தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய போர்ட்டர் டவுன்ஹாலில் அவரது திருவுருவச்சிலை பிப்ரவரி 3-ம் தேதியன்று திறக்கப்படுகிறது.
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பாரத பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டி பேசிய பின்னர் 1897-ம் ஆண்டு தாயகம் திரும்பினார் . பின்னர் ராமேஸ்வரம், மதுரை வழியாக கும்பகோணத்திற்கு பிப்ரவரி 3 -ம் தேதி ரயில் மூலம் வந்த விவேகானந்தர், மூன்று நாட்கள் கும்பகோணத்தில் தங்கினார். அப்போது அவர் வேதாந்த பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவை ஆற்றினார்.
“எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், குறிக்கோளை அடையும் வரை தொடர்ந்து செயல்படுத்துங்கள்" என்ற அவரது வீர முழக்கம் கும்பகோணத்தில் ஆற்றிய உரையில் தான் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விவேகானந்தர் விஜயம் செய்து இளைஞர்களிடையே தன்னம்பிக்கை ,தேசபக்தி மற்றும் நாட்டு விடுதலை குறித்து எழச்சிமிக்க உரைகளை நிகழ்த்தினார்.
இதனை நினைவுகூரும் விதமாக சுவாமி விவேகானந்தர் வீர உரையாற்றிய போர்ட்டர் டவுன்ஹாலில் அவரது திருவுருவ சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூமி பூஜை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மஹராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ், போர்ட்டர் டவுன் ஹால் தலைவரும் கும்பகோணம் எம்எல்ஏ-வுமான க.அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் அண்மையில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து சிலையும், சிலைக்கான பீடம் அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, விவேகானந்தர் கும்பகோணம் வந்த நாளான வரும் பிப்ரவரி 3- ம் தேதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு போர்டர் டவுன் ஹாலின் முகப்புப் பகுதியில் அழகிய மண்டபத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளதாக க. அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.
தஞ்சாவூர் ராமகிருஷ்ணா மடத்துடன் இணைந்து ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் நிறுவனர் வெங்கட்ராமன், நகர மேல்நிலைப் பள்ளி செயலாளர் வேலப்பன், சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலாளர் ரமேஷ், தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன், விழா குழுவைச் சேர்ந்த, கண்ணன், சத்தியநாராயணன், வேதம் முரளி திருபுவனம்பாஸ்கர், பாஸ்கரராஜபுரம் ராமநாதன் உள்ளிட்டோர் சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.