‘ஒருவரது பக்திப் பாதை எப்படி இருக்க வேண்டும் என்றால், அது தேனைத் தேடும் வண்டின் பாதையைப்போல் இருக்க வேண்டும்’ என்று கூறப்படுகிறது. இதற்கு ஒரு விளக்கம் அளிப்பது அவசியமாகிறது.
நெல்லுக்குள் அரிசி இருக்கிறது. அரிசி உமியாலும் தவிட்டாலும் மூடப்பட்டிருக்கிறது. இதில் தவிடு என்பது சூட்சுமம், உமி என்பது ஸ்தூலம், அரிசி உள்ளே இருக்கிறது.
ஜீவாத்மா இந்த உடலுக்குள் இருக்கிறது. கண்களுக்கு புலப்படுவதால் உடல் ஸ்தூல சரீரம் என்று கொள்ளப்படுகிறது. ஆத்மா ஸ்தூல சரீரத்துக்குள் இருக்கிறது.
இந்த உடலை விட்டு ஆத்மா பிரியும்போது, சூட்சும சரீரத்தைப் பற்றிக் கொள்ளும். சூட்சும சரீரம் கண்களுக்குப் புலப்படாது. அப்படியே அது மோட்சத்தை அடையும். இதற்கு சுக்ல கதி என்று பெயர். சூட்சும சரீரத்தைப் பற்றிக்கொண்டு போகும் ஜீவாத்மா சிறந்த ஞானவானாக விளங்கும். அதனால், ஸ்தூல சரீரம் – உமி, சூட்சும சரீரம் – தவிடு, ஜீவாத்மா – அரிசி.
இந்த ஆத்மாவுக்கு அன்னம் கிடைக்கிறது. அதை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறது ஜீவாத்மா. அவனை சரணாகதி செய்கிறது. ஒவ்வொரு ஆத்மாவும் இறைவனிடம் சரண் புகுந்தால், நெல்மணி போல் பிரகாசிக்கும் என்று கோதை நாச்சியார் தெரிவிக்கிறார்.
மேலும் நாமும் குருநாதரின் வழிகாட்டுதலால், இறைவனுக்கு அன்னமாகிறோம். இந்த அன்னமாக நாம் மாறுவதற்கு, நமது உள்ளம் தூய்மைபெற வேண்டும். எப்போது நம் மனம் தூய்மைபெறும் என்றால், அது நாம் தேடிச் செல்லும் பாதையில் அடங்கியுள்ளது. எப்படி ஒரு வண்டானது மலருக்கு மலர் தாவி தனக்குத் தேவையான தேனை சேகரிக்கிறதோ, நாமும் அதுபோல சத்விஷயங்களுக்காக ஒவ்வொரு இடமாகத் தேடிச்செல்ல வேண்டும். அன்னப்பறவை போல் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு, அல்லதை நீக்குவோம். ஒவ்வொருவரிடமும் உள்ள நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வோம். நல்வழியில் மனதை செலுத்துவோம்.
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.