பால் மணத்த தைப்பூசத் திருவிழா!


அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகக் கொண்டாடப்படும் பழநியில் நடைபெறும் விழாக்களில் முதன்மையானது தைப்பூசத் திருவிழா. இந்த விழாவுக்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று, பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைத்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. வழக்கமாக திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த வருடம் கோயில் பணியாளர்கள் மட்டுமே பங்கேற்றார்கள்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி நடைபெற்றது. மாலை 5 மணியளவில் சிறிய அளவிலான தேரில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து தேரோட்டமும் நடந்தது. கரோனா பெருந்தொற்று காரணமாக, தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படாததால் அவர்களே பல்லாயிரக்கணக்கில் பழநியில் குவிந்துவிட்டார்கள். தேரோட்டம் நடந்த இடத்துக்குப் போக முடியாவிட்டாலும், கிரி வலப்பாதையிலும் மலையடிவாரத்திலும் பக்தர்கள் ஆடிப்பாடியும், அரோகரா கோஷமிட்டும் முருகனை வழிபாடு செய்தார்கள். அடிவாரத்தில் இருந்தபடியே சூடம் ஏற்றியும், தீபம் ஏற்றியும் வழிபட்டுச் சென்றனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத் திருநாளையொட்டி, சுப்பிரமணியசுவாமி தெய்வானை, முத்துக்குமாரசுவாமி தெய்வானை என 2 முருகன், 2 தெய்வானை புறப்பாடாகி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இன்றோ கரோனா கட்டுப்பாடு காரணமாக முருகப் பெருமான் தெய்வானையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி கோயில் திருவாசி மண்டபத்தில் 3 முறை சுற்றி வந்து அருள்பாலித்தார். பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே, கோயில் வாசலிலேயே அவர்கள் முருகனை வழிபட்டுச் சென்றார்கள்.

மீனாட்சி அம்மன்

வழக்கமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மீனாட்சியம்மன் கோயில் வளாகத்திலேயே, உள் திருவிழாவாக தெப்பத் திருவிழா நடைபெற்றது. வெள்ளி அவுதா தொட்டிலில் மீனாட்சி அம்மனும், வெள்ளி சிம்மாசனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பின்னர் ஆடி வீதியில் சுவாமி - அம்மன் வலம் வந்தனர்.

x