பிள்ளையார் பால் குடித்தார், மரத்திலிருந்து பால் வடிந்தது, முருகனுக்கு வியர்த்தது என்பது போன்ற பல பரபரப்பு தகவல்கள் கடவுளரை அடிப்படையாக வைத்து அவ்வபோது கிளம்புவது வழக்கம்தான். சிதம்பரம் நடராஜரின் பாதம் இருக்கும் இடம் தான் புவியின் மையப் புள்ளி, அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு நேராக வரும்போது ஒருசில விநாடிகள் நின்று செல்கின்றன என்பதும்கூட அந்த ரகத்திலான செய்திகள்தான். தற்போதும் அதேபோன்ற ஒரு பரபரப்பான செய்தி, இணையத்தில் வைரலாக உலாவருகிறது. இம்முறை பரபரப்புக்கு உள்ளாகியிருப்பது தமிழ்க் கடவுளான முருகப்பெருமான்.
வரைபடத்தில் முருகனின் முக்கிய திருத்தலங்களை ஒன்றாக இணைத்தால் ‘ஓம்’ எனும் வடிவம் பெறுகிறது என்பதுதான், தற்போதைய ஆன்மீக வைரல் செய்தி. அந்தச் செய்தி பலராலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
‘‘தமிழ்க் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை, கூகுள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தால் அது ஓம் வடிவில் தெரிகிறது’’ என்று ஒரு பக்தர் பகிர்ந்திருக்கிறார். அத்துடன் தனது கருத்தையும் இணைத்து அவர் எழுதியிருக்கிறார். ‘‘பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதிநவீன தொழில் நுட்பமும் இல்லாமல், கட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை ஆதித் தமிழன் எப்படி நிகழ்த்திக் காட்டினான் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது" என்று அந்த பக்தரின் பதிவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஓம் வடிவிலான இணைப்பைத் தரும் அந்தத் திருத்தலங்களின் பெயர்கள்..
01 திருப்பரங்குன்றம்
02 திருச்செந்தூர்
03 பழநி
04 சுவாமிமலை
05 திருத்தணி
06 சோலைமலை (பழமுதிர்ச்சோலை)
07 மருதமலை
08 வடபழனி (சென்னை)
09 வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி
10 நாகப்பட்டினம் சிக்கல்
11 திருச்சி வயலூர்
12 ஈரோடு சென்னிமலை
13 கோபி பச்சமலை
14 கரூர் வெண்ணெய்மலை
15 கர்நாடகா குக்கே சுப்ரமண்யா
16 கர்நாடகா கட்டி சுப்ரமண்யா
17 கேரளா ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி
இந்தப் 17 திருத்தலங்களையும் கூகுள் மேப்பில் ஒன்றிணைத்து ஓம் என்று வருவதைப் படமாகவும் காண்பித்துள்ளனர். இதை முருக பக்தர்களும், ஆன்மிக அன்பர்களும் தங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.