மார்கழி மாதத்தில் குருவாயூரப்பனுக்கு அவல் படைப்பது என்று ஒரு வழக்கம் உண்டு. மார்கழி மாதத்தின் முதல் புதன்கிழமை குசேலர் தினமாகக் கொண்டாடப்படும் என்று பெரியோர் கூறுவர்.
குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலில் இவ்வழக்கம் உள்ளது. இந்த தினத்தில் குசேலருக்கு கிருஷ்ணர் அனுக்கிரகம் செய்தார். அன்று இலையில் அவர், அச்சு வெல்லத்தைக் கொண்டுவந்து குருவாயூரப்பனுக்கு படைப்பது வழக்கம்.
சாந்திபனி முனிவரிடம் கிருஷ்ணர் குருகுலவாசம் இருந்தார். அவருடன் குசேலர் என்ற அந்தணரும் கல்வி பயின்றார். இதன் பிறகு இருவரும் வேறு வேறு இடத்தில் இருந்தாலும், ஒருவரை ஒருவர் நினைக்காமல் இல்லை. (கிருஷ்ணர் துவாரகாபுரி மன்னர் ஆனார். குசேலர் கோகுலத்திலேயே இருந்தார்).
மனைவி சுசீலா, 27 குழந்தைகளுடன் மிகுந்த ஏழ்மையுடன் வாழ்ந்து வந்த குசேலர், அவர் இருக்கும் இடத்தில் பலர் கிருஷ்ணரின் வள்ளல் தன்மை பற்றிப் பேசிக் கொண்டதைக் கேட்கிறார். பொன்னும் பொருளும் கேட்காவிட்டாலும், துவாரகை சென்று நண்பரை சந்திக்க வேண்டும் என்று குசேலர் நினைத்து, ஒரு கிழிந்த துணியில் அவலை கட்டிக் கொண்டு, புறப்பட்டார்.
நுழைவாயிலில் குசேலர் இருப்பதை அறிந்த கிருஷ்ணர், வாசலுக்கே வந்து குசேலரை வரவேற்றார். சிம்மாசனத்தில் குசேலரை அமரவைத்து, கால்களை மஞ்சள் நீரால் கழுவினார், பல்சுவை உணவு கொடுத்தார். இப்படி உபசரிக்கும் நண்பருக்கு, எப்படி இந்த அவலைக் கொடுப்பது என்று தயங்கினார் குசேலர்.
குசேலர் மறைத்து வைத்திருந்த (அவல் இருந்த) கந்தல் துணி மூட்டையைப் பார்த்த கிருஷ்ணர், உடனே அதை அவரிடம் இருந்து பிடுங்கி, ஆனந்தப்பட்டார். ஒரு பிடி அவலை வாயில் போட்டுக்கொண்டு ‘‘அட்சய’’ என்றார்.
அடுத்த விநாடி குசேலர் வீடு அனைத்து வசதிகளுடன் கூடிய மாளிகை ஆனது.
கிருஷ்ணரின் அனுக்கிரகத்தால் அனைத்தும் நடக்கும்.
குசேலர் சரித்திரம் படித்தால் செல்வம் பெருகும்.