவான்.

வைணவக் கோயில்களில் தன்வந்திரிக்கு என்று தனி சந்நிதி இருப்பதைக் காணலாம். திருவரங்கம் ரங்கநாதர் கோயில் தன்வந்திரி சந்நிதி, வாலாஜாப்பேட்டை தன்வந்திரி கோயில், கோவை தன்வந்திரி கோயில், கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் சேர்த்தலா வட்டம் – மருதோர் வட்டம் தன்வந்திரி கோயில் ஆகிய தலங்களில் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு ஆராதனைகள் பூஜைகள் நடைபெறுகின்றன.

தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னர் இவரது ஜெயந்தி வருவதால், தீபாவளி மருந்து தயாரிக்கும் பழக்கம் தன்வந்திரி பகவான் வழிபாட்டில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

x