தமிழகத்தில் 5 நாட்களுக்குத் தடை


திருச்செந்தூர் கடற்கரையில்...

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு வகைகளில் தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், ஆன்மிகம், பாரம்பரியம் என்றுவரும்போது மக்களின் உணர்வுகளில் கைவைப்பதாய் ஆகிவிடுகின்றன இந்த நடவடிக்கைகள். இருப்பினும் வேறு வழியின்றி மக்கள் நலன் கருதி அரசு நடவடிக்கைகளை முடுக்கிக் கொண்டுதான் இருக்கிறது.

கூட்டம் கூடும் இடங்களில்தான் இந்தக் கரோனா பரவல் அதிகம் இருக்கிறது என்பதால், மக்கள் கூடும் இடங்களில் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை வார இறுதி நாட்களில் மூட உத்தரவிட்டது அரசு. அப்படி இருந்தும் சிறுதெய்வ வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்த இயலாமல், உள்ளூர் நிர்வாகங்கள் தவித்துக் கொண்டுதான் உள்ளன.

இந்நிலையில் ஜன.18, செவ்வாய்க்கிழமை தைப்பூசம் வருவதால், தமிழகமெங்கும் உள்ள முருகன் கோயில்களில் இதை முன்னிட்டு பக்தர்கள் கூடுவது வழக்கம். அதற்கான நிகழ்வுகள் நேற்று முன்தினத்திலிருந்தே(ஜன.12) முருகன் கோயில்களில் தொடங்கிவிட்டன. இதைத் தொடர்ந்து, இந்தக் கரோனா கட்டுப்பாட்டு காலத்தில் வார இறுதிநாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு போக கூடுதலாக அடுத்துவரும் திங்கள், செவ்வாய் நாட்களிலும் சேர்த்து மொத்தமாக 5 நாட்களுக்கு அரசு வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.

அதனால் வேறுவழியின்றி, முருகனைப் பார்த்தே தீர்வது என்று நேற்று பழநியிலும், திருச்செந்தூரிலும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.

பழநியில் தைப்பூசத் திருவிழாவுக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள், கோயில் திறக்கப்பட்டிருக்கும் நாட்களை திட்டமிட்டு, நேற்றே பழநி வந்து குவிந்ததால், மலைக்கோயில் அடிவாரப் பகுதி மட்டுமின்றி, பழநி நகரமே பக்தர்கள் தலையாகவே தென்பட்டது. இன்றுமுதல் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடைவிதிப்பால், பழநி வரும் பக்தர்கள் மலைக்கோயிலின் அடிவாரத்திலேயே நின்று தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலுக்கு முன்கூட்டியே கடந்த ஒரு வாரமாகவே, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அத்துடன் சபரிமலை செல்லும் பக்தர்களின் கூட்டமும் சேர்ந்துகொண்டது. பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்த பக்தர்கள், கடந்த 3 நாட்களாக திருச்செந்தூரில் குவிந்ததால், கடலிலும், நாழிக்கிணறிலும் புனித நீராட கடுமையான கூட்ட நெரிசல் நிலவியது.

இதே நிலைதான் திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருத்தணி, வடபழனி, நடுபழனி உள்ளிட்ட முருகன் தலங்களில் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் வேறு வழியின்றி கோயில்களின் வாயில்களிலேயே நின்று வழிபட்டுத் திரும்புகிறார்கள்.

x