வடலூரில் ஜோதி தரிசனம்


ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு, இன்று ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. முதல் ஜோதி தரிசனம் இன்று காலை 6 மணிக்கு, 7 திரைகள் விலக்கி காட்டப்பட்டது.

வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளார். இவர், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வசித்து வந்தாலும் தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் வடலூருக்கு வந்து, சத்திய ஞான சபையை நிறுவினார். அதோடு தருமச்சாலை ஒன்றையும் அங்கு அமைத்தார். அந்த தருமச்சாலை இன்றளவும் பசியோடு அங்கு வரும் அத்தனை பேருக்கும் உணவளித்து வருகிறது.

சத்திய ஞான சபையில் இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும் தைப்பூச நாளில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு காண்பிக்கப்படுகிறது. அதன்படி 151-வது ஆண்டு தைப்பூசத் திருவிழா, நேற்று(ஜன.17) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சத்திய ஞான சபை

நேற்று காலை 7.30 மணிக்கு முதலில், தருமச்சாலையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வள்ளலார் பிறந்த, வாழ்ந்த, சித்திபெற்ற ஊர்களான மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களிலும் கொடி ஏற்றப்பட்டது. காலை 10 மணிக்கு சத்திய ஞான சபையிலும் கொடியேற்றம் நடந்தது.

தைப்பூச நாளான இன்று (ஜன.18) காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கும், பகல் 1 மணிக்கும் மாலை 7 மணிக்கும் , இரவு 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறும். மீண்டும், நாளை(ஜன.19) காலை 5.30 மணிக்கு 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

வழக்கமாக தைப்பூச நாளில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வள்ளலார் பக்தர்கள் பல லட்சம் பேர் ஜோதி தரிசனம் காண, வடலூர் வந்து செல்வார்கள். அத்தனை பக்தர்களுக்கும் தருமச்சாலையிலும், பக்தர்களாலும் அன்னதானம் வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், வழிபாட்டுத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதனால், ஜோதி தரிசன திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். பக்தர்களுக்கு அன்னதானம் செய்யவும் அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதனால், இன்றைய தைப்பூசத் திருவிழா பக்தர்கள் இன்றி வெறுமையாகக் காணப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக அவர்கள் வீட்டில் இருந்தவாறே ஜோதி தரிசனத்தைக் கண்டுகளிக்க, யூடியூப் மூலமாக ஜோதி தரிசனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

x